பக்கம் எண் :

64காளித்தம்பியின் கதை

சொன்னார். நானே இந்தத் தொழிலை விட்டுவிட நினைக்கிறேன். இது உனக்கு
எதற்கு? நீ பேசாமல் இதை விட்டுவிடு. இதைக் காட்டிலும் அதிக சம்பளம்
உள்ள வேலையை நான் பார்த்துத் தருகிறேன். என்னை நம்பு” என்றான்
காளி.


     பழனி பம்பு அடிப்பதை விட்டுவிட்டான். எந்த வேலையும் செய்யாமல்
செல்வத்தில் மிகுந்தவன் பழனி. துள்ளித் திரியும் புள்ளி மானைக் கட்டை
வண்டியில் பூட்டி இழு என்றால் இழுக்குமா? பழனி அந்த மானைப் போல
வாழ்ந்தவன். இன்று மாடுபோல உழைக்க முன் வந்து விட்டான். ஆனால்,
உடல் நிலை இடம் தரவில்லையே!


     இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் காளி, மிக
மகிழ்ச்சியோடு “பழனி பழனி” என்று அழைத்துக் கொண்டே ஓடி வந்தான்.
“என்ன காளி? ஏன் இப்படி ஓடி வருகிறாய்” என்று கேட்டான் பழனி.


     காளி ஓடிவந்த களைப்பு நீங்கச் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்
கொண்டான். பிறகு “பழனி உனக்கு ஒரு நல்ல வேலை பார்த்திருக்கிறேன்.
ஆனால், ஒரு சந்தேகம் உனக்கு சைக்கிள் விடத் தெரியுமா?” என்று காளி
கேட்டான்.


     “சைக்கிள் என்ன, காரே.....” என்று ஆரம்பித்த பழனி ‘சட’டென்று
வாயை மூடிக்கொண்டான். பழனிக்குக் கார் ஓட்டவும் தெரியுந்தான். அதைச்
சொன்னால் அவன் பணக்காரனின் மகன் என்பதைக் காளி
தெரிந்துகொள்வானே? அதனால் சொல்லவில்லை. “காளி எனக்கு நன்றாகச்
சைக்கிள் விடத் தெரியுமே?” என்று சொன்னான்.


     “அப்பாடா! இப்போதுதான் எனக்குத் திருப்தி. நல்ல வேலையைப்
பார்த்த பிறகு சைக்கிள்விடத் தெரியாது என்று நீ சொல்லிவிட்டால் என்ன
செய்வது என்று பயந்தேன். நான் பார்த்திருக்கும் வேலை செய்ய
சைக்கிள்விடத் தெரிந்திருக்க வேண்டும்.”


     “அது என்ன வேலை?” - பழனி ஆவலோடு கேட்டான்.