பக்கம் எண் :

சிறுவர் நாவல்65

     “கடைகளுக்குப் பத்திரிகை விநியோகிக்கும்வேலை. சாமி ஏஜென்ஸியின்
சொந்தக்காரரை எனக்கு தெரியும். முன்பே அவர் கடைக்குப்
பத்திரிகைபோடும் வேலைக்கு வருகிறாயா என்று என்னைக் கேட்டிருந்தார்.
எனக்குச் சைக்கிள்விடத் தெரியாது. அதனால் அந்த வேலைக்குப்
போகவில்லை. இன்று அவரை வழியில் பார்த்தேன். உன் நினைவு வந்தது.
அவரிடம் உனக்கு ஏதாவது வேலை தருமாறு கேட்டேன். அவர்
‘பத்திரிகைபோட ஆள் தேவை. அழைத்து வா’ என்றார். உனக்கு
சைக்கிள்விடத் தெரியும் என்று ஏதோ குருட்டு நம்பிக்கை. அதனால்தான்
மகிழ்ச்சியுடன் ஓடிவந்தேன்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?”


     “எவ்வளவு?”


     “மாதம் முப்பது ரூபாய். தினமும் மாலை ஐந்தரை மணிக்கு அங்கே
போகவேண்டும். பத்திரிகை ஆறு மணிக்குள் வருமாம். அதை உன்
பொறுப்பில் விடும் பகுதிகளில் உள்ள கடைகளில் போட வேண்டும். இரவு
எட்டு எட்டரைக்குள் உன் வேலை முடிந்துவிடும். சுமார் இரண்டு மணி நேரம்
சைக்கிள் சவாரி செய்ய வேண்டும். உன்னால் முடியுமா?”


     “ஓ முடியுமே, சைக்கிள் விடுவதில் எனக்கு நல்ல திறமை உண்டு. இந்த
வேலை கிடைத்தால் ரொம்ப நல்லது. பள்ளியில் படித்துக் கொண்டே இதைச்
செய்யலாம். ஏன் காளி சைக்கிள் அவர்கள் தருவார்களா?” என்று கேட்டான்
பழனி.


    “அது ஒன்றுதான் சிரமம். சைக்கிள் அவர்கள் தரமாட்டார்கள். நாம்தான்
வாங்கிக்கொள்ள வேண்டும்” என்றான் காளி.


     பழனி கவலையில் ஆழ்ந்தான். இப்போது தான் கடன் வாங்காமல்
ஓரளவு சாப்பிட முடிந்தது. இந்த நிலையில் சைக்கிள் வாங்கப் பணத்துக்கு
எங்கே போவான்.


     “வேலை கிடைத்து என்ன பலன்? என்னால் சைக்கிள் வாங்க
முடியாதே!”