பக்கம் எண் :

72காளித்தம்பியின் கதை

அவ்வளவு பணத்தைக் கொட்டியிருக்கிறது. அதை எடுத்துக் கொள்ள
வேண்டாமா?


     “சீச்சி என்ன நினைப்பு” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்,
பழனி. “யாரோ ஒருவர் பணத்தை நாம் எடுத்துக் கொள்வதா? கூடாது.
இந்தப் பணத்திற்கு உரியவர்களைக் கண்டு பிடித்து அவர்களிடம் கொடுத்து
விடவேண்டும்” என்று முடிவு செய்து கொண்டான்.


     “காளி இது யார் பணமோ? இவ்வளவு பணத்தை இழந்தவர் இந்நேரம்
எவ்வளவு துன்பப்பட்டுக் கொண்டிருப்பார்? அவரைக் கண்டுபிடித்து இதை
அவரிடம் கொடுத்து விடவேண்டும். அவரை எப்படிக் கண்டுபிடிப்பது?”


     இப்படிப் பழனி சொன்னதும் காளியின் முகம் மலர்ந்தது. “நீ
சொன்னபடி செய்வதுதான் நல்லது. பணத்தின் சொந்தக்காரரைத் தேடி நாம்
ஏன் வீணாக அலையவேண்டும்? இதை இப்போதே போலீசில் ஒப்படைத்து
விடுவோம். போலீசார் சொந்தக்காரர்களைக் கண்டு பிடித்துக் கொடுத்து
விடுவார்கள்” என்றான் காளி.


     பழனிக்கும் அதுவே சரியென்று தோன்றியது. உடனே காளியும்
பழனியும் தோல்பையுடன் புறப்பட்டார்கள். சூளைக்கு அருகில் இருந்த
வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றனர். பழனியும் காளியும் அதற்கு
முன்பு போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றதில்லை. அதனால் பயந்து பயந்து
உள்ளே சென்றனர்.


     ஸ்டேஷனின் முன்புறத்தில் இருந்த ஒரு போலீஸ்காரர் பழனியையும்
காளியையும் பார்த்தார். “உங்களுக்கு என்ன வேண்டும்? இங்கே எதற்காக
வந்தீர்கள்?” என்று கேட்டார்.


     பழனி “நாங்கள் இன்ஸ்பெக்டரைப் பார்க்க வேண்டும்” என்று
சொன்னான்.


     போலீஸ்காரர் “என்ன விஷயமாக அவரைப் பார்க்க வேண்டும்?”
என்று கேட்டார்.