காளி “இதோ இந்தத் தோல்பை இவனுக்கு வழியில் கிடைத்தது. இதை ஒப்படைக்க வந்திருக்கிறோம்” என்று பழனியிடமிருந்த தோல்பையைக் காட்டினான். “தோல்பையா? உம்...அதற்குள் என்ன இருக்கிறது?” என்று போலீஸ்காரர் கேட்டார். பழனி “பணம்! அவ்வளவும் ரூபாய் நோட்டுக்கள்! இந்தப் பை நிறைய இருக்கின்றன” என்று சொன்னான். போலீஸ்காரர் “என்னது? இந்தப் பை நிறையப் பணமா?” என்று கேட்டார். பழனியும் காளியும் பூமாடுகள் போலத் தலையை அசைத்து, “ஆமாம்” என்றனர். போலீஸ்காரர் தன் விசாரணையை அத்தோடு நிறுத்திக் கொண்டார். உடனே அவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். இன்ஸ்பெக்டரிடம் இருவரும் தோல்பையைக் கொடுத்து நடந்ததைக் கூறினர். இன்ஸ்பெக்டர் பையைத் திறந்து பார்த்தார். அந்தப் பை எந்த இடத்தில் கிடைத்தது என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். பிறகு அவர்கள் இருவரையும் வெளியே கொஞ்ச நேரம் உட்காரச் சொன்னார். காளியும் பழனியும் இன்ஸ்பெக்டர் அறையை விட்டு வெளியே சென்றனர். இன்ஸ்பெக்டர் பணம் நிறைந்த தோல்பை கிடைத்திருப்பதை சில முக்கிய போலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தெரிவித்தார். பெரிய மேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சொன்னபோது, அங்குப் பணம் நிறைந்த தோல் பை ஒன்று காணோம் என்று ஒரு மரத்தொட்டி சொந்தக்காரரான முஸ்லீம் ஒருவர் புகார் செய்திருப்பதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவரை அழைத்து வருமாறு கூறினார், வேப்பேரி இன்ஸ்பெக்டர். சற்று நேரத்திற்கெல்லாம் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு ஜீப் வந்தது. அதிலிருந்து பெரிய மெட்டு இன்ஸ்பெக்டரும் ஒரு முஸ்லீமும் இறங்கி வந்தனர். வேப்பேரி இன்ஸ்பெக்டர் அவரை வரவேற்றார். காளி பழனி |