பாத்தியா பழனி! காலையிலேயே வந்த பத்திரிகை எல்லாவற்றிலும் உங்கள் செய்தி வந்திருக்கிறது.” என்று கடை முதலாளி சொன்னார். “எங்க செய்தியா? எதுங்க, இந்தப் பணப்பையைப் போலீசிலே கொடுத்த செய்தியா?” என்று வியப்போடு கேட்டான் பழனி. “ஆமாம் பழனி. இந்தச் செய்தியை போஸ்டரிலேயே போட்டிருக்கிறாங்களே” என்றார் முதலாளி. பழனி, கடைக்கு முன்னே வரிசையாகத் தொங்க விட்டிருந்த போஸ்டர்களைப் பார்த்தான். “ஐம்பதாயிரம் ரூபாய் கண்டெடுத்த சிறுவன்.” “ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பையைப் போலீசில் கொடுத்தான் சிறுவனின் நேர்மை.” பணப்பை கண்டெடுத்த சிறுவனுக்குப் பரிசு.” போஸ்டர்களைப் படித்த பழனி கடையிலிருந்த செய்தித் தாள்களை எடுத்துப் படித்தான். பழனி பணப்பையைக் கண்டது, காளியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று திருப்பிக்கொடுத்தது, பணத்தின் உரிமையாளர் ரூபாய் இருநூறு பரிசு கொடுத்தது ஆகிய விவரங்களை ஒவ்வொரு செய்தித்தாளும் தனக்கே உரிய பாணியில் வெளியிட்டிருந்தது. பழனி செய்தித்தாள்களைக் கடையில் வைத்து விட்டான். “இன்று மாலை பரிசுப் பணத்தில் காளிக்கு ஒரு விருந்து வைக்க வேண்டும்” என்று நினைத்தான் பழனி. உடனே கடை முதலாளியிடம் “காளி வந்தால் என்னைப் பார்க்கச் சொல்லுங்கள். நான் ஓட்டல் அருகே இருக்கிறேன்” என்று சொன்னான். “நம்ம பக்கத்து ஓட்டல்தானே, காளி வந்ததும் சொல்கிறேன்” என்றார் கடை முதலாளி. |