அழகன் “சரிங்க” என்றான். சுந்தரேசர் சென்றார். அதன்பிறகு ஒருநாள் பழனியிடமிருந்து அழகனுக்குக் கடிதம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு சுந்தரேசரிடம் ஓடினான். அப்போது அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அழகனுக்குக் கோபம். பழனி தன் முகவரியைக் கொடுத்திருந்தால் இவனும் பதில் போட்டிருக்கலாமல்லவா? அந்த ஒரு கடிதத்திற்குப் பின் வேறு கடிதமே வர வில்லை அது வேறு ஏமாற்றம். அழகன் இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். இத்தனை நினைவுகளும் தோன்றித் தோன்றி மறையும் போது பத்திரிகையிலிருப்பது அவன் மனத்தில் பதியுமா? அழகன் பத்திரிகையை மூடி ஒரு புறம் வீசி எறிந்தான். அவனால் வீட்டிலிருக்க முடியவில்லை. பள்ளிக்கூடத்து விளையாட்டு மைதானத்தில் மாலையில் மாணவர்கள் வந்து விளையாடுவது வழக்கம். விடுமுறையிலும் இந்தவழக்கம் நிற்பதில்லை. அழகன் அங்காவது போகலாம் என்று புறப்பட்டான். விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். ஐஸ் விற்கும் ஒருவன் அங்கு வந்து சேர்ந்தான். விளையாடிக் கொண்டிருந்த நாகமாணிக்கம் உடனே விளையாட்டை நிறுத்தினான். “போதும் விளையாடினது. வாருங்கள், ஐஸ் சாப்பிடுவோம். இன்று எல்லோருக்கும் நான் ஐஸ் வாங்கித் தருகிறேன்” என்றான். அவன் பையில் ஐம்பது ரூபாய் நோட்டு இருந்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் நாகனைச் சூழ்ந்து கொண்டனர். “ஏய் ஐஸ்! ஆளுக்கு ஒன்று கொடு! ஐம்பது ரூபாய்க்குச் சில்லறை இருக்கா” என்று கேட்டான். |