வந்தது? பழனி திருச்சியிலிருந்து சென்னைக்குப் போயிருந்தால்...?” அழகன் சிந்தித்தான். ஒன்றும் தோன்றவில்லை. எதற்கும் சுந்தரேசரிடம் சொல்லலாம் என்று நினைத்து வாசக சாலையிலிருந்து புறப்பட்டான். சுந்தரேசர் வீட்டுக்கு மாலையில் செய்தித்தாள் வரும் என்பது அவனுக்குத் தெரியும் தெரிந்தும் கடையில் ஒரு செய்தித்தாள் வாங்கிக் கொண்டு சுந்தரேசர் வீட்டுக்கு விரைந்து சென்றான். சுந்தரேசர் அப்போதுதான் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். அழகனைப் பார்த்ததும் நின்றார். அழகன் சுந்தரேசருக்கு வணக்கம் தெரிவித்தான். “வா அழகா” என்று வரவேற்றார் சுந்தரேசர். அழகன் எதையோ சொல்லத் துடிக்கிறான் என்பதை அவன் தோற்றத்திலிருந்தே தெரிந்து கொண்டார். “அழகா, ஏதாவது பேசவேண்டுமா?” என்று கேட்டார். ‘ஆமாம்’ என்று பதிலளித்தான் அழகன் உடனே சுந்தரேசர் அழகனை அழைத்துக்கொண்டு வரவேற்பு அறைக்குச் சென்றார். இருவரும் அந்த அறையில் உட்கார்ந்தார்கள். “அழகா ஏதோ சொல்ல வேண்டுமென்று சொன்னாயே” என்று நினைவுபடுத்தினார். அழகன் மடித்து வைத்திருந்த செய்தித்தாளை அவரிடம் கொடுத்தான். “இதோ இந்தச் செய்தியைப் பாருங்கள்” என்று சொல்லி பழனி பணப்பையைப் போலீசில் கொடுத்த செய்தியைச் சுட்டிக்காட்டினான். சுந்தரேசர் செய்தித்தாளை வாங்கினார். அழகன் காட்டிய செய்தியைப் படித்தார். செய்தியில் பழனி என்ற பெயரைப் படித்ததும் பரபரப்படைந்தார். மடமடவென்று செய்தியைப் படித்து முடித்தார். “அழகா இதில் வரும் பழனி....” என்று இழுத்தார். “நம் பழனியாக இருக்குமோ என்று எனக்குச் சந்தேகம் அதனால்தாங்க நான் உங்களிடம் சொல்லலாம் என்று வந்தேன்” என்றான் அழகன். |