பக்கம் எண் :

சிறுவர் நாவல்83

     சுந்தரேசர் ஹாலில் உட்கார்ந்திருந்தார். அவர் கையில் அன்றைய
செய்தித்தாள் இருந்தது. அவர் சோர்ந்திருந்தார்.


     அழகன் வந்ததை அவர் கவனிக்கவில்லை . அழகன் “வணக்கங்க”
என்று சொன்னான். சுந்தரேசர் நிமிர்ந்து பார்த்தார். “அழகனா, உட்கார்”
என்றார்.


     அழகன் உட்கார்ந்தான். “சுந்தரேசர் இருக்கும் நிலையைப் பார்த்தால்
ஊருக்குப் புறப்படுகிறவரைப் போல் இல்லையே? ஏன்? சென்னைக்குப்
போகவில்லையா?” அழகன் அதை அவரையே கேட்டுத் தெரிந்துகொள்ள
நினைத்தான்.


     “நீங்கள் சென்னைக்குப் போகவில்லைங்களா?” என்று கேட்டான்
அழகன்.


     “இல்லை, அழகா. செய்தியில் பார்த்த பழனி யாரோ! நம் பழனி
அல்ல”  என்றார் சுந்தரேசர்.


     “உங்களுக்கு எப்படித் தெரிந்ததுங்க?” அழகன் கேட்டான்.


     சுந்தரேசர் தன் மடியிலிருந்த செய்தித்தாளை எடுத்து அழகனிடம்
கொடுத்தார். “அந்தப் பழனியின் படம் இன்றைய பத்திரிகையில்
வந்திருக்கிறது பார்” என்றார்.


     அழகன் செய்தித்தாளை வாங்கிப் பார்த்தான். முதல் பக்கத்திலேயே
ஒரு சிறுவனின் படம் இருந்தது. வெள்ளைப் பற்கள் பளிச்சிட கருத்த சிறுவன்
ஒருவனின் படம் அது. அதன் அடியில் “ஐம்பதாயிரம் ரூபாயைப் போலீசில்
கொடுத்த நாணயமுள்ள சிறுவன் பழனி இவன்தான். இவனுக்கு இதற்காக
இருநூறு ரூபாய் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது” என்று
எழுதியிருந்தது.


     அந்தச் சிறுவன் சுந்தரேசர் மகன் பழனியல்ல; வேறு யாரோ? அழகன்
ஏமாந்தான். அவன் கொண்டுவந்த கடிதத்தைக் கிழித்து எறிந்துவிட்டு
வீட்டுக்குச் சென்றான்.


     உண்மையில் பணப்பையைக் கண்டது சுந்தரேசர் மகன் பழனிதானே?
அப்படியிருக்க மற்றொருவனின் படம் எப்படிச் செய்தித்தாளில் வந்தது?