பக்கம் எண் :

84

                               8

     இருநூறு ரூபாய் பரிசு கிடைத்ததால் காளிக்கு ஒரு விருந்து வைக்கப்
பழனி விரும்பினானல்லவா? அன்று காளி வந்ததும், “மாலை, ஐந்து மணிக்கு
விருந்து அதனால் எங்கும் போகாதே” என்று சொல்லிவைத்தான் பழனி.
காளி அதற்குச் சம்மதித்தான்.


     பழனி அன்று சாமி ஏஜென்ஸியில் விடுமுறை பெற்றுக்கொண்டான்.
காளியும் பிற்பகலில், பழைய பேப்பர் வாங்கச் செல்லவில்லை. இருவரும்
அறையில் இருந்தனர். காளி படுத்துத் தூங்கினான். பழனி ஏதோ ஒரு கதை
எழுதிக் கொண்டிருந்தான். இப்போதெல்லாம் பழனி ஓய்ந்த நேரத்தில்
கதையோ பாட்டோ எழுதி வந்தான். அதை அவ்வப்போது ‘மல்லிகை’ சிறுவர்
வார இதழுக்கு அனுப்பி வந்தான். ஆனால் அதுவரை அனுப்பியவற்றின்
முடிவு தெரியவில்லை. பழனி அதனால் சலிப்படையவில்லை. விடாமுயற்சி
வெற்றியை நிச்சயம் பெற்றுத் தருமல்லவா?


     மணி நான்கு அடிக்கும் சத்தம் கேட்டது. பழனி அறையிலிருந்து,
அறையிருந்த வீட்டின் பின்னே சென்றான்.