முகம் கழுவிக்கொண்டு திரும்பி வந்தான். காளியை எழுப்பினான். “காளி மணி நாலாகிவிட்டது. போ, போய் முகம் கழுவிக் கொண்டு வா” என்றான். காளி எழுந்து வீட்டுக்குள் சென்றான். பழனி அறையில் தலைவாரிக்கொண்டிருந்தான். அப்போது “தம்பீ, தம்பீ” என்று குரல் கேட்டது. பழனி வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே தோளில் ஒரு காமிராவைத் தொங்கவிட்டுக்கொண்டு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் “தம்பீ, நான் பத்திரிகை நிருபர். பணப்பையைக் கண்டுபிடித்த பழனியைப் படம் எடுத்துச் செல்ல வந்திருக்கிறேன். இங்கேதானே பழனி இருப்பது?” என்று கேட்டார். “ஆமாம். நீங்கள் படம் எடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டான் பழனி. “என்ன செய்யப்போகிறோமோ? நாளை காலையில் எங்கள் பத்திரிகையில் அதை வெளியிடுவோம். தம்பீ நீ யார்? ஒருவேளை நீதான் பழனியோ” என்று நிருபர் கேட்டார். பழனி உடனே “என் பெயர் காளி. பழனியின் நண்பன். பழனி பின்பக்கம் போயிருக்கிறான். இதோ அழைத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வீட்டின் பின்னே ஓடினான். ஏன் தெரியுமா? பழனியின் படம் பத்திரிகையில் வெளிவந்தால் அப்பாவும் அம்மாவும் பார்க்கக் கூடுமல்லவா? அது மட்டுமா, மதுரையிலிருக்கும் அவனுடைய நண்பர்கள் சுந்தரேசரின் நண்பர்கள் முதலிய அவ்வளவு பேரும் பழனி இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்வார்களே! பழனி அதை விரும்பவில்லை. யாருக்கும் தெரியாமல் சென்னையில் வசிக்க வேண்டும் என்று விரும்பினான். அதை நிருபரிடம் சொல்ல முடியுமா? சொன்னால் நிருபர் அதையும் ஒரு செய்தியாகச் செய்தித்தாளில் வெளியிட்டாலும் வெளியிட்டு விடுவார் பின் என்ன செய்வது? ‘ஆள் மாறாட்டம் செய்தால் என்ன |