என்று ஒரு எண்ணம் தோன்றியது. அதனால்தான் “நான் காளி” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றான். முகம் கழுவிக்கொண்டிருந்த காளியிடம் நிருபர் வந்திருப்பதைக் கூறினான் பழனி. “காளி என் படம் பத்திரிகையில் வருவதை நான் விரும்பவில்லை. அதனால் ‘பழனி உள்ளே இருக்கிறான். அழைத்து வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்தேன் நீ தயவு செய்து பழனியாக நடி” என்று கேட்டுக்கொண்டான். காளி சம்மதித்தான். இருவரும் நிருபரிடம் வந்தனர். நிருபர் காளியை நிற்க வைத்து ஒரு படம் பிடித்துக் கொண்டு சென்றார். அந்தப் படந்தான் மறுநாள் செய்தித்தாளில் வந்தது. அந்தப் படத்தைப் பார்த்துதான் சுந்தரேசர் சென்னைப் பயணத்தை நிறுத்தினார். அந்தப் படத்தைப் பார்த்துதான் அழகனும் ஏமாந்தான். பழனி புத்திசாலித்தனமாக அப்படி ஆள் மாறாட்டம் செய்யாவிட்டால் என்ன நடந்திருக்கும்? சுந்தரேசர், தன் மகன் நெரிசலான சுகாதாரக் குறைவான இடத்தில் காற்றோட்டம் இல்லாத சின்ன அறையில் சிரமப்படுவதையும், பேப்பர் போடும் வேலையால் மெலிந்து வருவதையும் கண்டு சகித்திருப்பாரா? நல்ல வேளை! பழனியின் இலட்சியம் தப்பியது. நிருபர் புகைப்படம் எடுத்துச் சென்ற பின் பழனியும் காளியும் ஒரு ஓட்டலுக்குப் போய் நன்றாகச் சாப்பிட்டனர். அன்றிரவு பழனி தனக்குப் பரிசாகக் கிடைத்த பணத்தில் நூறு ரூபாயை காளியிடம் கொடுத்து “காளி இது நீ சைக்கிளுக்காகக் கொடுத்த பணம்! பெற்றுக்கொள். உன் உதவிக்கு மிக்க நன்றி” என்று சொன்னான். காளி உடனே பெற்றுக்கொள்ளவில்லை. “இந்தப் பணத்துக்கு இப்போது என்ன அவசரம்? நீ பள்ளியில் சேரவேண்டும். அதற்குத் தேவையாக இருக்கலாமல்லவா?” என்றான். |