“தேவையானால் உன்னிடம் வாங்கிக்கொள்கிறேன். அப்புறம் கேட்டால் தரமாட்டாயா என்ன?” பழனி சிரித்துக் கொண்டே கேட்டான். காளியும் சிரித்துக்கொண்டே பணத்தைப் பெற்றுக் கொண்டான். “காளி, நான் பள்ளியில் சேரவேண்டும். இந்த ஊரில் எந்தப் பள்ளியில் சேரலாம்” என்று கேட்டான். காளி யோசித்தான். திடீரென்று துள்ளிக்குதித்தான். “சேச்சே இதைச் சொல்ல மறந்து விட்டேனே?” என்று சொல்லிக்கொண்டு தன் தலையில் ஓர் அடி வைத்துக் கொண்டான். “என்ன காளி” என்று ஆவலோடு கேட்டான் பழனி. “பழனி ஹண்டர்ஸ் ரோட் முனையிலே ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறதே! உனக்குத் தெரியுமா?” “ஹண்டர்ஸ் ரோட் முனையிலா?” “ஆமாம் அந்தப் பள்ளி இலவச உயர்நிலைப்பள்ளி” “என்னது! இலவச உயர்நிலைப்பள்ளியா?” “ஆமாம்! அங்கே ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது இலவச உயர்நிலைப்பள்ளி. என்பதைக் கவனிக்கவில்லை. நான் பேப்பர் போடும் வீடுகளில் ஒன்று ஒரு ஹெட்மாஸ்டர் வீடு. இன்று காலையில் அவரைப் பார்க்கும்போது பள்ளிக்கூடம் பற்றிக்கேட்டேன். அவர் வேலை செய்யும் பள்ளியில் சம்பளமே இல்லை. ஸ்பெஷல் பீஸ் இல்லை. ஆனால் ஏழை மாணவர்களை மட்டும்தான் சேர்த்துக்கொள்வார்களாம்! அவர் சொன்ன இந்தச் சேதியை உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்” என்றான் காளி. பழனியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “காளி என் கவலை பறந்துவிட்டது. பேப்பர் போடுவதால் வரும் பணத்தையும் சைக்கிள் துடைப்பதால் வரும் பணத்தையும் |