பக்கம் எண் :

சிறுவர் நாவல்95

     “காளி, இதெல்லாம் என்ன? நீ போன காரியம் என்ன ஆனது? எனக்கு
இடம் கிடைத்து விட்டதா?” என்று கேட்டான்.


     காளி, “ஆமாம் பழனி! உனக்கு இடம் கிடைத்து விட்டது. நீ எவ்வளவு
மார்க்கு வாங்கியிருக்கிறாய் தெரியுமா? ஆங்கிலத்தில் எழுபத்தைந்து.
பொதுஅறிவில் எண்பது. கணக்கில் நூறு மார்க்கு. நீதான் பரீட்சையில் முதல்
மார்க்கு வாங்கியிருக்கிறாய்” என்றான்.


     முன்பு வேதனையால் பழனியின் இதயம் வெடிப்பதைப் போல் இருந்தது.
இப்போதோ மகிழ்ச்சியால் அவன் இதயம் பூரித்து வெடித்துவிடும்
போலிருந்தது.


     “உண்மையாகவா காளி” என்று கேட்டான் பழனி.


     “ஆமாம்; நூற்றுக்கு நூறு உண்மை” என்றான் காளி.


     “காளி” என்று உணர்ச்சியுடன் அழைத்துக் கொண்டே அவனைக்
கட்டிப் பிடித்துக்கொண்டான் பழனி.


     பழனியின் கவலை மறைந்தது. இனி பள்ளியில் சேருவது பற்றிக்
கவலையில்லை. ஆனால் படித்து முதல் மார்க்கு வாங்க வேண்டும்.
அதுதானே அவன் இலட்சியம்.


     மகிழ்ச்சியின் ஆரவாரமெல்லாம் அடங்கியது. பிறகு. “காளி, நொடியில்
வருவதாகச் சொன்னாயே, ஏன் இவ்வளவு நேரம்” என்று கேட்டான் பழனி.


     “நான் நேரே பள்ளிக்குப் போனேன். அங்கு ஹெட்மாஸ்டர் இல்லை.
அப்போதுதான் வீட்டுக்குப் போனதாகச் சொன்னார்கள். போன காரியம்
முடியாமல் திரும்பிவர விருப்பமில்லை. எனக்குத்தான் ஹெட்மாஸ்டர் வீடு
தெரியுமே. அதனால் நேரே அவர் வீட்டுக்குச் சென்றேன். உன் பரீட்சையின்
முடிவைக் கேட்டேன். அவர் நீ முதல் மார்க்கு வாங்கியிருப்பதைச்
சொன்னார். உடனே விட்டாரா? அது தான் இல்லை. உன்னைப்
பாராட்டினார். அவரிடமிருந்து விடைபெற்றதும் ஓட்டமாக ஓடிவந்தேன்.
அதனால் இவ்வளவு நேரமாயிற்று” என்றான் காளி.