பக்கம் எண் :

96காளித்தம்பியின் கதை

     பழனி அன்றெல்லாம் மகிழ்ச்சியில் துள்ளினான். பேப்பர் போடும்
வேலை முடியக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். பழனி
மகிழ்ச்சி மிகுதியால் சைக்கிளைக் காரைப்போலச் செலுத்தினான். வேலை மிக
விரைவில் முடிந்துவிட்டது.


     மறுநாள் திருவொற்றிஸ்வரர் இலவச உயர்நிலைப் பள்ளியில் - ஆம்,
அதுதான் அந்தப் பள்ளியின் பெயர் - கோடீஸ்வரனின் மகன் பழனி தானும்
ஓர் ஏழையாகச் சேர்ந்துவிட்டான். அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து
எஸ்.எஸ்.எல்.ஸி வரை படிக்க வசதியிருந்தது. ஆனால், சம்பளமாக ஸ்பெஷல்
பீசாக ஒரு பைசா கூடக் கேட்கமாட்டார்கள். அரசு இலவசக் கல்வித்
திட்டத்தை மேற்கொள்வதற்கு முன்பே, 1947 ஆம் ஆண்டு முதலே அது
முற்றிலும் ஓர் இலவசப் பள்ளியாக இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியால்
எத்தனையோ ஏழை மாணவர்கள் கல்வியறிவு பெற்றனர்.


     பள்ளியில் சேர்ந்த அன்றே பழனி தன் வகுப்புக்குச் சென்றான். வகுப்பு
ஆசிரியர் பழனியைக் கடைசி பெஞ்சியில் உட்கார வைத்தார்.


     “இந்தப் பள்ளியில் நீங்கள் வாங்கும் மார்க்குக்குத் தகுந்தபடிதான்
உட்கார வைப்போம். ஆண்டுத்தேர்வில் முதல் மார்க்கு வாங்கியவன்
முதலில், இரண்டாவது மார்க்கு வாங்கியவன் இரண்டாவது என்று
உட்கார்ந்திருக்கிறார்கள். புதிதாகச் சேர்ந்த மூவரும் கடைசி பெஞ்சியில்
உட்காருங்கள். மாதப் பரீட்சைக்குப்பிறகு உங்கள் தகுதிக்குத் தகுந்த
இடத்தில்  உட்காரலாம்” என்றார் ஆசிரியர். பழனி இதற்கு முன் கடைசி
பெஞ்சியில் உட்கார்ந்ததில்லை. பாடத்தைக் கவனிக்க விரும்பாமல் அரட்டை
அடிப்பவர்கள்தான் கடைசி பெஞ்சியில் உட்காருவார்கள். பழனி முதல்
பெஞ்சியில் உட்காருவான். அது இங்கே இல்லை. அவனுக்குப் பக்கத்தில்
எப்போதும் அழகன் உட்காருவான். அவனும் இங்கே இல்லை. பழனிக்கு
இரண்டும் பெரிய குறைகளாகத் தோன்றின.