பக்கம் எண் :

சிறுவர் நாவல்97

     பழனி தனக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கினான். அவ்வளவும்
பழைய புத்தகங்கள். மூர்மார்க்கெட்டில் உள்ள கடைகளையெல்லாம் அலசிக்
குறைந்த விலையில் புத்தகங்கள் வாங்கினான். முக்கியமான சில நோட்டுப்
புத்தகங்களை மட்டும் கடைசியில் வாங்கிக் கொண்டான். போஸ்டர்
காகிதங்கள் ஒரு பக்கம் அச்சில்லாமல் வெள்ளையாக இருக்குமல்லவா?
அவற்றையெல்லாம் காளியின் கடையிலிருந்தும், அவன் வேலை செய்யும்
ஏஜென்ஸியிலிருந்தும் பெற்றான். அவற்றையே நோட்டுப் புத்தகங்களாகத்
தைத்துக் கொண்டான்.


     புத்தகம், நோட்டுக்கள் இவற்றோடு ஒரு பலகையும் வாங்கினான். காளி
அதைக் கண்டு சிரித்தான். “என்ன பழனி, ஒன்பதாம் வகுப்பு படிக்கிற நீ
பலகை வாங்குகிறாயே” என்று கேட்டான். “காளி, இந்தப் பலகை
பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல அல்ல; வீட்டில் எழுதிப் பார்க்க.
கணக்குகளையெல்லாம் இதில் போட்டுப் பார்க்கலாம். எனக்கு இது பழக்கம்.
எங்கள் வீட்டில் நோட்டுக்கா குறைச்சல்! ஆனாலும் நான் பலகை
வைத்திருந்தேன். அதில் தினமும் எழுதிப் பார்ப்பேன்!”


     சொல்லிக்கொண்டே வந்த பழனி ‘டக்’கென்று நிறுத்தினான். அவன்
தன்னைப்பற்றிய விவரங்களையல்லவா சொல்லி வருகிறான்? பழனி நாக்கைக்
கடித்துக்கொண்டான்.


     காளி இதைக் கவனிக்கத் தவறவில்லை. “நீ சொல்லா விட்டால் என்ன?
உன்னை முதலில் பார்த்தபோதே நீ செல்வத்தில் மிதந்தவன் என்பதைத்
தெரிந்துகொண்டேன் தம்பி” என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டான்.
வாய்விட்டுச் சொல்லவில்லை.


     காளி தினமும் காலையில் எழுந்துவிடுவான். ‘பம்ப்’ அடிக்கச்
செல்லும்போதே அவன் பழனியை எழுப்பி விடுவான். பழனி எழுந்து
குளிர்ந்த நீரில் குளிப்பான். குளித்த பிறகு படிப்பான். காளி வந்ததும்
அவனுடன் போய் சிற்றுண்டி சாப்பிடுவான். அதன் பிறகு புத்தகங்களை