எடுத்துக்கொண்டு, காளி வேலை செய்யும் கடைக்குப் போவான். அங்கே புத்தகங்களை வைத்து விட்டுப் பக்கத்திலிருக்கும் ஓட்டலுக்குப் போவான். வெளியே இருக்கும் சைக்கிளைத் துடைத்து, கிடைக்கும் காசைப் பெறுவான். மணி ஒன்பதரை ஆனதும் கடைக்குப் போவான். புத்தகங்களை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போவான். மாலை நான்கு மணிக்கு வகுப்பு முடியும். பழனி படிப்போடு திரும்பமாட்டான். விளையாட்டு மைதானத்தில் சளைக்க விளையாடுவான். சுமார் ஐந்து மணிக்கு அறைக்குப் போவான். அரை மணி நேர ஓய்வு. அதன் பின் ஏஜென்ஸிக்குப் போய்விடுவான். எட்டுக்குத் திரும்புவான். இரவு காளியோடு சேர்ந்து சாப்பிடுவான். பின் விரைவில் தூங்கமாட்டான். குறைந்தது பதினோரு மணிவரையாவது பள்ளிப் பாடங்களைப் படிப்பான். இத்தனைக்கும் நடுவில் தினமும் ஏதாவது எழுதுவான். ஆம், அவனுக்கு எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசை, சென்னையிலே தோன்றி வளர்ந்து ஆலமரமாகத் தழைத்து நின்றது. எழுத்தாளர்கள் ஏழ்மையில்தான் தோன்றுவார்கள் என்று சொல்லுவார்களே, அது உண்மைதான் போலிருக்கிறது. மதுரையில் செல்வத்தில் மிதந்தபோது தோன்றாத ஆசை சென்னையில் ஏழ்மையில் அழுந்திக்கிடந்தபோது அவனைப் பிடித்துக்கொண்டது. அவன் எழுதினான். எழுதியவற்றை உடனுக்குடன் ‘மல்லிகை’ வார இதழுக்கு அனுப்பி வைத்தான். அவையெல்லாம் கிணற்றில் விழுந்த கல்லாக இருந்தன. புதிய அனுபவங்கள் தந்த கதைகளும் பாடல்களும் பத்திரிகையில் இடம் பெறுமா? பழனி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. “வெற்றி நிச்சயம். இன்று இல்லாவிட்டாலும், நாளை வெற்றிபெறலாம்’ என்ற நம்பிக்கையோடு அத்தனை வேலைகளுக்கும் இடையில் எழுதி வந்தான். பள்ளியில் பத்துப் பதினைந்து நாட்களிலேயே பழனி நல்ல பெயர் எடுத்துவிட்டான். ஆசிரியர்கள் அவன் திறமையை உணர்ந்து கொண்டார்கள். மாணவர்கள் அவன் நல்ல பண்பை அறிந்து கொண்டார்கள். பழனிக்குப் பலர் நண்பர்களாயினர். ஆனால், அவன் ஓட்டலுக்கு முன் சைக்கிள் |