4.7 தொகுப்புரை

வெட்சி முதலான திணைகளுள் கூறப்படாத செய்திகளைக் கூறும் பொதுவியல் திணையில் எல்லாத் திணைகளுக்குமுரிய பொதுவான செய்திகளே கூறப்பட்டுள்ளன என்பதை அறிந்தீர்கள். மூவேந்தருக்குரிய அடையாளப் பூக்களான போந்தை, வேம்பு, ஆர் ஆகியனவற்றின் சிறப்பும், அரசனின் தளராத வீரத்தைப் போற்றும் நிலையும் புலப்படுத்தப்பட்டன. போர் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பான நடுகல் பற்றியும் அறிந்தீர்கள். மனித சமூகத்திற்கு இன்றியமையாத உறுதிப் பொருள்களாக உள்ளவற்றையும் நிலையாமை இயல்பையும் துறைகள் வழி அறிந்துகொண்டீர்கள். ஆண் பெண் இணைந்து வாழும் இல்லற வாழ்வில் ஒருவருக் கொருவர் கொண்ட அன்பின் பிணைப்பையும் இல்லற மாண்புகளையும் அறிந்துகொண்டீர்கள். பொதுவியல் திணை அன்றைய சமூகத்தின் வாழ்வியலை வெளிப்படுத்துவதைத் தெரிந்து கொண்டீர்கள்.

 
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
காஞ்சிப் பொதுவியல் துறைகளைக் குறிப்பிடுக.
2.
பெருங்காஞ்சித் துறையின் கொளு யாது?
3.
‘காடுவாழ்த்து’ என்பதன் பொருள் யாது?
4.
முல்லைப் பொதுவியல் துறைகள் யாவை?
5.
கற்புமுல்லை என்பதற்கு கூடுதலாகத் தரப்படும் இரு விளக்கங்களைக் குறிப்பிடுக.