4.3 உத்திகளும் புலப்பாட்டுத் திறன்களும்
இலக்கியத்தில் மொழி பயின்று வருகிற போது காணக்கூடும்
சில உத்திகளையும், புலப்பாட்டுத் திறன்களையும் இப்பகுதியில்
பார்க்கலாம்.
4.3.1 அழகியல் உத்திகள்
இலக்கியத்தில் வழங்குகிற
மொழி, தட்டையாக, நேரடியானதாக இருப்பதில்லை.
வெளியீட்டு முறையில் சில அழகியல் உத்திகள் காணப் படுகின்றன. ஒன்றோடு
ஒன்று ஒவ்வுதல் அல்லது ஒப்புமை புலப்படுகின்ற பண்பு மிக முக்கியம்.
உவமம் அடிநாதமாக இருக்கிறது. உருவகம், படிமம், குறியீடு
என்பன இன்றைய திறனாய்வாளர்கள்
போற்றும் உத்திமுறைகளாகும். இவற்றுள் உருவகம்
(Metaphor) என்பது உவம உருபுகள் நீங்கிப் போகச் செரிவுடைய ஓர் உவம
வடிவமாகும். காளை போன்றவன் காளியப்பன் என்றால், அது உவமம்.
அதே போது, (காளியப்பன் காளை) காளை வந்தான் என்பது உருவகம் ஆகும்.
படிமம் (Image) என்பது உவமத்தின் இன்னொரு கோலல். சொல்லப்படும் பொருளை
கேட்பு அல்லது காட்சி வடிவில், உருவெளித் தோற்றம் என்ற நிலைக்கு கொண்டுவருவது,
இது. சாயுங்கால மேகம், எங்கும் வண்ணக்குழம்பு கரைந்துவிட்டதுபோல் மேகமெல்லாம்

செவ்வண்ணச் சாயம். தங்கத் தீவுகள் போன்ற மேகம் என்றோ தங்கத்தீவு மேகம்
என்றோ சொல்லாமல், பாரதியார் (பாஞ்சாலி சபதம்) ‘தங்கத்தீவுகள்’
என்கிறார். நீலப் பொய்கைகள், கரிய பெரும்பூதம், செழும்பொன்
காய்ச்சிவிட்ட ஓடைகள் என்று மேங்களை வருணித்துச் செல்கிறார். இவை
உருவகங்கள். அடுத்துக் குறியீடு (Symbol) என்பது ஒரு சொல்லோ
தொடரோ தனது பொருள் தளத்தைத் தாண்டிய ஒரு பொருண்மையை அல்லது கருத்து
நிலையைக் குறித்து வருவது. அக்கினி அல்லது தீ என்ற சொல்,
தீ எனும் தோற்றத்தை உணர்த்தாமல், அத்தன்மை கொண்ட
இன்னொரு பொருண்மையை உணர்த்துகிறது. உதாரணமாக, வன்முறை, பேருணர்வு,
புரட்சி என்பவற்றுள் ஒன்றைத் தருமானால், அது குறியீடாகிறது.
பாரதியின் ‘அக்கினிக்குஞ்சு’ என்ற சொற்றொடர் ஒரு குறியீடாகும்.
4.3.2 புலப்பாட்டுத் திறன்கள்
மொழியைப் பயன்படுத்துகிற விதம், இலக்கியத்தின்
புலப்பாட்டுத் திறனை உணர்த்தும். ஏற்கனவே சொன்ன
அழகியல் உத்திகளையும் தொடர் மற்றும் பொருள்
நிலைகளையும் இத்தகைய மொழித்திறன் பண்புகளாக நாம்
அறிகிறோம். அன்றியும் வித்தியாசமான சொற்சேர்க்கைகளும்
தொடரியல் அமைப்புகளும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன.
கவிதையில், சொற்களை உடைத்துப் போட்டு அதன் மூலம்
புதிய பொருளை உருவாக்குகிற முயற்சி நடைபெறுகிறது.
‘எவளாவது ஒருத்தி’ என்பது ஒரு தொடர் ; இது, இயல்பானது.
அதனை வித்தியாசப்படுத்தி ‘ஒருத்-தீ’ (தி-தீ என்று ஆகிறது)
எனப்பிரித்து,
“எவளாவது ஒருத்
தீ
வரமாட்டாளா?”
என்று கவிதையாக்கியிருக்கிறார், சி.மணி. ‘ஒருத்தி’
என்பதற்கும் ‘ஒருத்-தீ’ என்பதற்கும் உணர்வின் தளத்தில்
பெரும்வேறுபாடு உண்டு. வழக்கமானதை வித்தியாசப்படுத்துவது
(difference/ defermilarize) இந்த மொழிநடை.
இரவு என்பது ஒரு நேரத்தைக் குறிப்பது. இது தொட்டு
உணர்தல் போன்ற புலன்களுக்கு அகப்படாதது. அதாவது
நுண்மையானது. இதை நுண்பொருள் (abstract) என்பார்கள்.
தொட்டு உணரும் கடினத் தன்மையுள்ள பொருளுக்குப்
பருப்பொருள் (concrete) என்று பெயர். பருப்பொருள்
உடைத்தால் உடையும். நுண்பொருளுக்கு அந்தத் தன்மை
இல்லை. பருப் பொருளின் தன்மையாகிய உடைதல்
நுண்பொருளாகிய இரவுக்கு இருப்பது போன்று ந.பிச்சமூர்த்தி
என்ற கவிஞர் படைக்கிறார். “விழுந்துடைந்த இரவு” என்று
பாடுகிறார். “விழுந்துடைந்த இரவு” இது ஒரு நடைத்திறன்.
விழுந்துடைந்த கண்ணாடி என்றால் இயல்பானது; விழுந்துடைந்த
இரவு அதிலிருந்து வித்தியாசப் பட்டு ஒரு புதிய தளத்தைக்
கட்டமைக்கிறது.
இதுபோன்று, பாரதியார் முரண்பட்ட சொற்சேர்க்கை மூலம்,
வித்தியாசமான மொழியமைப்பைக் காட்டுகிறார். தேன் திரவப்
பொருள்; செந்தமிழ் நாடு என்று உச்சரிப்பது, ஒலி வடிவம்.
தேன், செந்தமிழ் என்ற இரண்டையும் ஒன்றிணைக்கிறார்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே.
காதுக்குள் தேன் போகுமோ? நடைமுறைத் தர்க்கம்,
கவிதையில் நடையழகிற்காக மாறுபடுகிறது.
கம்பர், சொற்றொடர் அமைப்பு அன்றியும், தொடரியல்
அமைப்பில் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டு வந்து
அழகு தருகிறார், எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை
- இதுவே தமிழில் சொற்றொடர் அமைப்பின் மரபு. ஆனால்
தேவை கருதி, சொல்லின் ஆற்றலையும் உணர்வின் திறனையும்
காட்டும் பொருட்டு நான், கண்களால் கற்பினுக்கு அணியைக்
(சீதையை) கண்டேன் என்று சொல்வதற்குப் பதில், இந்த
அமைப்பு முறை மாறுகிறது.
கண்டனென் கற்பினுக்கணியைக் கண்களால்
என்று சொல்லின் செல்வன் அனுமன் கூறுவதாகக் கம்பன் காட்டுகிறார்.
இவ்வாறு சொல்வது மொழியின் புலப்பாட்டுத் திறனுக்கு அணி சேர்க்கிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
|
1. |
மொழித்திறன், இலக்கியத்திற்கு முக்கியமானது - எவ்வாறு?
|
விடை |
2. |
மொழி, என்ன என்ன தளங்களிலிருந்து
செயல்படுகிறது?
|
விடை |
3. |
சொல்லுக்குப் பொருள் தரும் நிலையில் உள்ள
இரு பண்புகள் யாவை?
|
விடை |
4. |
இலக்கியத்தில் சிறிய தொடர்கள் இடம் பெறுகிற
சூழல்கள் யாவை?
|
விடை |
5. |
‘மாண்ட’ என்ற சொல், வழங்குகிற விதத்தைக்
கூறுக.
|
விடை
|
6. |
சொல்லுக்கு ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கூறும் நான்கு
வகையான பொருட்கள் யாவை?
|
விடை |
7. |
உருவகம், படிமம் - விளக்குக.
|
விடை
|
|
|