பழந்தமிழ் நூல்களில் சமணம் என்ற முதற்பாடத்தில் இலக்கண நூலான தொல்காப்பியம் பற்றி விரிவாகவே படித்துள்ளோம். அதனால் அதை விடுத்து, அதற்குப் பின்னர், சில நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றிய இலக்கண நூல்களைப் பற்றி இங்கு அறிய முற்படுவோம்.

3.1.1 அவிநயம்

நூலின் சிறப்பு

தொல்காப்பியர் நெறியினின்றும் மாறுபட்ட கருத்துகள், பின்வந்த இலக்கண நூல்களாகிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, நன்னூல் மற்றும் பிற இலக்கண நூல்களிலும் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. இவற்றிற்கு மூலம் ஒருவேளை அவிநயமாக இருக்கலாம். இன்று இந்நூல் முற்றும் கிடைக்கவில்லை. ஆயினும் பல இலக்கண உரைகளில் இந்த நூலின் பெயரும், நூலாசிரியர் பெயரும், அவிநய நூற்பாக்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. இதிலிருந்து அந்த நூல் அக்காலக்கட்டத்தில் மிகுந்த சிறப்பைப் பெற்றதாக இருந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம். இத்தகைய சிறப்புப் பொருந்திய அவிநயம் முழுமையாகக் கிடைக்கப் பெறாமை தமிழிற்கு நேர்ந்த இழப்பு எனலாம். அவிநயத்திற்கு அவிநயப் புறனடை என்றும் ஒரு பெயர் உண்டு.

ஆசிரியர் காலமும் சமயமும்

நூலாசிரியர் அவிநயனார். இவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாக இருக்கலாம் என்பர். இவர் சமயம் சமணம் என்பதைப் பின்வரும் காரணங்களால் அறியலாம்.

அணுக்கொள்கை

அணுவே அனைத்திற்கும் தோற்றிடம்; அணுவை அழிக்க முடியாது. என்றும் நிலைபெற்றது. இந்த அணுக்களின் சேர்க்கையாலேயே உலகம் யாவும் தோன்றுகின்றன. மொழிக்கு மூலகாரணமும் அதுவே. இந்த அணுக்கொள்கை அவிநயத்தில் காணப்படுகிறது. இது சமண சமயத்திற்கு உரியது என்பதால் இதன் ஆசிரியர் சமணராக இருக்கலாம்.

வினைக்கொள்கை

சமண சமயத்தில் வினை (கர்மா), உயிர் (சீவன்) களுக்குள் முற்றிலும் ஊடுருவிச் சென்று அவற்றை உலகியல் நிலைக்குத் தாழ்த்தி விடுவதாகக் கருதப்படுகிறது. நீர் பாலோடு ஒன்றுவது போல வினை ஆன்மாவுடன் ஒன்றுபடுகிறது. கர்மாவால் (வினையால்) கட்டுண்ட ஆன்மா சம்சாரசீவன் என அழைக்கப்படுகிறது. கர்மாவின் பந்தத்தால் தொடரும் பிறப்பினைத் துன்பங்கள் தொடர்கின்றன. சமணத்தில் ஊடுருவி நிற்கும் இக்கொள்கை அவிநயனாரின் அகப்பொருள் நூற்பாவில் புலப்படுகிறது.

முன்செய் வினையது முறையா உண்மையின்
ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து

(யாப்பருங்கலவிருத்தி
ஒழிபியல் 95, மேற்கோள்)


(வினை முறைப்படி தன் பயனைத் தரும்; அதன்படி பண்பு முதலியவற்றால் ஒத்திருந்த அந்த இருவரும் - தலைவனும் தலைவியும் - தம் நெஞ்சம் நெகிழ - என்பது இதன் பொருள்)

மேற்கூறியவற்றை நோக்கும் போது அவிநயனார் சமயம் சமணம் எனலாம்.

அவிநயனாரின் பிற நூல்கள்

அவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் பதிப்பிக்கப் பட்டிருக்கின்றது. அவிநயப் புறனடை தனிநூல் என்பது உறுதி என்கிறார் க.ப. அறவாணன்.  (சைனரின் தமிழிலக்கணக் கொடை, பக். 178)

இலக்கணங்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவினாலேயே எழுதப்பெறும். வெண்பாவில் எழுதுவது சங்ககாலத்திற்குப் பின் வந்த மரபாக இருக்க வேண்டும். நேமிநாதம் என்னும் இலக்கண நூல் வெண்பாக்களால் ஆனது. அதற்கும் முன்பாக வெண்பாவில் எழுதப்பட்ட நூல் அவிநயப் புறனடை யாகும். வெண்பாவில் இலக்கணம் எழுத முடியும் என்பதை முதலில் காட்டியவர் சமணராகிய அவிநயனாரே எனலாம். இது தமிழுக்குப் புதிய வரவு எனலாம்.

3.1.2 யாப்பருங்கலம்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றனுக்கும் இலக்கணம் வகுத்தது. காலப்போக்கில் புதிய இலக்கியங்கள் தோன்றின. வடமொழியின் செல்வாக்கால் பல யாப்பு வடிவங்கள் தமிழ்மொழியை வந்தடைந்தன. தமிழ்ச் சான்றோராலும் புதியனவாகப் படைக்கப்பட்டவை இடம் பெற்றன. அதனால் புதிய நூல்களின் யாப்பு வடிவங்கள் அனைத்தையும் வரையறை செய்து காட்டும் புதிய யாப்பு நூல்களின் தேவை ஏற்பட்டது. அதன் விளைவாக யாப்பு நூல்களும், பாட்டின் அமைப்பைப் பற்றிப் பேசும் பல பாட்டியல் நூல்களும் தோன்றின. அவற்றுள்ளும் யாப்பருங்கலத்திற்குப் பெருஞ்சிறப்பு உண்டு. யாப்பருங்கல விருத்தி என்ற அரிய உரை தோன்றக் காரணமாக அமைந்தது யாப்பருங்கலம் எனலாம். யாப்பிற்கு இலக்கணம் படைத்ததோடு அதற்கான உரையும் தோன்றக் காரணமாயினர் சமணச் சான்றோர்.

ஆசிரியர்

நூலாசிரியர் அமிர்தசாகரர். இவரை அமுதசாகரர் எனவும் அழைப்பர். யாப்பியலில் யாப்பருங்கலவிருத்தியும் யாப்பருங்கலக் காரிகையும் சமணர் தம் மிகச்சிறந்த கொடை எனலாம். யாப்பு இலக்கணத்திற்குத் தனி நூல்கள் எழுதி இலக்கண விரிவிற்குக் காரணமாயினர் சமணர்.

ஆசிரியர் சமயம்

அமிர்தசாகரர் சமண சமயத்தவர் என்பது அவர் எழுதிய கடவுள் வாழ்த்திலிருந்து தெளிவாகிறது. யாப்பருங்கலத்திலும் யாப்பருங்கலக் காரிகையிலும் அருகதேவனை வணங்கியே நூல்களைத் தொடங்குகிறார்.

வெறிகமழ் தாமரை மீமிசை ஒதுங்கிய
அறிவனை வணங்கி அறைவேன் யாப்பே

(வெறி = மணம், மீமிசை = மேல்)

மணம் கமழ்கின்ற தாமரை மலர்மீது அமர்ந்த/நடந்த அருகதேவனை வணங்கி யாப்பினைக் கூறுவேன். இது யாப்பருங்கல அருக வணக்கம்.

கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி ஏத்தி

என்பது யாப்பருங்கலக் காரிகை அருக வணக்கம். அமுதசாகரர் துறவியாக வாழ்ந்தவர் என்பது அருந்தவத்தோனே என முடியும் யாப்பருங்கலப் பாயிரத் தொடரால் உணரலாம்.

3.1.3 யாப்பருங்கலக்காரிகை

அமுதசாகரராலேயே  யாப்பருங்கலக்காரிகையும் இயற்றப்பட்டது. இது யாப்பருங்கல நடையைவிட எளிமையான நடையை உடையது. கட்டளைக் கலித்துறையில் அமைந்தது.

செய்யுள் இலக்கணத்தை அறிஞர்களிடமிருந்து பொதுமக்களிடம் கொண்டு சென்றவர் காரிகை ஆசிரியர். மக்களுக்குக் கல்வி தருவதில் பெரும் அக்கறை காட்டியவர்கள் சமண முனிவர்கள். எனவே தான், மக்களைச் சென்றடைய வேண்டுமென்று தாம் எழுதிய இலக்கிய, இலக்கண நூல்களை மக்கள் எளிதில் படித்தறியும் வண்ணம் தந்தனர்.  இது நம் கவனத்திற்குரியது.

காரிகையின் அமைப்பு

இது முப்பிரிவுகள் கொண்டது. யாப்பருங்கலத்தை ஒட்டியே உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழிலக்கிய உலகில் பெண்களை முன்னிலைப்படுத்தி மகடூஉ முன்னிலையைப் படைத்து முதலில் இலக்கியம் அமைத்தவர் சமணச் சான்றோர். நாலடியார் பாக்களிலும் மகடூஉ முன்னிலைப் பாக்களைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக,

இடம்பட நன்ஞானம் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்!
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்து அடினும்
கைப்பு அறா பேய்ச்சுரையின்காய்
(நாலடியார்: 116)

என்ற பாடல் காணப்படுகிறது. இது, பெரிய கண்களை உடையவளே! பேய்ச்சுரைக்காயை உப்பு, நெய், பால், தயிர், பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்துச் சமைத்தாலும், அது தன் கசப்புத் தன்மையைக் கைவிடாது. (அதுபோல) இயற்கையாகவே அடக்கம் இல்லாதவர்கள் எத்தனை நல்ல நூல்களைக்கற்றாலும் அடக்கத்துடன் நடந்து கொள்ளமாட்டார்கள் என்று பொருள்படும். தமிழ் இலக்கண உலகிலும் முதல்முதல் மகடூஉ முன்னிலையை அமைத்து இலக்கணம் அமைத்தவர் சமணரே. யாப்பருங்கலக்காரிகை இதற்குச் சான்றாகும்.

3.1.4 நேமிநாதம்

சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பழங்காலத்தில் சமணக்கோயில் ஒன்றிருந்தது. இக்கோயிலில் நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் அமைக்கப் பட்டிருந்தது. சமணசமயத்தார் வணங்கும் 24 தீர்த்தங்கரருள் 22-ஆம் தீர்த்தங்கரர் நேமிநாதர் ஆவர். இத் தீர்த்தங்கரர் திருப்பெயரால் செய்யப் பெற்றமையால் இவ்விலக்கண நூல் நேமிநாதம் என்ற பெயர் பெற்றது.

இந்நூலை இயற்றியவர் குணவீர பண்டிதர். இவர் தொண்டை நாட்டில் உள்ள களத்தூரில் பிறந்தவர்.

அமைப்பு

நேமிநாதம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்ற இரண்டு பெரும் பிரிவுகளை உடையது. வெண்பாக்களால் ஆனது. எழுத்ததிகாரம் உட்பிரிவுகள் எதுவும் இல்லாதது. சொல்லதிகாரம் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளை நோக்கின் இவை தொல்காப்பியத்தை அடியொற்றி அமைக்கப் பட்டவை என்பது போல் தோன்றுகிறது.

நூல் இயற்றக் காரணம்

இந்த நூலைச் செய்ததன் காரணத்தை, விரிந்த நூல் உணராத மக்களுக்குச் சுருங்கச் செய்யப்பட்டது என்று கூறும் உரைப்பாயிரம் மூலம் அறிகிறோம். இலக்கணத் துறையில் செய்யப்பெற்ற சுருக்கநூல் முயற்சியில் இது முதலாவதாகும். நேமிநாதமும் மகடூஉ முன்னிலை முறையைப் பின்பற்றி வெண்பாக்களால் அமைந்துள்ளது.

இலக்கண நூல்களில் முழுவதும் வெண்பாவால் இயற்றப்பெற்ற முதல் நூல் நேமிநாதமாகும்.

சிறப்பு

தொல்காப்பியத்திற்கும் நன்னூலுக்கும் இடைப்பட்ட காலத்தின் வளர்ச்சியைக் காட்ட, அந்த இடைவெளியை நிரப்பப் பாலமாக அமைவது நேமிநாதம் எனலாம்.

நூலாசிரியராகிய குணவீர பண்டிதரே இதற்கு உரையும் எழுதினார். நூலாசிரியரே உரையும் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1. இலக்கணங்களை இயற்றுவதில் சமணர் பெரும் ஈடுபாடு கொண்டதற்கான காரணம் யாது?
விடை
2. வெண்பாவில் இலக்கணம் எழுத முடியும் என்று காட்டியது யார்? அவர் இயற்றிய நூலின் பெயர் யாது?
விடை
3. யாப்பு இலக்கணத்திற்குச் சமணர் தந்த நூல்கள் யாவை?
விடை
4. பெண்களை முன்னிலைப்படுத்தி முதலில் எழுதப்பட்ட நூல்கள் யாவை?
விடை
5.

நேமிநாதம் யார் பெயரால் இயற்றப்பட்டது? அதன் சிறப்புகள் இரண்டினைக் குறிப்பிடுக.

விடை

3.1.5 வச்சணந்தி மாலை

தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பு  எழுந்த தொடர்நிலைச் செய்யுட்களிலும் பக்தி நூல்களிலும் சிற்றிலக்கிய மரபுகள் தோன்றின. இம்மரபுகளுக்கு வகுக்கப்பட்ட இலக்கணம் ‘பாட்டியல் நூல்கள்’ என்ற பெயரில் வழங்கலாயிற்று. நூல்வகைகள், அவற்றின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும், ஒரு நூலின் முதற்பாட்டின் முதற்சீர் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் பாட்டியல் நூல் கூறும். ஒரு நூலில் பாடப்படும் (பாட்டுடைத்) தலைவனின் வருணத்துக்கு ஏற்றபடி அந்தச் சீர், பாடல்களின் எண்ணிக்கை முதலியவை அமைய வேண்டும் என்று அது குறிப்பிடும். நால்வகை வருணத்தை அடிப்படையாக வைத்து நூலை இயற்ற வேண்டும் என்பதும் அதில் கூறப்படுகிறது.

இவ்வகைப் பாட்டியல் நூல்களில் ஒன்றான வச்சணந்தி மாலையின் ஆசிரியர் குணவீர பண்டிதர். முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என்ற மூன்று பிரிவுகளை உடையது இந்நூல். வெண்பாக்களால் ஆனதால் இதை வெண்பாப் பாட்டியல் என்ற பெயராலும் அழைத்தனர். இந்நூல் முழுவதும் அந்தாதி யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. அந்தாதித் தொடையில் இயற்றப்பட்ட முதல் இலக்கணநூல் இது எனலாம்.

3.1.6 நன்னூல்

காலச் சுழற்சியில் பழைய மரபுகள் கழிவதும், புதிய மரபுகள் தோன்றுவதும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிகழ்வு. அவ்வகையில் பழந்தமிழ் மரபுகளை முற்றும் புறக்கணிக்காமல் நிலையான தொடர்பு உடையவற்றை ஏற்கவும், தொடர்பு இழந்தவற்றைத் தள்ளவும் வேண்டியிருந்தது; அதே போன்று பின்வந்த வழக்காறுகளில் விழுமியவற்றை ஏற்கவும், ஏனையவற்றை ஒதுக்கவும் வேண்டியிருந்தது. தவிரவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட காரணத்தால் தொல்காப்பியத்தைப் படித்துப் புரிந்து கொள்வதில் மக்களுக்கு இடர்ப்பாடு தோன்றியிருக்கக்கூடும்.

இவ்விரு காரணங்கள் கருதி நன்னூல் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

அமராபரணன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற சீயகங்கன் என்னும் அரசன் தமிழிலக்கியங்களின் ஆராய்ச்சிக்கு இன்றியமையாததும், பரந்து கிடப்பதுமான  தொல்காப்பியத்தைக் கற்று விதிவிலக்குகளை அறிந்து கொள்வது எளிதன்று என்று அறிந்து பவணந்தியை நன்னூல் எழுத வேண்டினான் என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் தரும் குறிப்பும் இங்கு நினைவுகூரத் தக்கது.

தொல்காப்பியம் மூன்று இலக்கணங்களைப் பேசியது. அவை எழுத்து, சொல், பொருள் என்பன. பின்னர், இலக்கியங்கள் பல தோன்ற, விரிவான இலக்கணம் செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்தது. யாப்பு நூல்கள், அணி நூல்கள், அகப்பொருள் இலக்கணம் போன்றவை தனித்தனி நூல்களாகத் தோன்றின. அவற்றுள் எழுத்து, சொல் என்ற இவ்விரண்டைப் பற்றிய தனி நூலாக நன்னூல் தோன்றியது.

நன்னூலின் ஆசிரியர் பவணந்தியார். சிறப்பு நோக்கி இவரை நன்னூலார் என்றே குறிப்பிடும் வழக்கமும் உள்ளது.

ஆசிரியரும் சமயமும்

நன்னூல் சிறப்புப்பாயிரம் அதன் ஆசிரியரைப் ‘பன்னருஞ் சிறப்பின் பவணந்தி என்னும் நாமத்து இருந்தவத்தோன்’ என்று குறிக்கிறது. பவணந்தியார் இருந்தவத்தோன் என்று குறிக்கப்பட்டதால் துறவி என்பது புலனாகிறது. சமணத் துறவி என்பதற்கு நூலிலேயே சான்றுகள் இருப்பதை அறியலாம்.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டிற்கும் இவரே கடவுள் வாழ்த்தைப் பாடியுள்ளார். அது அருகதேவனை வாழ்த்திப் பாடியதாகும்.

மொழிமுதற் காரணம் அணுத்திரள் என்று கூறியதும், உயிர்களைப் பகுக்கும்போது ஓரறிவுயிர் முதலாக ஐந்தறிவு ஈறாக அமைத்திருக்கும் முறையும் சமணர் முறையை ஒட்டியதாகும்.

ஓரறிவு உயிர்

ஈரறிவு உயிர்

மூவறிவு உயிர்

நாலறிவு உயிர்

ஐயறிவு உயிர்

பவணந்தி என்னும் பெயரில் ‘நந்தி’ என்ற சொல் கலந்திருப்பதைக் காணலாம். நந்தி என்ற பெயர் சமண சமயத் துறவிகளுக்கு வழங்கப்படுவது. இவையனைத்தும் அவர் சமணர் என்பதை உறுதிப்படுத்தும்.

சிறப்பு

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று இலக்கணத்திற்கு ஒரு விதிமுறையைச் சட்டமாக்கிவிட்ட பெருமைக்கு உரியவர் நன்னூலார். அதற்கேற்ப, வழக்கற்றுப் போனவைகளைப் பழையன கழிதலாக விலக்கியும் புதியனவற்றை ஏற்றும் இலக்கணம் செய்துள்ளார், பவணந்தி.

3.1.7 நம்பியகப்பொருள்

தொல்காப்பியப் பொருள் இயல்களுக்குப்பின் இறையனார் அகப்பொருள் தோன்றியது. அதன்பின் அகப்பொருள் இலக்கியங்கள் தோன்றின. அகப்பொருள் மரபுகளை, பின்னர்த் தோன்றிய இலக்கணங்கள் விளக்கின. சில நூல்கள் கிடைக்கவில்லை. வீரசோழியம் அகப்பொருள் இலக்கணத்தைக் கூறினும் அது பரவலாகப் படிக்கப்படவில்லை. அத்தகைய சூழலில் பிறந்ததுதான் நம்பி அகப்பொருள் விளக்கம்.

ஆசிரியரும் சமயமும்

இதன் ஆசிரியர் நாற்கவிராசநம்பி. (ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி, சித்திரகவி என்ற நான்கு கவிகளிலும் வல்லவர். அதனால் நாற்கவிராசநம்பி). இவர் சமயம் சமணம். சிறப்புப்பாயிரம் இவர் சிறப்பினை விளக்குகிறது. இவர் காலம் 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர்.
    

நம்பியகப்பொருள்

இது அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.