5.2 விசயநகர அரசர்களின் தமிழகப் படையெடுப்பு


    விசயநகர அரசு தோற்றம் பெற்றகாலத்தில் தமிழகத்தின்
வடபகுதி     ராஜகம்பீர ராஜ்யம் என்றழைக்கப்     பெற்ற
சம்புவரையர்களின் ஆட்சிப்பகுதியாகவும் , கொள்ளிடத்தின் தென்
கரையிலிருந்து இராமேஸ்வரம் வரை உள்ள பகுதி மதுரை
சுல்தான்களின் கட்டுப்பாட்டிற்குள்ளும் திகழ்ந்தது. அரிகரர்
விசயநகரப் பேரரசராக இருந்த போது (1536 - 1355) அவரது தம்பி
புக்கரின் தலைமையில் பெரும்படை ஒன்று முதன்முதலாகத்
தமிழகத்தின் மீதுபடை எடுத்து வந்து, தங்களின் மலோதிக்கத்தைச்
செலுத்தத் தொடங்கியது. கி.பி. 1363- இல் வீரகம்பணன்
(குமாரகம்பணன்) கண்டரஊனி மாராயன் எனும் தளபதியுடன்,
இராஜகம்பீர ராஜ்யத்தின் மீதுபடைஎடுத்து வந்த இராஜநாராயண
சம்பு வரையனை வென்று, பின்பு கொங்கு தேசச் சிற்றரசர்களையும்
வென்று, தமிழகத்தின் வடபகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வந்தார். கி.பி. 1371- இல் மீண்டும் தாமிரபரணி வரை
படை எடுத்து வந்து மதுரை சுல்தான் பக்ருதீன் முபாரக் ஷாவை
வென்று, தென்தமிழகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வந்தார். அதுமுதல் தமிழகம் முழுவதும் விசயநகர
அரசின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

    (குமார கம்பணன் புக்கரின் மகன். கம்பணனின் கல்வெட்டுகள்
தமிழகத்தில் கி.பி. 1352 முதல் கிடைக்கின்றன. இவனது தென்னகப்
படையெடுப்பை, கம்பணனின் மனைவியான கங்கமாதேவி
மதுராவிஜயம் என்ற தனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளாள்.)

5.2.1 விசயநகரப் பேரரசின்கீழ்த் தமிழக நிருவாகம்

    தமிழகத்தைக் கைப்பற்றிய குமாரகம்பணன் தன் உயர்நிலை
அலுவலர்களின் துணை கொண்டு ஆட்சியை மேற்கொண்டார்.
சோமப்ப தன்னனாயக்கர், கண்டரகூளி மாராயர், அணிகொண்ட
விட்டப்பர், கோபணராயன்,     சாளுவமங்கு     போன்றோர்
குறிப்பிடத்தக்க உயர் அலுவலர்கள் ஆவர். மகாபிரதானி,
தன்னனாயக்கர், கருவூல அதிகாரி, ஓலை நாயகம், அடப்பம்,
கண்காணி, சுவாமி துரோக கண்டன் என்போர் பேரரசருக்கு
உதவியாக இருந்த உயர் அலுவலர்கள் ஆவர்.

  • ஆட்சி முறை

    விசயநகர ஆட்சி முறை நடுவண் ஆட்சி, மாநிலஆட்சி,
ஊராட்சி எனும் மூன்று பிரிவுகளின் கீழ் அமைந்தது. நடுவண்
ஆட்சி அல்லது மைய ஆட்சியில் பேரரசர், அமைச்சரவை,
செயலகம் ஆகிய உறுப்புகளும், வருவாய்த் துறை, சட்ட நிருவாகத்
துறை, நீதித்துறை, காவல் துறை, படைத்துறை முதலிய துறைகளும்
அடங்கியிருந்தன.

  • நாட்டு ஆட்சி

    பரந்து பட்ட விசயநகரப் பேரரசு பல இராஜ்யங்களையும்,
மண்டலங்களையும் கொண்டதாகத் திகழ்ந்தது.

     1. பெனு கொண்டா,
     2. உதயகிரி,
     3. சந்திர கிரி,
     4. படை வீடு,
     5. திருவாடி,
     6. முலுவாயி,
     7. சர்தலிக ஆயிரம்,
     8. ஆரகம்,
     9. துளுநாடு

என்பன போன்ற இராஜ்யங்கள் விசயநகரப் பேரரசின்
கட்டுப்பாட்டிற்குள் திகழ்ந்தன.

    தமிழகத்தைச் சார்ந்த தொண்டீர மண்டலம் (தொண்டை
மண்டலம்) சோழ மண்டலம், பாண்டி மண்டலம் போன்ற
மண்டலங்களும், படை வீடு ராஜ்யம், திருவாடி, கொங்குதேசம்
போன்ற நாட்டுப் பகுதிகளும் விசயநகரப் பேரரசின் கீழ்த்
திகழ்ந்தன.

  • பேரரசன்

    பேரரசனை மக்கள் கடவுளின் அம்சமாகவே மதித்தனர்.
பேரரசர்களும் தெய்வீகக் கோட்பாடுகளைப் பின்பற்றி நாட்டை
ஆட்சி செய்தனர். அளவிடற்கரிய அதிகாரங்களை அரசன்
பெற்றிருந்தாலும் கொடுங்கோலனாக இல்லாத நிலையே இருந்தது.
வேதங்கள், தர்ம சாத்திரங்கள், நீதி நூல்கள், அரச தந்திரங்கள்
முதலியவற்றின் அடிப்படையில்     அமைந்த நடைமுறைச்
சட்டங்களையே செயல்படுத்தினர். அரசன் பெரும்பாலும் சமய
சமூக நடைமுறைளில் தலையிடுவதில்லை. சமுதாயப் பழக்க
வழக்கங்களை மதித்துப் போற்றினர்.

    ஓர் அரசனின் மூத்த மகனே அடுத்து அரசனாவதற்குத் தகுதி
உடையவன் என்ற கட்டுப்பாடு இருந்தது. சில நேரங்களில்
தகுதியுடைய இளைய குமாரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

  • பேரரசரவை

    விசயநகர மன்னர்கள் காலத்தில் அமைச்சரவையோடு
அரசரவையும் இருந்தது. பிரதானியையும், பேரரசரின் நெருங்கிய
உறவினர்களையும் கொண்ட இத்தகைய அரசரவைகள் தற்காலத்தில்
மேலவைக்கு ஒப்பானவையாகும். இவ்வவையின் கூட்டங்களில்
அமைச்சர்கள், துறைத் தலைவர்கள், அமர நாயன்காரர்கள்,
இளவரசர்கள், தளவாய்கள், வணிகக் குழுவினர் ஆகியோரும்
கலந்து கொள்வர். சில நேரங்களில் அயல்நாட்டுத் தூதர்களும்
பங்கேற்றனர்.

  • அமைச்சரவை

    பேரரசனின் செயல்பாடுகளுக்கு உற்ற துணையாய்த் திகழ்வது
அமைச்சரவையேயாகும்.     இரண்டாம்     தேவராயரி்ன்
அமைச்சரவையில் இருபது அமைச்சர்கள் இருந்ததாக நூனிசு
என்பார் குறிப்பிட்டுள்ளார். (நூனிசு- Nuniz- என்பவர் விசயநகரப்
பேரரசின் ஆட்சிக் காலத்தில் விசயநகரத்திற்கு வந்த வெளிநாட்டுப்
பயண எழுத்தாளர். இவர் ஒரு முஸ்லிம் எழுத்தாளர்.)
அமைச்சரவை பேரதிகாரம் பெற்றதாக விளங்கியது. ஒரே அமைச்சர்
பல பேரரசர்களுக்கு அமைச்சராகவும் திகழ்ந்துள்ளதை அறிய
முடிகிறது. அரசினரின் உறவினர்களும் ; அறிவு, திறமை,
தியாகவுணர்வு, தன்னலமில்லாத தன்மை ஆகிய பண்புகளை
உடையவர்களும் ; அரச நிர்வாகம் பற்றிய நூலறிவும், அறநூல்
அறிவும் பெற்ற ஐம்பதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட அகவையும்
(வயது) நல்ல உடல் நலமும் உள்ளவர்களும் ஆகியோர்
அமைச்சர்களாகும் வாய்ப்பு இருந்தது. மகாபிரதானி,
உபபிரதானி, சிரபிரதானி, சர்வசிரபிரதானி, தண்ட நாயகம் போன்ற
பதவி பெற்றவர்களே அமைச்சர்களாகத் திகழ்ந்தனர்.

  • செயலகம்

    தென்னகம் முழுவதையும் ஆட்சி செய்த விசயநகரப் பேரரசின்
அலுவலர்களைத் தலைநகரில் இருந்த செயலகம் நிருவகித்தது.
இராயசம் என்னும் உயர்நிலை அலுவலரே இச்செயலகத்தின்
தலைவராக விளங்கினார். கர்ணீகம் எனும் பிரிவு அரசின்
கணக்குகளைக் கண்காணித்தது. சுவர்ண நாயகர் என்பவர் அரசின்
பொன் இருப்பின் பொறுப்பாளர் ஆவார். பிற அரண்மனைப்
பணிகளை மனெய பிரதானி என்பவர் மேற்கொண்டார். இவருக்குக்
கீழ்ப் பல அலுவலர்கள் இருந்தனர். வாசல் எனும் அதிகாரி
பேரரசர் மற்றும் அரண்மனைப் பாதுகாவல் பொறுப்பு
வகிப்பவராவார். அடப்பம் எனும் அலுவலர் மன்னனுக்கு
அவ்வப்போது வெற்றிலை, பாக்கு அளிக்கும் பணியோடு, அவருக்கு
நம்பிக்கைக்குரிய ஆலோசகராகவும் விளங்குபவராவர். அரசனது
ஆணையை நேரடியாக ஏற்று உடனடியாகச் செயல்படுத்தும்
அதிகாரிகள் அஜனதாரகர்,     அஜனபரிபாலகர்     என்றும்
அழைக்கப்பெற்றனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அரசு
செயலகத்தை நிருவகித்தனர்.

5.2.2 வருவாய்த் துறையும் வரிகளும்


    நிலவரி வருவாய்த்துறை ‘அத்வனம்’ எனப்பட்டது. இதற்கெனத்
தனி அமைச்சரும், அவருக்கு உதவியாக அலுவலர்களும்
இருந்தனர். ஊர்களில் வரித்தண்டல் செய்யும் அலுவலர் தானிகர்
ஆவார். முறையான பதிவேடுகள் மூலம் பதிவு செய்து வரிவசூல்
முறையைக் கையாண்டனர். நன்செய், புன்செய், தரம், நீர்பாய்ச்சல்,
பயிர் விளைச்சல், விளைபொருள்கள் முதலியவற்றிற்கேற்ப
வரித்தண்டல் செய்தனர். புன்செய் நிலத்தில் விளையும்
தானியங்கள், கிழங்கு வகைகள் ஆகியவற்றைத் தனித்தனியே
மதிப்பிட்டனர். மானாவாரிப் பயிருக்குத் தனியாகவும், ஆற்றுநீர்
அல்லது ஓடை நீர்ப் பாசன நிலங்களுக்குத் தனியாகவும் வரி
விதித்தனர்.

    வீடுகளுக்குச் செலுத்தப்படும் வரி மனைவரி அல்லது வாசல்
பணம் எனப் பெற்றது. கர்ணீக சோடி, தலையாரிக் காணம், நாட்டுக்
கணக்கு வரி, இராயச வர்த்தனை, அவசர வர்த்தனை, அதிகார
வர்த்தனை ஆகியவை நிருவாகச் செலவுகளுக்காக வாங்கப் பெற்ற
வரிகளாகும். அரசு கட்டளையைக் கொண்டு வருபவனுக்குச்
செலுத்தும் கட்டணம் நிருபச் சம்பளம் எனவும், வயல்களுக்கு
நீர்பாய்ச்சும் போது கண்காணிக்கும் அதிகாரிக்குச் செலுத்தும்
கட்டணம் நீர்ப்பாட்டம் எனவும், ஊர்க்காவலுக்குச் செலுத்தும்
கட்டணம் பாடிகாவல் என்றும் அழைக்கப் பெற்றன. காணிக்கை,
மகிமை, கட்டளை, பிரசாதக்காணிக்கை, பிடாரி     வரி,
விபூதிக்காணிக்கை, ஆடிப்பச்சை, கார்த்திகை காணிக்கை என்பன
கோயில்களுக்கும்,    சத்திரங்களுக்கும்    செலுத்தப்பெற்ற
கட்டணங்களாகும்.

5.2.3 நாணயங்கள்


    விசயநகர ஆட்சியில் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய
உலோகங்களாலான காசுகளே புழக்கத்தில் இருந்தன. வராகன்,
பரிதாபு, கால்வராகன் பணம், காதி, ஹாக, கத்யாணம், பகோடா
எனப்படும் பொற்காசுகளும், தார் எனப்படும் வெள்ளிக் காசும்,
பணம், ஜிதால் காசு எனப்படும் செப்புக்காசுகளும் புழக்கத்தில்
இருந்தன. இராமன், அனுமன், கருடன், இலக்குமி நாராயணன்,
வேங்கடேசர், விருபாட்சர், சங்கு, சக்கரம், பன்றி, யானை, எருது
ஆகிய உருவங்கள் பொறிக்கப்பெற்றும் மன்னர்களின் பெயர்கள்
எழுதப்பெற்றதுமான காசுகளை வெளியிட்டனர்.

5.2.4 பல்வேறு துறைகள்

    விசயநகர மன்னர்களின் ஆட்சியில், தொழில்துறை, நீதித்துறை,
காவல்துறை, படைத்துறை போன்ற பல்வேறு துறைகள் மிகவும்
சிறப்பாகச் செயல்பட்டு வந்தன.

  • தொழில் துறைகள்

    நெசவு, உலோகத் தொழில்கள், சர்க்கரை காய்ச்சுதல், கள்
இறக்குதல், பனைவெல்லம் தயாரித்தல், அவுரியிலிருந்து சாயம்
இறக்குதல், பருத்தி நூல் நூற்றல், பட்டு நெசவு, எண்ணெய்
எடுத்தல், தென்னை நாரிலிருந்து கயிறு திரித்தல், சுரங்கத் தொழில்,
படைக்கருவிகள் செய்தல், மரத்தொழில், உப்புகாய்ச்சுதல் எனப்
பலதரப்பட்ட தொழில்களும் விவசாயமும் சிறப்படைந்திருந்தன.
இத்தொழில்களைக் கண்காணிக்கவும், வரித்தண்டல் செய்யவும்
அதிகாரிகள் இருந்தனர்.

  • நீதித்துறை

    வழக்குகளைத் தர்ம சாத்திரங்கள் அடிப்படையிலேயே
விசாரித்து நீதி வழங்கினர். தனநாயகர், தண்ட நாயகர் என
அழைக்கப்பட்ட அலுவலர்கள்     நீதிபதிகளாக விளங்கினர்.
தர்மாசனம் எனும் ஊர் வழக்கு மன்றம், ஆயக்காரர் வழக்கு
மன்றம் எனும் பன்னிருவர் விசாரிக்கும் வழக்கு மன்றம்,
சாதிக்குழுக்களுக்கான வழக்கு மன்றம் எனப் பலதரப்பட்ட
நீதிமன்றங்கள்     செயல்பட்டன.     நாட்டுக்கோ, ஊருக்கோ,
அரசனுக்கோ தீங்கு செய்பவர்களைக் கடுமையாகத் தண்டித்தனர்.
திருட்டு வழக்குகளில் ஈடுபட்டோருக்கு, கைகால்களைக் குறைக்கும்
தண்டனை முறை வழக்கத்தில் இருந்தது.

  • காவல்துறை

    குற்றங்கள் நடவாதவாறு கண்காணிக்கக் காவல்துறை இருந்தது.
அரசே அமைத்த காவற்பிரிவு, ஊர்மக்கள் ஏற்படுத்திய காவற்பிரிவு,
இவை தவிர தலைநகர்களில் தனிக்காவற்பிரிவு ஆகியவை
இருந்தன. ஊர்க்காவல் தலையாரி என்போர் மூலமாக நிகழ்ந்தது.
நாட்டுக்காவலை, ‘பாடிகாவல்’ என்ற வரிமூலம் நிருவகித்தனர். அரச
காவற்காரர்கள் பலர் பின்னாளில் பாளையக்காரர்களாக மாறினர்.

  • படைத்துறை

    அரசர்கள் அமைத்த நிலைப்படை, நாயக்கர்கள், தளவாய்கள்,
பிரதானிகள் போன்றோர் தலைமையின் கீழ் இயங்கின.
அரசர்படையில் திறமையான வீரர்கள் மட்டுமே பணிபுரிய இயலும்.
அமைதிக்காலங்களிலும், போர்க்காலங்களிலும் படை வீரர்கள் தரும
விதிப்படியே செயல்பட்டனர். பேரரசுக்கு உட்பட்ட ஒவ்வோர்
நாட்டிலும் துர்க்கம் எனப்படும் பாதுகாப்புமிக்க கோட்டைகள்
இருந்தன. நீரால் சூழப்பட்ட கோட்டைகளை ஜலதுர்க்கம் என்றும்,
நிலத்தால் சூழப்பட்ட கோட்டையைத் தலதுர்க்கம் என்றும், மலை
மீது அமைந்த கோட்டையை கிரிதுர்க்கம் எனவும், காடுகளால்
சூழப்பட்ட கோட்டையை வனதுர்க்கம் எனவும் அழைத்தனர்.
இத்துர்க்கங்களை படைத் துறையே காத்தது. படைத் துறை ‘கந்த
சாரம்’ என அழைக்கப் பெற்றது. படைத்தலைவர் சேனாபதி,
சர்வசைன்ய அதிகாரி, தளவாய் எனப் பல்வேறு பெயர்களால்
குறிக்கப் பெற்றார். அரண்மனைப் பாதுகாப்பைத் தனிப்படை
நிருவகித்தது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)

விசயநகரப் பேரரசு எந்த ஆண்டு யாரால்
தோற்றுவிக்கப்பெற்றது?

(விடை)
2) விசயநகரப் பேரரசு எந்தெந்தக் குல மரபு
மன்னர்களால் ஆளப்பெற்றது?
(விடை)
3) தொடக்க காலத்தில் விசயநகரப் பேரரசின் கீழ்த்
திகழ்ந்த நாடுகள் யாவை?
(விடை)
4)

தலைக் கோட்டைப் போர் எந்த ஆண்டு
நிகழ்ந்தது? யார் யாருக்கு இடையே இப்போர்
நிகழ்ந்தது?

(விடை)
5)

விசயநகரப் பேரரசரின் கீ்ழ்ச் செயல்பட்ட மூன்று
அமைப்புகள் யாவை?

(விடை)
6)
வராகன் என்றால் என்ன?