1.3 பொருள் பற்றிய வகைமை

     ஒரு நூல் உணர்த்தும் பொருள்பற்றி அது இன்ன வகை என்று வழங்கும் வழக்கு     எல்லா மொழியாரிடத்தும் பெரும்பான்மையாக     உள்ளது.     தமிழிலக்கியத்திலும் தொன்றுதொட்டு வழங்கும் பாகுபாடுகள் சில உள்ளன.

 • அகமும் புறமும்
 •     உள்ளத்தளவில்     உணரப்படுவதாகிய காதல் பற்றிய பாடல்களை அகம் என்றும், புறத்தார்க்குப் புலனாகும் வண்ணம் நிகழக்கூடிய வீரம், கொடை முதலியன பற்றிய பாடல்களைப் புறம் என்றும் தமிழ்ச் சான்றோர் கொண்டிருந்தனர்.

      காதல் பற்றிய பாட்டுகளிலும் காதலர் இன்னார் என்று அறிய முடியாதவாறு இயற்பெயரோ இனப்பெயர் முதலியனவோ இல்லாமல் அமைந்த பாட்டுகளே அகம் என்றும், அவ்வாறு பொதுவாக அமையாத காதல் பாட்டுகள் புறம் என்றும் கொள்ளப்பட்டன.

      மக்கள் நுதலிய அகனைந் திணையும், சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்          (தொல்.பொருள்.அகத். 54)

  என்பது தொல்காப்பிய நூற்பா.

      நெடுநல்வாடை என்னும் பழம்பாட்டினுள் உயர்ந்த காதலரின் வாழ்க்கை  பாடப்பட்டுள்ளது. ஆயினும் அது அகப்பொருளாகக்     கருதப்படுதல்  இல்லை; காரணம், அப்பாட்டினுள் தலைவனுடைய வேல் பாண்டியர்க்கு உரிய வேப்பமாலை சூடி விளங்குவதாகப் பாடப்பட்டிருத்தலே ஆகும். “இப்பாட்டு சுட்டி     ஒருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகப்பொருளாமேனும் ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ என அடையாளப் பூ கூறினமையின் அகமாகாதாயிற்று” என நச்சினார்க்கினியர் எழுதியுள்ளார்.

  1.3.1 அகப்பொருள்

      அகப்பொருள்,     காதலின்     மன     நிலையையும் வாழ்க்கையையும் ஒட்டி ஐவகையாகப் பகுக்கப்பட்டு அகன் ஐந்திணை எனப்பட்டது. கூடல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் நிலைகள் பற்றி முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்று ஐவகையாக அமைந்தன. குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு எனப் பத்துப்பாட்டில் உள்ளவை இவ்வாறு அமைந்தனவே. பாலைக்கலி, நெய்தற்கலி எனக் கலித்தொகையில் அமைந்தனவும் காணத்தக்கன.

      நாம் வாழும் நிலத்தை நான்கு வகையாகப் பகுத்து நானிலம் என்று வழங்கும் மரபு உண்டு. மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த இடமும் முல்லை; வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல். இந்நால்வகை நிலங்களுள் மழையில்லாமல் வறட்சியுற்றுக கெடுவன குறிஞ்சியும் முல்லையும் ஆகும்.அவ்வாறு திரிந்த நிலையில் அவை பாலை என அழைக்கப்படும். இதனைச் சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகள் புறஞ்சேரி இறுத்த காதையுள்

      முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து      .....................      பாலை என்பதோர் படிவங் கொள்ளும்

  எனக் குறிப்பிடக் காண்கிறோம்.

      இந்நிலங்களில் வாழ்வோரின் வாழ்வு பற்றி அமையும் பாடல்கள் இந்நிலங்களின் பெயராலும் வழங்கும். காட்டில் வாழும் ஆயர்களின் காதல் வாழ்க்கை பற்றிய பாட்டுகள் முல்லைக்கலி என்று கலித்தொகையில் வழங்குதல் காணலாம்.

 • கோவை
 •     கோவை என்பது ஒரு சிற்றிலக்கிய நூல் வகை. திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை என்பன இன்றும் விரும்பிக் கற்கும் தன்மையுடையன.

      இக்கோவைப் பாடல் ஐந்திணைக்கும் உரிய அகப்பொருள் துறைகள் பற்றி நானூறு பாடல்கள் கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் பாடுவதாகும். பாட்டுடைத் தலைவன் ஒருவன் மேல் இது பாடப்படுவதாகும்.    

      அகப்பொருள் துறைகள் பலவற்றையும் பாடாமல் அவற்றுள் ஏதேனும் ஒருதுறை பற்றியே கோவை பாடுதலும் உண்டு. இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் மீது அமிர்த கவிராயர் ‘நாணிக் கண்புதைத்தல்’ என்ற அகத்துறையில் 400 பாடல்களைக் கொண்ட ஒரு துறைக்கோவையைப் பாடியுள்ளார். புலவர்களின் திறனைக் காட்டுவதாக மட்டுமே இருந்ததனால் அவ்வளவு     சிறப்புடைய     இலக்கிய     வகையாகக் கொள்ளப்படவில்லை எனலாம்.

 • உலா
 •     தலைவன் தெருவில் உலா வருதலையும் அவனை ஏழு வகைப் பருவ மகளிர் கண்டு காதல்கொள்ளுதலையும் பாடும் நூல் உலா எனப்படும். கலிவெண்பா என்னும் செய்யுள் வகையால் இதனைப் பாடுவது மரபு. அவ்வாறு பல மங்கையர் காதல் கொள்வதாகப் பாடுதல் அறநெறிக்கு மாறுபாடு ஆதலின் அம்மங்கையரைப் பரத்தையர் எனக் கொண்டார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்.

      ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப              (பொருள். புறத்திணை. 83)

  என்று தொல்காப்பியர் கூறியதனையே பிற்காலத்தார் ஏழு பருவமாகப் பகுத்து உலாச் செய்யுளாகப் பாடினார் என்பது அவர் கருத்து

      பேதை (5-7 வயது) பெதும்பை (8-12) மங்கை (13) மடந்தை (14-19) அரிவை (20-26), தெரிவை (27-32) பேரிளம்பெண் (40) (இலக்கண விளக்கப் பாட்டியல் 487-491) என ஏழு பருவ மகளிரும் உலா வரும் தலைவன் மீது காதல் கொள்வதாக புலவர் பாடுவதை உலா இலக்கியம் மரபாகப் பேணியுள்ளதைக் காண்கிறோம்.     மேலும்     அவ்வப்     பருவத்திற்குரிய விளையாட்டுக்களாகிய, சிற்றில், பாவை, கழங்கு, அம்மானை, ஊசல், கிளி, யாழ், புனலாட்டு (நீராடல்), பொழில் விளையாட்டு முதலியன     அந்தந்தப்  பருவ மங்கையர்க்கு உரிய விளையாடல்களாக அமைத்துப் பாடுவர் (பன்னிரு பாட்டியல் 137).

      முதலில் தோன்றிய உலா நூல் சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கயிலாய ஞான உலா. இது ஆதியுலா என்றழைக்கப்படும் பெருமை வாய்ந்தது.

 • மடல்
 •     தான் காதலித்தவளைப் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்து தன்னைத்தான் ஒறுத்து (வருத்தி) அழித்துக் கொள்ளும் காதலனுடைய மனநிலையை ‘மடல்’ என்னும் பெயரால் பாடி வந்தனர். பனை மடல்களால் குதிரை வடிவாகச் செய்து அதன் மீது இருந்து, தான் விரும்பிய நங்கையின் உருவம் தீட்டிய துணியை ஏந்தி ஊரறியத் துன்புறுதலை மடல் ஏறுதல் என்னும் அகப்பொருள் துறையாகக் கொள்வர். மடல் ஏறித் துன்புறுவதைக் கூறுவது அல்லாமல் மடல் ஏற முயல்வதாகக் கூறுவதும் உண்டு. அம்முயற்சி ஆண் மக்கட்கே உரியது என்றும் பெண்களுக்கு உரியது அன்று என்றும் மரபு வகுத்தனர்.

      கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்     பெண்ணின் பெருந்தக்கது இல் (1137்)

  என்பது திருக்குறள். பிற்காலத்தில் அம்மரபிற்கு விதிவிலக்கு வகுத்தனர். காரணம், சங்க இலக்கியத்திற்குப் பிறகு திருமங்கையாழ்வார் பெரிய திருமடல், சிறிய திருமடல் என்னும் பாடல்களை, தம்மைப் பெண்ணாகவும், கடவுளைத் தலைவனாகவும் கற்பனை செய்து பாடியதே ஆகும்.

      இது மரபுக்கு மாறானது என்றும், ஆயின் வடமொழி மரபை நோக்கிச் செய்தனம் என்றும் அவரே பெரிய திருமடலில் (36-39) கூறுகின்றார்.

      மடல் ஏறுதல் ஒத்த அன்புடைய ஐந்திணைக் காதலுக்குப் பொருந்தாது என்பது தொல்காப்பியர் கருத்து. பொருந்தாக் காமமாகிய பெருந்திணையின் பகுதியாக இதனை அவர் கூறியுள்ளார்.

      மடல் என்னும் இப்பாட்டைப் பாடுவோர் வெண்கலிப்பா என்னும் செய்யுள் வகையால் பாடுதலை மரபாகக் கொண்டனர். வருணகுலாதித்தன் மடல் என்பது இவ்வகைக்கு எடுத்துக் காட்டான நூலாகும்.

 • தூது
 •     பிள்ளைத்தமிழ், உலா முதலியவை தமிழிலக்கியத்திற்குச் சிறப்பானவை. தூது என்னும் நூல் வகையோ வடமொழியிலும் மற்ற இந்திய மொழிகளிலும் உள்ள வகை ஆகும். வடமொழியில் காளிதாசர் எழுதிய மேக சந்தேசம் (முகில் விடுதூது) ஐரோப்பியப் புலவர்களாலும் பாராட்டப் பட்டதாம்.

      காதலர் ஒருவர் மற்றொருவரிடம் தம் காதலைத் தெரிவிக்கத் தூது அனுப்புவதாகக் கூறுதலே இந்நூலின் கருத்து, மனிதரைத் தூதாக அனுப்புதலே அல்லாமல் பறவைகளையும் விலங்குகளையும் தென்றல் முதலிய உயிரில்லாப் பொருள்களையும் தூது விடுத்தல் மரபு. அன்னம், மயில், கிளி, முகில், பூவை, தோழி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு என்பன தூதாக அமைத்துப் பாடுவதற்குச் சிறந்தவை. அவை மட்டுமில்லாமல் விறலி, பணம், மான், நெல், புகையிலை, தமிழ் முதலியனவும் தூது செல்வதாக அமைந்த நூல்கள் தமிழில் உண்டு (விறலிவிடுதூது, பணவிடுதூது, மான்விடுதூது, நெல்விடுதூது,     புகையிலை விடுதூது, தமிழ்விடு தூது முதலியன). இவை தூது செல்லும் தகுதி பெற்று விளங்குவதாகவும், ஏனையவற்றிலும் சிறப்புற்று இருப்பதாகவும் புகழ்ந்து     கூறப்படும்.     அகத்திணைத் தூதுகளேயன்றிப் புறப்பொருள் தூதுகளும் உள்ளன. உலா, தூது, மடல் முதலிய இலக்கிய வகைகளைத் தொடக்கத்தில் பாடிய புலவர்கள் தத்தம் மன்னர்களைப் புகழ்வதை நோக்கமாகக் கொண்டு அவர்களைப் பாட்டுடைத் தலைவராக அமைத்துப் பாடினர். பிற்காலத்தில் மனிதரைப் புகழ்ந்து வயிறோம்புதல் இழுக்கு என்ற சமயக்கொள்கை வளர்ந்தபின், சமயப்பற்றுமிக்க புலவர்கள் தம் வழிபடு தெய்வத்தின் பெயராலேயே     அந்நூல்களைப்     பாடி     அமைக்கத் தலைப்பட்டனர். அவ்வாறு எழுந்த நூல்களில் காதலுக்கு இணையாக,     பக்தியுணர்ச்சி மிகுந்து விளங்கும். அகப்பொருளுக்கு உரிய சொற்களும் துறைகளும் இருந்தாலும் பொருளெல்லாம் வழிபாட்டு உணர்ச்சி மிகுந்து விளங்கும்.

      மனிதரைப் பாடினாலும், தெய்வத்தையே பாடினாலும் உலா முதலிய நூல்வகைகள் அமைப்பில் எந்த மாறுதலும் இன்றி ஒரே வகையினவாய் இருக்கின்றன. தலைவனுடைய புகழ், பெருமை முதலியவை மாறுமேயன்றி நூலமைப்பு மாறுதல் இல்லை.

  1.3.2 புறப்பொருள்

      பழங்காலத்துப் புறப்பொருள் பற்றிய     பாட்டுகள் பெரும்பாலும் போர் நிகழ்ச்சிகளைப் பற்றியனவாகவே அமைந்தன. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் புறத்திணை ஏழாகக் கூறினார் தொல்காப்பியர்.

      இவற்றுடன் கரந்தை, நொச்சி, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்பவற்றைக் கூட்டிப் பன்னிரண்டு ஆக்கினர் பிற்காலத்தார். பகைவருடைய பசுக்களைக் கவர்வதன் வாயிலாகப் போர் பற்றி அறிவித்தல் வெட்சி; பசுக்களை மீட்டல் கரந்தை. பகைவர் மேல் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சி, அப்படையை எதிர்த்தல் காஞ்சி. நிலையாமை கூறுதலே காஞ்சி என்பார் தொல்காப்பியனார். மதுரைக்காஞ்சி என்ற நீண்டதொரு பாட்டு பத்துப்பாட்டில் உள்ளது. அதில் போர்வெறி கொண்டு பல போர்களை நிகழ்த்தும் அரசவாழ்க்கை நிலையாமை உடையது என்ற அறிவுரை அமைந்துள்ளது. பகைவரின் மதிலை முற்றுகையிடல் உழிஞை, அந்நிலையில் மதிலைக் காத்தல் நொச்சி, போர்செய்தல் தும்பை, வெற்றி பெறுவது வாகை, புகழுக்குரியோரைப் பாடுதல் பாடாண் திணை. இவ்வாறு புறப்பொருள் எல்லாம் நாட்டை ஆளும் அரசனுடைய வீரமும் புகழும் பற்றி அமைதல் காணலாம்.

 • ஆற்றுப்படை
 •     புறப்பொருள் பற்றிய பாட்டுகளில், வளம் பெற்ற கலைஞர் வறுமையால் வாடிய கலைஞர்க்கு வழிகாட்டி, வள்ளல் ஒருவனிடம் அனுப்புவதாகப் பாடும் பாட்டு ஆற்றுப்படை எனப்படும். அது அந்தந்தக்     கலைஞர்களின் பெயரால் பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றுப்படை என வழங்கும். இத்தகைய ஆற்றுப்படைகள் நீண்ட பாட்டுகளாக, பத்துப்பாட்டில் ஐந்து உள்ளன. திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,  பொருநராற்றுப்படை,கூத்தராற்றுப்படை (மலைபடுகடாஅம்) என்பன அவை. இவையேயன்றி,      புறநானூற்றிலும்     பதிற்றுப்பத்திலும் ஆற்றுப்படைகளாகச் சில பாடல்கள் உள்ளன.

      செருக்களவஞ்சி, மறக்களவஞ்சி, செருக்களவழி முதலிய நூல்கள் போர் செய்யும் அரசனுடைய வீரச் செயல்களைக் குறித்தன.

      அரசனுடைய மலை, ஆறு, நாடு, ஊர், பறை, குதிரை, யானை, மாலை, பெயர், கொடி என்னும் பத்தையும் பாடுவது தசாங்கம் என்று கூறப்படும்.

      சின்னப்பூ, யானைத் தொழில், ஒலி அந்தாதி, இன்னிசைத் தொகை, ஐம்படை விருத்தம், நாழிகைக் கவி, விளக்குநிலை, ஆண்டுநிலை, பறைநிலை முதலிய பெயர்களால் நூல்கள் அமையும் என இலக்கணம் கூறும். அவ்வாறு அமைந்த நூல்கள் இப்போது இல்லை.

      இயன்மொழி வாழ்த்து, கடைநிலை, பெருமங்கலம் (பிறந்த நாள் வாழ்த்து), கடைக்கூட்டு நிலை (பரிசில் கடாதல்), பரிசில் விடை முதலிய பொருள்கள் பற்றித் தனிப்பாடல்கள் இயற்றுதல் உண்டு. புறநானூற்றில் அத்தகைய பழம்பாடல்கள் உள்ளன.

 • திருப்பள்ளியெழுச்சி
 •     தலைவன் உறங்கச் செல்லுதல் பற்றியும் விழித்தெழுதல் பற்றியும் பழங்காலம் முதல் பாட்டுகள் அமைந்து வருகின்றன. அவை கண்படை நிலை எனவும் துயிலெடை நிலை எனவும் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

      இவற்றுள் துயிலெடை நிலை என்பதே இடைக்காலத்தில் திருப்பள்ளியெழுச்சி என வழங்கப்பட்டது. மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சியும் தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சியும் இங்குக் குறிப்பிடத்தக்கன.

 • பிள்ளைத்தமிழ்
 •     தொல்காப்பியர் காலத்தில் ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என வித்திடப் பெற்ற பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கிய வகை தமிழில் மட்டும் காணப்படும் இலக்கிய வகையாக உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பாடிய அழகிய பாடல்களே பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கியத்தின் தோற்றம் எனலாம். பெரியாழ்வார் பாடல்களுக்குப் பிள்ளைத்தமிழ் என்ற பெயரில்லையாயினும் பிற்காலத்தில் அத்தகைய நூறு பாடல்கள் அடங்கிய நூலுக்கு அப்பெயர் அமைந்தது.

      சான்றோர்களையும் தேவர்களையும்     குழந்தையாகக் கற்பனை செய்து பாடும் இந்நூல் வகை, பொதுவாகப் பத்துப் பருவங்களாகப் பகுக்கப்படும். குழந்தையின் வயதில் மூன்றாம் திங்கள் முதல் மூன்றாம் ஆண்டு வரையில் அல்லது ஐந்தாம் ஆண்டு முதல் ஏழாம் ஆண்டு வரையில் பத்துப் பருவங்களாகப் பகுத்து, ஒவ்வொரு பருவத்திற்கும் பத்துப் பாட்டுகள் பாடப்படும், மூன்றாம் திங்கள், ஐந்தாம் திங்கள் என ஒற்றைப்படைத் திங்களையே அப்பருவங்களுக்குக் கொள்வர். ஏழாம் ஆண்டிற்கு மேலும் சில ஆண்டுகளைக் கொள்வதும் உண்டு. குழந்தை ஆணாயின் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும், பெண்ணாயின் பெண்பாற் பிள்ளைத்தமிழ் எனவும் குறித்து அவற்றிடையே வேறுபாடும் கொள்வர்.

      குழந்தையின் வளர்ச்சியையும் ஆடலையும் கற்பனை செய்து முதன்முதலில் பாடியவர் பெரியாழ்வார் என்று முன்னரே கூறினோம். அவரது,

      வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்     கண்ணன் கேசவன் நம்பி பிறந்தீனில்     எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட     கண்ணன் முற்றம் கலந்தள றாயிற்றே

  முதலிய பத்துப் பாடல்கள் கண்ணன் பிறப்பைப் பற்றியன.

      சீதக்கடலுள் அமுதன்ன தேவகி     கோதைக்குழலாள் அசோதைக்குப் போத்தந்த     பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்     பாதக் கமலங்கள் காணீரே      பவளவாயீர்வந்து காணீரே!

      முதலிய இருபது பாட்டுகள் கண்ணனுடைய கால்விரல், தொடை, உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், கைகள், கழுத்து, வாய், கண்கள், புருவங்கள், காதின் குழை, நெற்றி, முடி ஆகியவற்றின் அழகைக் காணுமாறு சுற்றுப்புறத்தாரை அழைப்பதாகக் கூறுவன.

      மாணிக்கம்கட்டி வயிரம் இடைகட்டி     ஆணிப்பொன்னாற் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்     பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்     மாணிக் குறளனே தாலேலோ      வையம் அளந்தானே தாலேலோ

  முதலான பத்துப்பாட்டுகள் தாலாட்டுப் பற்றியன. இவ்வாறே நிலாவை அழைத்தல், செங்கீரை ஆடுதல், சப்பாணி கொட்டுதல், தளர்நடை நடத்தல், ஓடிவந்து தன்னை அணைத்துக் கொள்ளுமாறு தாய் குழந்தையை அழைத்தல், குழந்தை தாயின் முதுகைக் கட்டிக் கொள்ளுதல், அப்பூச்சி காட்டுதல், முலையுண்ணுமாறு அழைத்தல், காதுகுத்தல், எண்ணெய் நீராட அழைத்தல் எனப் பலவாறு பத்துப்பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். அவற்றைக் கண்ட பிற்காலப் புலவர்கள் பல பருவங்கள் கொள்ளாமல் பத்துப்பருவம், நூறுபாட்டு என வரையறை அமைத்துக் கொண்டு பிள்ளைத் தமிழ் நூல்கள் பாடினர்.

      குழந்தையைத் திருமால் முதலிய தெய்வம் காக்க என வேண்டிக் கொள்ளும் காப்புப் பருவம், குழந்தை சில ஒலிகளை ஒலித்துத் தலை நிமிர்த்துத் தவழ்ந்தாடும் செங்கீரைப் பருவம், தாலாட்டுப் பருவம், கைகொட்டி ஆடும் சப்பாணிப் பருவம், முத்தம்தருக என அழைக்கும் முத்தப்பருவம், நடந்து வருக வருக என அழைக்கும் வருகைப்பருவம், நிலவுகாட்டி அழைக்கும் அம்புலிப்பருவம், சிறுமியரின் சிற்றிலைக் காலால் சிதைக்கும் சிற்றிற்பருவம், சிறுபறை கொண்டு ஒலிக்கும் சிறுபறைப் பருவம், நடைவண்டி உருட்டும் சிறுதேர்ப் பருவம் ஆகிய பத்தும் ஆண்பாற்கு உரியவை. இறுதி மூன்று பருவங்கள் பெண்பாற்கு அமையும்போது கழங்காடு பருவமாகவும் (அல்லது சிற்றில் இழைத்து விளையாடும் பருவமாகவும்) அம்மானை ஆடும் பருவமாகவும், ஊஞ்சல் (ஊசல்) ஆடும் பருவமாகவும் கூறப்படும்.

 • பரணி
 •     போர்க்களத்தில் யானைகளைக் கொன்று குவித்துக் குருதி வெள்ளம் பெருகச் செய்த அரசனது வீரச் செயலைப் புகழ்ந்து பாடுவதற்கென்று ஒரு நூல் வகை அமைந்தது. அது பரணி எனப்படும். அந்த அரசன் எழுநூறு யானைகளையோ ஆயிரம் யானைகளையோ கொன்ற பெருவீரனாக இருத்தல் வேண்டும் என்பர். கடவுள் வாழ்த்து முதலாக அரசனை வாழ்த்தல் ஈறாக 17 பொருண்மைகளில் பரணி பாடப்படும். இப்பொருண்மைகளில் உயர்வு நவிற்சியும் பேய்களைப் பற்றிய கற்பனைகளும் மிகுதியாக அமையும்.

      பரணி என்னும் நட்சத்திரம் காளிக்கு உரியதாகலின் நூலுக்கு அப்பெயர் அமைந்தது. செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி இவ்வகையில் பழைய நூலும் சிறந்த நூலும் ஆகும்.

 • கையறுநிலை
 •     பிரிவாற்றாத் துயரம் (புரவலன் அல்லது நண்பன் இறத்தலின் செயலற்று வருந்துதல்) பற்றிய பாட்டுகள் பல, பழங்காலம் முதல் இருந்து வருகின்றன. அவை கையிறுநிலை பாட்டு (Elegy) எனப்படும். புறநானூற்றில் 31 பாடல்கள் கையறுநிலையாகப் பாடப்பட்டவை. ஆங்கிலம் முதலிய பிறமொழி இலக்கியங்களிலும் கையறுநிலைப் பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றன.

 • கலம்பகம்
 •     பிற்காலத்தில் கலம்பகம் என்னும் நூல்வகை ஒன்று தோன்றிச் செல்வாக்குடன் விளங்கியது. பேராசிரியர் அதை ‘விருந்து’ என்பதற்கு எடுத்துக்காட்டாகக் குறித்தார். அது தன் பெயருக்கு ஏற்ப, பலவகைச் செய்யுளால் பலவகைப் பொருளும் கலந்து அமைவது. நூறு செய்யுள் உடையது. நூல் முழுவதும் அந்தாதியாக அமையும். பலவகைச் சுவையும் அகம், புறம் ஆகிய பொருள்களும் கலந்து வருவதால், இது பலரும் விரும்பிக் கற்ற நூலாக இருந்து வந்தது.

      பிள்ளைத்தமிழ், உலா, பரணி, கோவை, கலம்பகம் முதலியவற்றுள் இன்ன நூல்வகையை இன்ன செய்யுளால் இயற்றுவது என்றும், இத்தனை செய்யுளால் இயற்றுவது என்றும் காலப்போக்கில் மரபுகள் ஏற்பட்டன. தொடக்கத்தில் எழுதியவர் எப்படி எழுதினரோ அதையே பிற்காலத்தில் பின்பற்றினர். செய்யுள் பலவற்றின் அடிவரையறை அமைத்த வகையிலும் இவ்வாறே முன்னோரைப் பின்பற்றிய மரபுகள் ஏற்பட்டன.

       தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1.
  ‘வகைமை’ பற்றிக் குறிப்பெழுதுக.
  2.
  ‘வகைமை வளர்ச்சி’ - விளக்குக.
  3.
  ‘இலக்கிய வகைகளுள் முதன்மையானது பாட்டு’ - குறிப்பெழுதுக.
  4.
  ஆற்றுப்படைப் பாட்டு எவ்வாறு அமைகின்றது?