அண்ணாவின் படைப்புகள் தமிழ் மக்களுக்கு மொழி
உணர்வையும் இன உணர்வையும் ஊட்டுவதற்காகப்
பயன்பட்டன. அவரது படைப்புகளைப் புதினம், சிறுகதை,
நாடகம், சொற்பொழிவு, மடல்கள், கட்டுரைகள், ஊரார்
உரையாடல், அந்திக்
கலம்பகம் எனப் பலவாறு
வகைப்படுத்தலாம். அண்ணாவின்
படைப்புகள் தமிழர்
வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும்
தமிழ் தான் இழந்த
புகழை மீண்டும் அடைவதற்குமான
தூண்டுகோல்களாகப்
பயன்பட்டன. அண்ணாவின் உரைநடை தனித்தன்மை வாய்ந்தது.
அத்தனித் தன்மைகளை, பண்டிதர் தமிழும் பாமரர் தமிழும்,
உரைநடையில் கவிதை, உணர்ச்சிகளின் வெளிப்பாடு, வினா-
விடை அமைப்பு, நெடுந்தொடர் அமைப்பு, நிறுத்தற்
குறியீடுகள், பிறமொழிக் கலப்பு என வகைப்படுத்திக்
காணலாம். அண்ணாவின் உரைநடையில் இலக்கியக் கூறுகள்
மிகுந்து காணப்படுகின்றன. அவரது கற்பனையும் கருத்தும்
அவரது உரைநடையில் இலக்கியக் கூறுகளாகவும்
உத்திகளாகவும் மிளிரக் காணலாம். அத்தகைய உத்திகளை
எதுகை, மோனை, உவமை, உருவகம், சொல்லடுக்குகள் என
வகைப்படுத்திக் காணலாம். தமிழ் உரைநடை வரலாற்றில்
தனக்கென்று ஓர் சிறப்பிடம் பெற்றவர் அண்ணா. அவர் தமிழ்
உரைநடைக்கு வழங்கியிருக்கும் பங்களிப்பை, மடல் இலக்கியம்,
மேடைத் தமிழ், நாடகத் தமிழ், அந்திக் கலம்பகம், ஊரார்
உரையாடல் ஆகிய தலைப்புகளில் விரித்துக் காணலாம்.
அண்ணாவின் உரைநடை தமிழுக்குக் கிடைத்த புதிய
வரவாகும். இது உணர்ச்சி மிகுந்தது; உரையாடல் நிறைந்தது;
ஓசையுடையது; ஒலிக்குறிப்பு மிகுந்தது எனக் கூறலாம்.
இவற்றையெல்லாம் முழுவதும் உணர அண்ணாவின்
உரைநடை நூல்களைப் படித்து
அறிந்து கொள்ளுங்கள். |