3.3 உரைநடையின் சிறப்பியல்புகள் |
இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் எழுதிய அறிஞர்களில்
மறைமலை
அடிகள் குறிப்பிடத் தக்கவர். அவரது
உரைநடையின் தனிச்சிறப்பை முன்னரே கண்டோம். அந்த
உரைநடையைப் போன்றே பாவாணரின் உரைநடை
அமைந்திருக்கும் என்று கூறலாம். ஏனெனில் இருவர்தம்
உரைநடையும் தனித்தமிழில் அமைந்தவை என்பது குறிப்பிடத்
தக்கதாகும்.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களில் பலரும்
உரைநடையின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளனர்.
அவர்களுள் பாவாணரின் தொண்டு குறிப்பிடத் தக்கதாகும்.
அறிஞர்கள் சிலர் எதுகை மோனை அமைய வேண்டும்
என்னும் நோக்கத்திற்காக வடசொற்களைக் கலந்து
எழுதுவதற்குத் தயங்கியதில்லை. இன்னும் சிலர் மக்களுக்குப்
புரிய வேண்டும் என்றவொரு காரணத்தைச் சுட்டி
வடசொற்களைக் கலந்து
எழுதி வந்தனர். ஆனால் பாவாணர்
நோக்கம் எதுவாக இருப்பினும், தமிழில் எழுதுமிடத்துப்
பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதில் உடன்பாடு
கொள்ளவில்லை. அவ்வாறு எந்தவொரு பிறமொழிச்
சொல்லும்
கலவாமல் அனைத்துக் கருத்துகளையும் தனித்தமிழில்
இயல்பாக எழுதிக் காட்ட
முடியும் என்பதை நிறுவினார்.
தனித்தமிழில் பாவாணருக்கு இருந்த உறுதிப்பாட்டை
உணர்த்துவதே
அவரது உரைநடை எனலாம். இக்கருத்தே
பாவாணரின் உரைநடை தமிழுக்குத் தந்துள்ள நன்கொடை
எனினும்
அது மிகவும் பொருந்துவதாக அமையும்.
பாவாணரின் உரைநடைச் சிறப்பியல்புகளில் முதன்மை
பெறுவது, அது முற்றிலும் தனித்தமிழில் அமைந்தது
என்பதாகும். பாவாணர் தமிழில் எழுதும் போது வடமொழி,
ஆங்கிலம், உருது எனவரும் பிறமொழிகளில் இருந்து எந்தச்
சொல்லையும் கலந்து எழுதுவது இல்லை. நெடுங்காலமாகத்
தமிழில் கலந்துவிட்ட வடமொழிச் சொற்களைப் பாவாணர்
நீக்கினார். ஆங்கிலேயர் ஆட்சியின் காரணமாகத் தமிழில்
கலந்துவிட்ட ஆங்கிலச் சொற்களையும் அகற்றிட முனைந்தார்.
மக்கள் வழக்கில் கலந்து இருக்கும் இவ்விருமொழிச்
சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்களைத் தேடினார்.
அம்முயற்சியில் அந்தச் சொற்களுக்கு இணையாகத் தமிழ்
இலக்கியங்களில்
இருந்து சொற்களைக் கண்டறிந்தார். வாய்ப்புக்
கிடைக்கும்போது அவற்றிற்கான தமிழ்ச் சொற்களை
உருவாக்கிக் கொண்டார். எனவே, தனித்தமிழில் எழுத
வேண்டும் என்பதற்குப் பல
வழிகளிலும் முயன்று, அதில்
வெற்றியும் கண்டார். அவரது வெற்றிக்கு அவர் எழுதியிருக்கும்
நூல்கள் சான்றுகளாகத் திகழ்கின்றன. அந்த நூற்களில்
காணப்படும் தனித்தமிழ்நடை அவரின் தனித் தமிழ்ப்
பற்றுக்குச் சான்றாக விளங்குகின்றது. என்ன மாணவர்களே! இந்த நூற்றாண்டில் தமிழைத் தாய்
மொழியாகக் கொண்ட தமிழர்களுக்குத்
தனித்தமிழில் பேசவும்
எழுதவும் முடியுமா? என்ற அய்யம் எழுவதை
அறிந்திருப்பீர்கள். ஆனால்,
அந்த அய்யத்தைப் பொய் என்று
நிறுவியது பாவாணரின் உரைநடை என்பதைத் தெரிந்து
கொள்ளலாம். பாவாணரின் தனித்தமிழ் நடைக்கு ஓர் எடுத்துக்காட்டைக்
காண்போம். அவர் திருவள்ளுவர் பற்றிக் கூறியிருப்பதைக்
காண்பது பொருத்தமாக இருக்கும். ‘திருவள்ளுவர் ஆரியப் பல்சிறு தெய்வ வழிபாட்டை
நீக்கிக் கடவுள் வழிபாட்டை நிறுவியும் அருள் நிறைந்த
துறவியரே அந்தணர் என்று வரையறுத்தும், குலத்திற்கேற்பத்
தண்டனை கூறும் ஆரிய முறையை அகற்றி நடுநிலை
நயன்மை நாட்டியும் தமிழ்ப் பண்பாட்டைக் கிளர்வித்தார்.’ இந்தப் பத்தியில் தமிழ்ச் சொற்களைத் தவிரப் பிறமொழிச்
சொற்கள் எவையேனும் இடம் பெற்றுள்ளனவா? என்று
பாருங்கள். எந்தக் கருத்தையும் தனித் தமிழ்ச் சொற்களில்
இடர்ப்பாடு
இல்லாமல் எடுத்துக் கூற முடியும் என்ற கருத்தை
ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா? பாவாணரின் இத்தகைய
உரைநடையில் தொடர்கள் நீண்டு அமைந்திருப்பதாக நீங்கள்
கருதுவதையும் மறுப்பதற்கில்லை.
இதனைப் பற்றியும் விரிவாகக்
காணலாம்.
பாவாணரின் உரைநடையும் தமிழ் உணர்வும் |
அறிஞர்தம் உரைநடை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கம்
கருதி அமைந்திருத்தலைக் காண்கிறோம்.
பாவாணரின் நூல்கள்
அனைத்தும் தமிழரின் பெருமையை எடுத்துச் சொல்லித் தமிழ்
மக்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டுவதையே நோக்கமாகக்
கொண்டுள்ளன. ஆதலின் பாவாணரின் உரைநடையில் தமிழ்
உணர்வு பின்னிப் பிணைந்து நிற்கின்றது. எனவே பாவாணரின்
உரைநடை தமிழ் உணர்வு பரப்புவதற்கான கருவியாக
அமைந்தது என்று கொள்வதில் தவறில்லை.
வடமொழி, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொல்
கலவாமல் தமிழில் எக்கருத்தையும்
சொல்ல இயலும் என்பதே
தனித்தமிழ் நடைக்கு அடிப்படையாகும். தமிழில் நிலவிய
மணிப்பிரவாள
நடையும் இதனால் நீங்கியது.
பாவாணரின் உரைநடை தனித் தமிழில் அமைந்திருப்பது
மகிழ்ச்சிக்கு உரியதாகும். ஆனால் அவரது தொடர்கள் சற்று
நீண்டு காணப்படுகின்றன என்பதும் உண்மைதான்.
இதனைப்
பாவாணர் உரைநடையின் தனித்தன்மையாக ஏற்றுக்
கொள்ளலாம்.
ஒரு தொடரே ஒரு பத்தியாதல்/நெடுந்தொடர் |
பாவாணரின் தமிழ்த் தொடர்கள் நெடுந்தொடர்களாக
உள்ளன. சிலவேளையில் ஒரு
சொற்றொடரே ஒரு
பத்தியாகவும் அமைதல் உண்டு. இவ்வகைத் தொடருக்கு ஓர்
எடுத்துக் காட்டைக்
காண்போம். ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலில் வரும் ஒரு பத்தி. இங்கு
எடுத்துக் காட்டப் பெறுகிறது. ‘ஐந்திணைகளும் தோன்றிய பின் முதற்கண் குறிஞ்சியில்
வேட்டையாடும் குறவரும், முல்லையில்
முந்நிரை வளர்க்கும்
இடையரும், மருதத்தில் உழுதொழிலைச் சிறப்பாகச் செய்யும்
உழவரும், பாலையில் வழிப்பறித்துக் கொள்ளையடிக்கும்
மறவரும், நெய்தலில் மீன்பிடிக்கும் படவரும் ஆகப்
பெரும்பாலும் ஒவ்வொரு வகுப்பாரே வாழ்ந்திருப்பர்.’ இப்பத்தியில்
ஐந்திணை மக்களைப் பற்றிய செய்திகள்
இடம் பெற்றுள்ளன. இச் செய்திகளைத் தொகுத்துக்
கூறுவதைப் போன்று இப்பத்தி அமைந்துள்ளது. இத்தொடர்
நீண்டதாக இருப்பினும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து
கொள்வதற்கு ஏற்ற வகையில் பாவாணர் குறவரும், இடையரும்,
உழவரும், மறவரும், படவரும் என்று ‘உம்’ என்னும்
சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இந்த
‘உம்’ என்னும் சொல்
ஆங்கிலத்தில் இரு தொடர்களை இணைப்பதற்குப் பயன்படும்
‘AND’ என்னும் இணைப்புச் சொல்லுக்கு (Conjunction)
இணையான தமிழ்ச் சொல் என்பதை நாம் நினைவில்
கொள்ளுதல் வேண்டும்.
பாவாணரின் உரைநடையில் குறுந்தொடர்கள் அல்லது
சிறிய தொடர்களையும் காணலாம். பாவாணரின்
பொழிவுகளில்
அமையும் உரைகள் சிறு சிறு தொடர்களாக உள்ளன.
அவ்வுரைகளும் நூல்களாக வந்துள்ளன. எனவே அவற்றில்
இருந்து பாவாணரின் குறுந்தொடருக்கு எடுத்துக் காட்டு
ஒன்றைக் காண்போம். ‘பாவாணர் உரைகள்’ என்னும் நூலில் இருந்து ஒரு பத்தி
கீழே தரப்பட்டிருக்கிறது. “இந்த நிலையிலே தொல்காப்பியம் ஒரு பழமையான
நூல்தான். இருந்தாலும் அது ஆரியம் வந்த
பிறகு ஏற்பட்ட
நூல். அதிலே வடசொல் சொல்லப் பட்டிருக்கிறது. ஆரியரைப்
பற்றிய
குறிப்பும் இருக்கிறது. அதற்கு முற்பட்ட தமிழ்நூல்
அனைத்தும் அழிந்தன. அழிக்கப்பட்டு விட்டன.
அதை அறிய
வேண்டும்.” இப்பத்தியின் தொடர்கள் படிப்பவரின் உள்ளத்தில் இனிய
தமிழின் ஏற்றத்தைப் பதியச்
செய்கின்றன.
பாவாணரின் உரைகள் சிறு தொடர்களாக இருப்பதுடன்
அவை சில வேளைகளில் வினா-விடை
அமைப்பிலும்
அமைந்துள்ளன. இவ்வகைத் தொடருக்கும் ஓர் எடுத்துக்
காட்டைக் காண்போம். ‘பாவாணரின் உரைகள்’ என்ற நூலில் இருந்து இப்பத்தி
எடுத்தாளப் பெறுகிறது. “மத்தியானம் என்ற சொல் எந்தச் சொல் தெரியுமா?
மத்திய அயம் என்ற வடசொல். அதற்கு வழங்கிய
தமிழ்ச்சொற்கள் எவை எவை தெரியுமா? உருமம்,
உச்சிவேளை, நண்பகல் என்று மூன்று
சொற்கள் ஆகின்றன.
திருநெல்வேலியிலே ‘உருமம்’ என்பார். அது வேனிற்
காலத்திலே
சொல்ல வேண்டும்.” வினா-விடையில் அமையும் போது தொடர்களும் எளிய
தொடர்களாக அமைந்து விடுதலைக் காண்கிறோம்.
ஆதலின்
பாவாணரின் உரைகளில் அவரது கட்டுரைகளைவிட எளிய
தொடர்கள் மிகுதியாக
இடம் பெற்றுள்ளன எனக்
கொள்ளலாம்.
பாவாணரின் பொழிவுகளில் கேட்போரின் உள்ளத்தில்
கருத்துகள் சென்று சேர்வதற்காக எதுகை,
மோனைகள் இடம்
பெற்றுள்ளன எனலாம். தமிழின் சிறப்பினைப் பாவாணர்
எடுத்துரைக்கும்
போது இந்த எதுகை மோனைகள் சிறப்பாக
அமைந்துள்ளன.
"தமிழ்மொழி,
தொன்மையும் முன்மையும்
எண்மையும் ஒண்மையும்
(எளிமையும்)
தனிமையும் இனிமையும்
தாய்மையும் தூய்மையும்
செம்மையும் மும்மையும்
கலைமையும் தலைமையும்
இளமையும் வளமையும்
முதுமையும் புதுமையும்
ஒருங்கே கொண்ட
உயர்தனிச் செம்மொழி ஆகும்". இந்தப் பத்தியில் தொன்மை-முன்மை, இளமை-வளமை
என்பன எதுகைகள். ஒருங்கே-உயர்தனி என்பது மோனை
என்பதையும் நீங்கள் அறிவீர்கள் அல்லவா? அதனை இங்கு
நினைவு கூர்ந்து பாருங்கள். பாவாணரின் எதுகை மோனைச்
சிறப்பு உங்களுக்கு நன்கு புலப்படும்.
பாவாணர் கருத்துகளை விளக்குவதற்கு உவமைகளைக்
கையாண்டிருப்பது அவரது உரைநடையின் சிறப்பியல்புகளில்
ஒன்றாகும். உவமைகள் கவிதைக்கு மட்டுமன்றிக் கட்டுரைக்கும்
அழகும் தெளிவும் கூட்டும் அல்லவா?
அவ்வகையில் அமைந்த
பாவாணரின் உவமைக்கு எடுத்துக் காட்டைக் காண்போம். தமிழிலக்கிய வரலாறு என்னும் நூலின் முகவுரையில்
பாவாணர், ‘இங்ஙனம் ஆனைகொன்றான் என்னும் மலைப்பாம்பு ஒர்
யானை முழுவதையும் விழுங்கினாற் போன்று,
இனம், மொழி,
இலக்கியம், நாகரிகம், பண்பாடு என்னும் ஐங்கூறமைந்த தமிழம்
முழுவதையும் விழுங்கக் கவ்வி விட்டது’ என்று எழுதுகிறார்.
இதிலே மலைப்பாம்பின் உவமை பாவாணரின் உள்ளக்
கருத்தைத் தெளிவாகக் கூறுவதைக் காண்கிறோம். தமிழின் செம்மையைக் கூறுவதற்குப் பாவாணர்
பயன்படுத்தியிருக்கும் ஓர் உவமை நமது உள்ளத்தைக்
கவர்ந்து
நிற்கின்றது. “தமிழ் இயல்பாகவே செம்மையுடைமையின், தமிழ் எனினும்
செந்தமிழ் எனினும் ஒன்றே. தமிழின் திரிபாகிய
கொடுந்தமிழினின்றும் பிரித்துக் கூறவே செந்தமிழ்
எனப்பட்டது. இயல்பான
பால், தண்ணீர்ப் பாலினின்றும்
பிரித்துக் கூறத் தனிப்பால் எனப்பட்டாற் போல.” இந்தப் பத்தியில் வரும் ‘பால்-தண்ணீர்ப்பால்-தனிப்பால்’
உவமை எளிமையானது. கருத்தை
எளிமையாகப் புரிய
வைக்கிறது.
தமிழில் செய்யுள் இயற்றுபவர்கள் இருசீர்களுக்கு இடையே
புணர்ச்சி விதிகளைப் பின்பற்றி
எழுதுதல் வேண்டும். ஆனால்
இந்த முறையைத் தமிழ் உரைநடையிலும் பின்பற்றியவர்
பாவாணர்
என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதற்குப் பாவாணர்
எழுதிய திருக்குறள் மரபுரை என்னும் நூலில்
இருந்து ஓர்
எடுத்துக்காட்டைக் காட்டலாம். “அக்காலத்தில் மொழியாராய்ச்சியின்மையாலும்,
வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப் பட்டமையாலும்,
தமிழருட் பெரும் புலவருக்கும் தென் சொல் வடசொல்
வேறுபாடு தெரியாதிருந்தது.” இப்பத்தியில் மொழியாராய்ச்சி + இன்மையால் என்பதைப்
புணர்ச்சி விதியின்படி உயிர்முன் உயிர்வரின் ‘உடம்படுமெய்’
தோன்றும் என்னும் விதிக்கு இணங்க 'இன்மையால்' என்பதை
'யின்மையால்' என்று (ய்+இ) எழுதியுள்ளமை காண்க. இதைப் போன்றே, ‘தமிழருள்+பெரும்’ என வருமிடத்து,
‘ள்’ நிலைமொழி ஈறாக வந்து வல்லினம் வருமொழியில்
முதலில் வரும்போது
அது டகர மெய்யாக (ட்)த் திரியும்
என்னும் இலக்கண விதிக்கு
ஏற்ப ‘தமிழருட்’ என்று பாவாணர்
எழுதியிருப்பதையும்
காணலாம். |