கோப்பெருஞ்சோழன்

20. பாலை
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!

உரை

செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கோப்பெருஞ் சோழன்

53. மருதம்
எம் அணங்கினவே-மகிழ்ந! முன்றில்
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல்,
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,
நேர் இறை முன்கை பற்றி,
சூரரமகளிரோடு உற்ற சூளே.

உரை

வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன்

129. குறிஞ்சி
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய் அத்தை;
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.

உரை

தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன்

147. பாலை
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி-கனவே!-
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே.

உரை

தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது. - கோப்பெருஞ்சோழன்