91-100

91. மருதம்
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்,
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே!
ஓவாது ஈயும் மாரி வண் கை,
கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போலச்
சில ஆகுக, நீ துஞ்சும் நாளே!

பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரை த்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிரிந்து வந்தவழி வேறுபட்ட கிழத்தியைத் தோழி கூறியதூஉம் ஆம். - ஒளவையார்

92. நெய்தல்
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து-
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை,
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின், விரையுமால் செலவே.

காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு, சொல்லியது. - தாமோதரன்

93. மருதம்
நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய்,
இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே?

வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லையார்

94. முல்லை
பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே;
யானே மருள்வென்?-தோழி!-பானாள்
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்
என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?-
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே.

பருவம் கண்டு ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்கு, ''ஆற்றுவல்'' என்பதுபடத் தலைமகள் சொல்லியது. - கதக்கண்ணன்

95. குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கபிலர்

96. குறிஞ்சி
''அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?'' என்றி; யான் அது
நகை என உணரேன்ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,

தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது- அள்ளூர் நன்முல்லை

97. நெய்தல்
யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே.
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகி மன்றத்தஃதே.

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வெண்பூதி

98. முல்லை
''இன்னள் ஆயினள் நன்னுதல்'' என்று, அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை
நீர் வார் பைம் புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோக்குளமுற்றன்

99. முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.

பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். ''எம்மை நினைத்தும் அறிதிரோ?'' என்ற தோழிக்குச் சொல்லியது. - ஒளவையார்

100. குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.

பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்