|
|
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை |
|
இன்னர் என்னும் இன்னாக் கிளவி- |
|
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான் |
|
உழவன் யாத்த குழவியின் அகலாது, |
|
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் |
|
திரு மனைப் பல் கடம் பூண்ட |
|
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே? |
உரை |
|
தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலம்கிழார் |
|
விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல் |
|
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி, |
|
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி, |
|
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி, |
|
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ- |
|
கலிழ் கவின் அசைநடைப் பேதை |
|
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே? |
உரை |
|
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.- மடல் பாடிய மாதங்கீரன் |
|
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ |
|
நம் போல் பசக்கும் காலை, தம் போல் |
|
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு |
|
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?- |
|
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை |
|
மென் மயில் எருத்தின் தோன்றும் |
|
புன் புல வைப்பிற் கானத்தானே. |
உரை |
|
பருவ வரவின்கண், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார் |
|
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை; |
|
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே- |
|
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு, |
|
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்- |
|
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை |
|
நுண் வலைப் பரதவர் மட மகள் |
|
கண் வலைப் படூஉம் கானலானே. |
உரை |
|
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன் |
|
''நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி, |
|
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து, |
|
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்'' எனச் |
|
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப் |
|
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி, |
|
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள் |
|
கல்மிசைக் கவியும் நாடற்கு, என் |
|
நல் மா மேனி அழி படர் நிலையே? |
உரை |
|
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,''வேறு பட்டாயால்'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
|
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த |
|
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி |
|
எயிறு என முகையும் நாடற்குத் |
|
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே, |
உரை |
|
பருவ வரவின், ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி. |
|
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி |
|
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி, |
|
பெரு வரை நீழல் உகளும் நாடன் |
|
கல்லினும் வலியன்-தோழி!- |
|
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே. |
உரை |
|
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர் |
|
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு |
|
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்- |
|
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்- |
|
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே. |
உரை |
|
பருவம் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
|
இன்றே சென்று வருதும்; நாளைக் |
|
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக, |
|
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி |
|
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப, |
|
கால் இயல் செலவின், மாலை எய்தி, |
|
சில் நிரை வால் வளைக் குறுமகள் |
|
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே. |
உரை |
|
வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன். |
|
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
|
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர் |
|
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி |
|
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய |
|
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள், |
|
நல் ஏறு இயங்குதொறு இயம்பும் |
|
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே? |
உரை |
|
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன். |
|