251-260

251. முல்லை
மடவ வாழி-மஞ்ஞை மா இனம்
கால மாரி பெய்தென, அதன் எதிர்
ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன;
கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே!
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,
புது நீர் கொளீஇய, உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.

பிரிவிடைத் தோழி. ''பருவம் அன்று; பட்டது வம்பு'' என்று வற்புறுத்தியது.- இடைக் காடன்.

252. குறிஞ்சி
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை, இன் முகம் திரியாது,
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி,
''மடவைமன்ற நீ'' எனக் கடவுபு
துனியல் வாழி-தோழி!-சான்றோர்
புகழும் முன்னர் நாணுப;
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே?

தலைமகன் வரவறிந்த தோழி, ''அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.- கிடங்கில் குலபதி நக்கண்ணன்

253.பாலை
கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின்,
விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல்
பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ-
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்,
புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - பூங்கண்ணன்

254. பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன; வாரா-தோழி!-
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்-
''செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால்'' என, வரூஉம் தூதே.

பருவம் கண்டு வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - பார்காப்பான்

255. பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி,
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!-
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.

''இடைநின்று மீள்வர்'' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- கடுகு பெருந் தேவன்

256. பாலை
''மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப்
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?'' எனச்
சொல்லாமுன்னர், நில்லா ஆகி,
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.

பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது.

257. குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஒராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்;
அகலினும் அகலாதாகி
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே.

வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உறையூர்ச் சிறுகந்தன்

258. மருதம்
வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே;
அலராகின்றால்-பெரும!-காவிரிப்
பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த
ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை,
அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்,
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே.

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம். - பரணர்

259. குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து,
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல்,
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்,
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல்
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ?
நெஞ்சம் நன்றே, நின் வயினானே.

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, ''யானே பரி கரிப்பல்''என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர்.

260. பாலை
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.

அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார்.