வெண் மணற் பொதுளிய
பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே?
உரை
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன்
செவ்வி கொள் வரகின் செஞ் சுவற் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள்மறி கவ்விக் கடன் கழிக்கும்
கார் எதிர் தண் புனம் காணின், கைவளை,
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
வெண் கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல,
சோர்குவஅல்ல என்பர்கொல்-நமரே?
உரை
வினைவயிற் பிரிந்த இடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது. - நாகம் போத்தன்
''உள்ளது சிதைப்போர்'' உளர் எனப்படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு'' எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி-தோழி-என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூதிடைய நீர் இல் ஆறே.
உரை
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்கு, ''அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்''. என்று, கிழத்தி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?-
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.
உரை
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன்
வைகா வைகல் வைகவும் வாரார்;
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்;
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
உரை
பருவம் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது. - பூதத் தேவன்
உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்,
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.
உரை
இரந்துபின் நின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்.- எயிற்றியனார்
அம்ம வாழி-தோழி-காதலர்
இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ-
முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,
விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,
செழும் பல் குன்றம் நோக்கி,
பெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே?
உரை
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, ''நம்மைத் துறந்து வாரார்'' என்று கவன்றாட்கு,பருவம் காட்டி, தோழி, ''வருவர்'' எனச் சொல்லியது, - கச்சிப்பேட்டு நன்னாகையார்.
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ-
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?
உரை
தலைமகனது வரவுணர்ந்து, ''நம்பெருமான் நமக்கு அன்பிலன்'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர்
வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்,
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.
உரை
''காலம் கண்டு வேறுபட்டாள்'' எனக் கவன்ற தோழிக்கு, ''காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், ''கொடியர்'' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்''என்று, தலைமகள் சொல்லியது
''காமம் தாங்குமதி'' என்போர்தாம் அஃது
அறியலர்கொல்லோ? அனை மதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம்ஆயின்,
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க்
கல் பொரு சிறு நுரை போல,
மெல்லமெல்ல இல்லாகுதுமே.
உரை
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது. - கல்பொருசிறுநுரையார்.