Manimeagalai

23 சிறைவிடு காதை

 
   

[ மணிமேகலை சிறைவீடுசெய்த இராசமா தேவி

 

குறைகொண்டிரப்பச் சீலம்கொடுத்த பாட்டு ]

 
   
மன்னவன் அருளால் வாசந் தவைஎனும்
நல்நெடுங் கூந்தல் நரைமூ தாட்டி
அரசர்க்கு ஆயினும் குமரற்கு ஆயினும்
திருநிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும்
5
கட்டுரை விரித்தும் கற்றவை பகர்ந்தும்
பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள்
இலங்குஅரி நெடுங்கண் இராசமா தேவி
கலங்குஅஞர் ஒழியக் கடிதுசென்று எய்தி
அழுதுஅடி வீழாது ஆயிழை தன்னைத்
10
தொழுதுமுன் நின்று தோன்ற வாழ்த்திக்
கொற்றம் கொண்டு குடிபுறம் காத்தும்
செற்ற தெவ்வர் தேஎம்தமது ஆக்கியும்
தருப்பையின் கிடத்தி வாளின் போழ்ந்து
செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென
15
மூத்து விளிதல்இக் குடிப்பிறந் தோர்க்கு
நாப்புடை பெயராது நாணுத்தகவு உடைத்தே
தன்மண் காத்தன்று பிறர்மண் கொண்டன்று
என்எனப் படுமோ நின்மகன் மடிந்தது!
மன்பதை காக்கும் மன்னவன் தன்முன்
20
துன்பம் கொள்ளேல் என்றுஅவள் போயபின்,
கையாற்று உள்ளம் கரந்துஅகத்து அடக்கிப்
பொய்யாற்று ஒழுக்கம் கொண்டுபுறம் மறைத்து
வஞ்சம் செய்குவன் மணிமே கலையைஎன்று
அம்சில் ஓதி அரசனுக்கு ஒருநாள்
25
பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசுஇயல் தான்இலன்
கரும்புஉடைத் தடக்கைக் காமன் கையற
அரும்பெறல் இளமை பெரும்பிறிது ஆக்கும்
அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச்
30
சிறைதக் கன்று செங்கோல் வேந்துஎனச்
சிறப்பின் பாலார் மக்கள் அல்லார்
மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது
அறிந்தனை ஆயின்இவ் ஆயிழை தன்னைச்
செறிந்த சிறைநோய் தீர்க்கென்று இறைசொல,
35
என்னோடு இருப்பினும் இருக்கஇவ் இளங்கொடி
தன்ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்என்று
அங்குஅவள் தனைக்கூஉய் அவள்தன் னோடு
கொங்குஅவிழ் குழலாள் கோயிலுள் புக்குஆங்கு,
அறிவு திரிந்துஇவ் அகல்நகர் எல்லாம்
40
எறிதரு கோலம்யான் செய்குவல் என்றே
மயல்பகை ஊட்ட மறுபிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக,
கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய்
வல்லாங்குச் செய்து மணிமே கலைதன்
45
இணைவளர் இளமுலை ஏந்துஎழில் ஆகத்துப்
புணர்குறி செய்து பொருந்தினள் என்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்குஉரை என்றே
காணம் பலவும் கைநிறை கொடுப்ப,
ஆங்குஅவன் சென்றுஅவ் ஆயிழை இருந்த
50
பாங்கில் ஒருசிறைப் பாடுசென்று அணைதலும்,
தேவி வஞ்சம் இதுஎனத் தெளிந்து
நாஇயல் மந்திரம் நடுங்காது ஓதி
ஆண்மைக் கோலத்து ஆயிழை இருப்பக்
காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி
55
அரசர் உரிமையில் ஆடவர் அணுகார்
நிரயக் கொடுமகள் நினைப்புஅறி யேன்என்று
அகநகர் கைவிட்டு ஆங்குஅவன் போயபின்,
மகனைநோய் செய்தாளை வைப்பது என்என்று
உய்யா நோயின் ஊண்ஒழிந் தனள்எனப்
60
பொய்ந்நோய் காட்டிப் புழுக்குஅறை அடைப்ப
ஊண்ஒழி மந்திரம் உடைமையின் அந்த
வாள்நுதல் மேனி வருந்தாது இருப்ப,
ஐஎன விம்மி ஆயிழை நடுங்கிச்
செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன்
65
என்மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன்நேர் அனையாய் பொறுக்கென்று அவள்தொழ,
நீல பதிதன் வயிற்றில் தோன்றிய
ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை
அழல்கண் நாகம் ஆர்உயிர் உண்ண
70
விழித்தல் ஆற்றேன் என்உயிர் சுடுநாள்
யாங்குஇருந்து அமுதனை இளங்கோன் தனக்குப்
பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை
உடற்குஅழு தனையோ உயிர்க்குஅழு தனையோ
உடற்குஅழு தனையேல் உன்மகன் தன்னை
75
எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே
உயிர்க்குஅழு தனையேல் உயிர்புகும் புக்கில்
செயப்பாட்டு வினையால் தெரிந்துஉணர்வு அரியது
அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய்தொடி
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்
80
மற்றுஉன் மகனை மாபெருந் தேவி
செற்ற கள்வன் செய்தது கேளாய்:
மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை
உடல்துணி செய்துஆங்கு உருத்துஎழும் வல்வினை
நஞ்சுவிழி அரவின் நல்உயிர் வாங்கி
85
விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே!
யாங்குஅறிந் தனையோ ஈங்குஇது நீஎனில்
பூங்கொடி நல்லாய் புகுந்தது இதுஎன
மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலாத்
தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா
90
உற்றதை எல்லாம் ஒழிவுஇன்று உரைத்து,
மற்றும் உரைசெயும் மணிமே கலைதான
மயல்பகை ஊட்டினை மறுபிறப்பு உணர்ந்தேன்
அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன்
கல்லாக் கயவன் கார்இருள் தான்வர
95
நல்லாய் ஆண்உரு நான்கொண்டு இருந்தேன்,
ஊண்ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ
மாண்இழை செய்த வஞ்சம் பிழைத்தது.
அந்தரம் சேறலும் அயல்உருக் கோடலும்
சிந்தையின் கொண்டிலேன் சென்ற பிறவியில்
100
காதலன் பயந்தோய் கடுந்துயர் களைந்து
தீதுஉறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்
தையால் உன்தன் தடுமாற்று அவலத்து
எய்யா மையல்தீர்ந்து இன்உரை கேளாய்:
ஆள்பவர் கலக்குற மயங்கிய நல்நாட்டுக்
105
காருக மடந்தை கணவனும் கைவிட
ஈன்ற குழவியொடு தான்வேறு ஆகி
மான்றுஓர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப்
புதல்வன் தன்னைஓர் புரிநூல் மார்பன்
பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க
110
ஆங்குஅப் புதல்வன் அவள்திறம் அறியான்
தான்புணர்ந்து அறிந்துபின் தன்உயிர் நீத்ததும்,
நீர்நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும்
சூல்முதிர் மடமான் வயிறுகிழித்து ஓடக்
கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப
115
மான்மறி விழுந்தது கண்டு மனம்மயங்கிப்
பயிர்க்குரல் கேட்டுஅதன் பான்மையன் ஆகி
உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர்கண்டு
ஓட்டி எய்தோன் ஓர்உயிர் துறந்ததும்
கேட்டும் அறிதியோ வாள்தடங் கண்ணி!
120
கடாஅ யானைமுன் கள்கா முற்றோர்
விடாஅது சென்றுஅதன் வெண்கோட்டு வீழ்வது
உண்ட கள்ளின் உறுசெருக்கு ஆவது
கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்!
பொய்யாற்று ஒழுக்கம் பொருள்எனக் கொண்டோர்
125
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ?
களவுஏர் வாழ்க்கையர் உறூஉம் கடுந்துயர்
இளவேய்த் தோளாய்க்கு இதுஎன வேண்டா
மன்பேர் உலகத்து வாழ்வோர்க்கு இங்குஇவை
துன்பம் தருவன துறத்தல் வேண்டும்
130
கற்ற கல்வி அன்றால் காரிகை
செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்
மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் என்போர்
அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்
திருந்துஏர் எல்வளை செல்உலகு அறிந்தோர்
135
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்
துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர்
மன்பதைக்கு எல்லாம் அன்புஒழி யார்என
ஞான நல்நீர் நன்கனம் தெளித்துத்
தேன்ஆர் ஓதி செவிமுதல் வார்த்து
140
மகன்துயர் நெருப்பா மனம்விறகு ஆக
அகம்சுடு வெந்தீ ஆயிழை அவிப்ப,
தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து
மாறுகொண்டு ஓரா மனத்தினன் ஆகி
ஆங்குஅவள் தொழுதலும், ஆயிழை பொறாஅள்
145
தான்தொழுது ஏத்தித் தகுதி செய்திலை
காதலன் பயந்தோய் அன்றியும் காவலன்
மாபெருந் தேவிஎன்று எதிர்வணங் கினள்என்.
   

சிறைவிடு காதை முற்றிற்று.