5.5 தொகுப்புரை

தொல்காப்பியர் காலத் தமிழிலிருந்து, சங்ககாலத் தமிழ் பெரும்பாலும் வேறுபட்டு அமையவில்லை ; ஒத்தே அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்க ஒருசில மாற்றங்களைப் பெற்றுச் சங்ககாலத் தமிழ் வளர்ந்துள்ளது. மாற்றங்கள் ஒரு மொழியின் வளர்ச்சியைக் காட்டுவனவாகும்.

ஒலியனியலைப் பொறுத்தவரை, சகரமெய், ஞகர மெய், யகர மெய் ஆகியவை மொழி முதலாவதில் சிறு மாற்றங்கள் சங்கத் காலத் தமிழில் நேர்ந்துள்ளன. மொழிமுதலில் வரும் யகரமும் சகரமும் மறைதல் ஆகிய ஒலி மாற்றங்களும் நேர்ந்துள்ளன.

உருபனியலில், மூவிடப் பெயர்களில் நான், நீர் என்பன புதிய வடிவங்களாகச் சங்ககாலத் தமிழில் வந்து வழங்குகின்றன. கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி. அர் அல்லது இர் என்னும் பலர்பால் விகுதியோடு சேர்ந்து நின்று உயர்திணைப் பன்மையை உணர்த்தும் புதிய இலக்கணப் போக்கு சங்க காலத்தில் காணப்படுகிறது. மூவிடப் பெயர்களில் உள்ள யாம், நீயிர், நீர், தாம் என்னும் பன்மைப் பெயர்கள் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்குகின்றன. ஆளன், ஆட்டி, ஆளர் என்பன உயர்திணைப் பெயர்ச்சொற்களில் பால் காட்டும் விகுதிகள் போல வந்து வழங்குகின்றன.

தன்மை ஒருமை வினைமுற்றில் அன் விகுதியும் தன்மைப் பன்மை வினைமுற்றில் ஓம் விகுதியும் முன்னிலைப் பன்மை வினைமுற்றில் ஈம் விகுதியும் சங்ககாலத் தமிழில் புதிதாக வந்து வழங்குகின்றன. ஆர்-கள் என்ற இரட்டைப் பன்மை விகுதி கலித்தொகையில் பலர்பால் வினைமுற்றுக்கு உரியதாக முதன்முதலாக வருகிறது. வியங்கோள் வினைமுற்று, தொல்காப்பியர் காலத் தமிழில் படர்க்கையில் மட்டும் வந்தது. சங்ககாலத் தமிழில் தன்மை, முன்னிலை ஆகிய இடங்களிலும் வருகிறது. தொல்காப்பியர் குறிப்பிடாத சில வினையெச்சங்களும் சில எதிர்மறைப் பெயரெச்சங்களும் சங்ககாலத் தமிழில் வழங்குகின்றன.

சுருங்கக் கூறின், சங்ககாலத் தமிழ் மேலே குறிப்பிட்டவை போன்ற சில மாற்றங்களைத் தவிர மற்றபடி பெரும்பாலும் தொல்காப்பியர் காலத் தமிழாகவே உள்ளது எனலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
சங்ககாலத் தமிழில் வழங்கிய தன்மை இடப்பெயர்களைச் சுட்டுக.
2.
சங்க காலத்தில் புதிதாக வந்து வழங்கிய முன்னிலைப் பன்மை இடப்பெயர் யாது?
3.
யாரும் இல்லைத் தானே கள்வன் - இவ்வரியில் உள்ள படர்க்கை ஒருமை இடப்பெயர் யாது?
4.
அஃறிணைப் பன்மை உணர்த்தச் சங்க காலத்தில் வழங்கிய விகுதி யாது?
5.
சங்க காலத்தில் பெயர்ச்சொற்களில் உயர்திணைப் பன்மையை உணர்த்த வழங்கிய இரட்டைப் பன்மை விகுதி எது?
6.
மூவிடப்பெயர்களில் உயர்வு ஒருமைப் பெயர்களாக வழங்கியவை யாவை?
7.
சங்ககாலத் தமிழில் புதிதாக வந்து வழங்கிய தன்மைப் பன்மை வினைமுற்று விகுதியைக் குறிப்பிடுக.
8.
சங்ககாலத்தில் வழங்கிய முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் யாவை?
9.
சங்க காலத்தில் வியங்கோள் வினைமுற்றுகள் வரும் இடங்கள் யாவை?
10.
உடன்பாடு, எதிர்மறை என்னும் இரு பொருளிலும் வழங்கும் வினையெச்ச வாய்பாடு யாது?
11.
சங்கத் தமிழில் செயின், செய்தால் என்ற வினையெச்ச வாய்பாடுகள் எந்தப் பொருளில் வழங்குகின்றன?
12.
சங்க காலத் தமிழில் காணப்படும் எதிர்மறை வினையெச்ச வாய்பாடுகள் யாவை?
13.
சங்க காலத்தில் வழங்கிய எதிர்மறைப் பெயரெச்ச வாய்பாடுகள் யாவை?
14.
சங்க காலத் தமிழில் வழங்கும் நிகழ்கால இடைநிலைகளைக் குறிப்பிடுக.