தமிழர் தம் அன்றாட வாழ்க்கையில் பேச்சுகளுக்கு
ஊடாக
மிகுதியான பழமொழிகள் பயன்படுத்தப் படுகின்றன. அவை
பேச்சுகளைப் பொருள் நிறைந்ததாகவும், தெளிவாகவும்
மாற்றுகின்றன. அவை வாழ்க்கை
அனுபவங்களின்
வெளிப்பாடுகளாகத் திகழ்கின்றன. தொல்காப்பியர்
பழமொழிகளுக்கு இலக்கண வரையறை செய்துள்ளார். ஒரே
மூச்சில் சொல்லக் கூடியதாய், சுருக்கமாகவும் தெளிவாகவும்,
எளிமையாகவும் கூறும் இயல்பினையுடையது பழமொழி.
இவற்றைச் சேகரித்துப் ‘பழமொழி நானூறு’ என்ற நூலைப்
பண்டைக் காலத்தில் உருவாக்கினார். பழமொழிகளைச் சேகரித்து
‘உள்ளது உள்ளபடி’ பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அயல்
நாட்டவரின் பணிகளால் உருவாயிற்று. அந்த வகையில் ‘பீட்டர்
பெர்சிவல்’ 1842-இல் பழமொழிகளைத் தொகுத்து முதன்முதலில்
உள்ளது உள்ளபடி வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து பலரும்
இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பழமொழிகளைத் தொகுத்து
வெளியிட்டுள்ளனர். பழமொழிகளை ஆராய்ந்தவர்கள் மிகக்
குறைவு. பழமொழிகள் தவறான செயலைச் செய்யக் கூடாது
என்று எச்சரிக்கின்றன. நையாண்டி செய்கின்றன. செய்ய
வேண்டிய செயலைச் செய் என்று கட்டளையிடுகின்றன,
இடித்துரைக்கின்றன, தனக்குத்தானே சமாதானப்படுத்திக்
கொள்ள உதவுகின்றன, ஆறுதல் கொள்ளச் செய்கின்றன.
இதுபோன்ற பல்வேறு பயன்பாடுகள் பழமொழிகளால்
கிடைக்கின்றன. வாழ்க்கை அனுபவத்தில் கிடைத்த தமிழர் தம்
அறிவுத்திறனைப் பழமொழிகள் பொதிந்து வைத்திருக்கின்றன.
அவை எதிர் காலச் சந்ததியினருக்குப் பெரிதும் உதவுகின்றன.
நல்வழிப்படுத்துகின்றன. வழிகாட்டுகின்றன. பழமொழியும் மரபுத்
தொடரும், பழமொழியும் விடுகதையும், பழமொழியும் கதையும்
ஒன்றுக் கொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன. ஒன்றிலிருந்து
ஒன்று உருவாகின்றது. இவற்றையெல்லாம் இப்பாடத்தின் வழி
அறிந்து கொள்ளலாம்.
|