குடும்ப
வாழ்க்கையில் பெண்ணுக்கு இணையாக ஆணுக்கும் கடமை
இருக்கிறது என்பதை அறிந்தவர் பாரதிதாசன். எனவே, தமது குடும்ப
விளக்கு நூலில் ஒரு பொறுப்பான தலைவனைப்
படைத்துக்
காட்டியுள்ளார்.
குடும்பம்
சிறப்பாக இயங்குவதற்கு அந்தக் குடும்பத்தில் உள்ள
மாமனார், மாமியார் போன்றவர்களும் நல்ல பண்பு உடையவர்களாக
விளங்க வேண்டும் என்பதையும் பாரதிதாசன் தமது குடும்ப விளக்கு
நூலின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.
குடும்ப
வாழ்க்கையில் விருந்தினரைப் போற்றுதலும் ஒரு பகுதியாகும்.
விருந்தோம்பல் சிறப்பையும், விருந்தினர்க்கு விருந்து
வழங்கும்
தன்மையையும் பாரதிதாசன் அழகாகப் பாடியுள்ளார்.
குடும்ப
வாழ்க்கைக்குக் கல்வி இன்றியமையாதது ஆகும். கல்வி
அறிவு இல்லாத பெண் நடத்தும் குடும்ப வாழ்க்கையானது இருண்ட
வாழ்க்கை என்பதைத் தமது ‘இருண்ட வீடு’ காவியத்தின் வழியாகப்
பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.
கோபம்
கொண்ட தலைவனின் செயலாலும் அறிவற்ற மகனின்
செயலாலும் குடும்பமே அழிந்துவிடும் என்பதையும் இருண்ட வீட்டில்
அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
குடும்பத்தில்
உள்ளவர்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும்.
கல்வி அறிவு இல்லாத குடும்பம், நரம்பில் துடிப்பு
இல்லாத
பிணங்கள் நிறைந்த சுடுகாடு என்று குறிப்பிட்டுள்ளார் பாரதிதாசன்.
அறிவில்லாத குடும்பம் வாழும் வழியை அறியாது வீழும் என்றும்
அவர் பாடியுள்ளார்.
பாவேந்தர்
‘இருண்ட வீடு’ காவியத்தில் காட்டியுள்ள குடும்பம்
அழிவதற்கு அடிப்படைக் காரணம் கல்வி அறிவு இல்லாமை ஆகும்.
எனவே, ஒவ்வொருவரும் கல்வியறிவு பெற்று விளங்க வேண்டும்.
கல்வி பெற்றவர்களே அறிவு பெற்றவர்கள் ஆவர். கல்வி அறிவு
இல்லாதவர்கள் கண் இல்லாதவர்கள் ஆவார்கள். எனவே, சொத்தை
விற்றாவது கல்வியைப் பெற்றாக வேண்டும் என்கிறார் பாரதிதாசன்.
|