1.2
நன்னூலாரின் விளக்கம்
இதுவரை, தொல்காப்பியம்
எழுத்தொலிகளின் பிறப்புப்
பற்றித் தெரிவித்த கருத்துகளைக் கண்டோம். இனி, இதுபற்றி
நன்னூல் கூறும் கருத்துகளையும்
காண்போம். நன்னூல்
12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல். இது,
எழுத்து, சொல் ஆகிய இரு இலக்கணங்களை மட்டுமே
விளக்குகின்றது. தமிழ் இலக்கணம் கற்க விரும்புவோர் முதலில்
இந்நூலில் இருந்து கற்கத் தொடங்குவது மரபு.
1.2.1.
எழுத்தொலி பிறத்தல்
நன்னூல்,
ஒவ்வோர் எழுத்தும் ஒலியாக வெளிப்படுவதற்கு
இரண்டு நிலைகள் தேவைப்படுகின்றன என்று தெரிவிக்கின்றது.
அவை,
(1) |
உயிரின் முயற்சி |
(2) |
உடல் உறுப்புகளின் ஒத்துழைப்பு |
ஆகியன.
குறைபாடில்லாத நிறைந்த, உயிரின் முயற்சியினால்
உள்ளே
இருக்கும் காற்றானது மேலே எழும்பி நிற்கும்; அவ்வாறு
எழுகின்ற காற்று, செவிகளுக்குக் கேட்கும்படியான
அணுக்கூட்டமாகத் திரண்டு, மார்பு, கழுத்து, தலை, மூக்கு
என்ற நான்கு இடங்களில் பொருந்தும்; பின்பு இதழ், நாக்கு,
பல், அண்ணம் ஆகிய நான்கு உறுப்புகளின் இயக்கத்தினாலும்
வேறுவேறு எழுத்துகளுக்கு உரிய ஒலிகள் தோன்றுகின்றன.
இவ்வாறே எழுத்துகள் ஒலிவடிவம் பெறுகின்றன. இதனை
எழுத்துகளின் பிறப்பு என்று கூறலாம் என்று
நன்னூல்
தெரிவிக்கின்றது.
1.2.2
தேவைப்படும் முயற்சி
எழுத்தொலி தோன்ற முதலில் தேவைப்படுவது
ஒருவரின்
முயற்சி ஆகும். இந்த முயற்சி உயிரின் முயற்சியாக இருக்க
வேண்டும். உயிர்ப்புத் தன்மை நிறைந்த ஒருவரின் முயற்சியாக
இருக்க வேண்டும். முயற்சியில் முழுமை இல்லாமல் இருந்தால்
நினைத்த ஒலி எழும்பாது. எனவே உயிரின் முயற்சி என்று
குறிப்பிடாமல் நன்னூல் ஆசிரியர்
இங்குத் தேவைப்படும்
முயற்சியை ‘நிறை உயிர் முயற்சி’ என்று குறிப்பிடுகின்றார்.
இத்தொடர், ஒலி எழுப்ப நினைப்பவரின் முயற்சிக்கு நிறைந்த
உயிர் முயற்சிதான் தேவை என்பதைச் சுட்டுகின்றது. இத்தகைய
முயற்சியின் விளைவாகவே உந்தியில் இருக்கும் காற்று
மேல்நோக்கி எழும். அவ்வாறு எழும் காற்று உடலின் நான்கு
உறுப்புகளில் சென்று தங்கும். இந்த நான்கு உறுப்புகளையும்
எழுத்துஒலிகள் பிறப்பதற்கு முயற்சி செய்யும் உறுப்புகள் எனலாம்.
அவை,
(1) |
மார்பு, |
(2) |
கழுத்து, |
(3) |
தலை (உச்சி) |
(4) |
மூக்கு |
என்பன.
1.2.3
ஒத்துழைக்கும் உறுப்புகள்
எழுத்தொலிகள் தோன்றுவதற்கு, சில
உறுப்புகளின்
முயற்சியுடன் வேறு சில உறுப்புகளின் ஒத்து இயங்கும் தன்மையும்
தேவைப்படுகின்றது. சில உறுப்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து
செயல்பட்டால்தான் எழுத்தொலிகள் பிறக்கும். அவ்வகையில்
ஒத்துழைக்கும் உறுப்புகளை நன்னூல்
ஆசிரியர் பட்டியலிட்டுக்
காட்டுகின்றார். அவை,
(1) |
இதழ் |
(2) |
நாக்கு |
(3) |
பல் |
(4) |
அண்ணம் |
என்பன ஆகும்.
இந்த நான்கு உறுப்புகளில் எந்த உறுப்பின்
முயற்சியால் ஓர்
எழுத்தொலி பிறக்கின்றதோ, அந்த எழுத்திற்கு அந்த உறுப்பு
பிறப்பிடம் என்று அழைக்கப்படுகின்றது. எனவே உறுப்புகளின்
ஒத்துழைக்கும் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு எழுத்தொலிகள்
தோன்றுகின்றன. ஓர் எழுத்தொலி பிறக்க ஒன்று அல்லது அதற்கு
மேற்பட்ட உறுப்புகளின் ஒத்துழைப்பும் தேவையாக அமைவதும்
உண்டு.
நிறை உயிர்
முயற்சியின் உள்வளி துரப்ப
எழும் அணுத்திரள் உரம், கண்டம், உச்சி
மூக்கு உற்று, இதழ், நாப் பல் அணத் தொழிலின்
வெவ்வேறு எழுத்தொலியாய் வரல் பிறப்பே. |
என்பது நன்னூல் நூற்பா (73). இதில், உரம்
என்பது
மார்பையும், கண்டம் என்பது கழுத்தையும் குறிக்கும். அணம்
என்பது அண்ணம், (மேல்வாய்) என்று பொருள்படும்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I
|
1) |
எழுத்துப்
பிறப்பு என்றால் என்ன? |
விடை |
2)
|
தொல்காப்பியர்
காற்றுப் பொருந்தும் இடங்களாகக்
குறிப்பிடும் உறுப்புகள் எத்தனை? அவை யாவை? |
விடை |
3)
|
தொல்காப்பியர்
எழுத்தொலிகள் தோன்றத்
தேவைப்படும் உறுப்புகளாக உரைப்பவை எத்தனை? அவை யாவை? |
விடை |
4)
|
எழுத்துப்
பிறப்பிற்கான காற்று உடலின் எப்பகுதியில்
இருந்து எழுகின்றது? |
விடை |
5)
|
எழுத்தொலிகள்
தோன்றுவதற்குத் தேவைப்படும் இரு
நிலைகள் யாவை? |
விடை |
|