4.7 தொகுப்புரை ஓர் எழுத்து தனித்து வந்தோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தோ பொருள் தருமானால் அது ‘பதம்’ அல்லது மொழி எனப்படும். பதம், மொழி ஆகிய இரு சொற்களும் ‘சொல்’ என்று பொருள்படுவன. ஓர்எழுத்துத் தனித்து வந்து பொருள் தந்தால் அது ஓர்எழுத்து ஒருமொழி எனப்படும். பல எழுத்துகள் தொடர்ந்து (சேர்ந்து) வந்து பொருள் தந்தால் அது தொடர்எழுத்து ஒருமொழி எனப்படும். இதனால் உணரப்படும் மற்றொரு கருத்து என்னவெனில், ஓர்எழுத்துத் தனித்தோ அல்லது எழுத்துகள் தொடர்ந்தோ வந்து பொருள் தரவில்லை என்றால் அது சொல்லாவதில்லை என்பதாம். எனவே ‘பொருள்தருதல்’ என்னும் நிலைப்பாடே எழுத்து அல்லது எழுத்துகள் சொல்லாவதற்கு இன்றியமையாததாகும். ஓர்எழுத்து ஒருமொழி குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் விளக்கிக் கூறியுள்ளன. தொல்காப்பியம் சுருங்கச் சொல்லிய ஓர்எழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கையை நன்னூல் விரித்துக் கூறியுள்ளது. ஓர்எழுத்து ஒருமொழிகள் அனைத்தும் நெடில் எழுத்துகளாகவே வரும் என்பது அடிப்படைக் கருத்தாக அமைகின்றது. குறிப்பாக, உயிர்எழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஆறும் ஓர்எழுத்து ஒருமொழிகள் ஆகும், உயிர்மெய் எழுத்துகளில் நெட்டெழுத்துகள் முப்பத்தி நான்கும், உயிர்மெய்க் குற்றெழுத்துகளில் இரண்டும் என, 42 எழுத்துகள் ஓர்எழுத்து ஒருமொழிகளாக வருவன என்று நன்னூல் தெரிவிக்கின்றது. தொல்காப்பியம் ஓர்எழுத்து ஒருமொழி, ஈரெழுத்து ஒருமொழி, தொடர்எழுத்து ஒருமொழி என்ற பகுப்பின் வழி செய்திகளை விளக்குகிறது. நன்னூல் தொடர்எழுத்து ஒருமொழியைப் பகாப்பதம், பகுபதம் என்று பெயரிட்டுப் பகுத்துக் காட்டுகிறது. பகாப்பதம் என்பது இரண்டு முதல் ஏழு எழுத்துகளைக் கொண்ட சொல்லாகும். பகுபதம் இரண்டு முதல் ஒன்பது எழுத்துகளைக் கொண்ட சொல்லாகும்.
|