தலைவனிடம் திருமணத்தை வலியுறுத்தித் தோழி
பேசும் வரைவு கடாதல் மேற்சொன்ன நான்கு
வகைப்பாடுகளை உடையது. அவ்வகைப்பாடுகளின்
அடிப்படையில் அது பல்வேறு விரிவுச் செய்திகளையும்
உடையது.
வினவிய செவிலிக்கு மறைத்தமை தலைவர்க்குத் தோழி
விளம்பல் முதலாகக் கவின் அழிவு உரைத்தல் ஈறாகச்
சொல்லப்பட்ட இருபதும் வரைவு கடாதலின் விரிவுச்
செய்திகள் ஆகும். இவ்விருபது விரிவுச் செய்திகளும் தோழி
தலைவனிடம் கூறுவதாகவே அமைந்துள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
இனி
அவ்விரிவுச் செய்திகளை மேற்கண்ட வகைப்பாடுகளின் அடிப்படையில்
பிரித்துக் காண்போம்.
பொய்த்தலுக்கு உரியவை
-
தலைவியின் களவு ஒழுக்கம் பற்றிச் செவிலி
வினவியதாகவும், ஆனால், தான் அதை மறைத்துப் பேசியதாகவும்
தோழி கூறுதல்.
-
ஊரார் தலைவியைத் தூற்றும் பழிச்சொல்
(அலர்) மிகுந்துவிட்டது எனல்.
-
தாய், களவு ஒழுக்கத்தை அறிந்து கொண்டாள்
எனல்.
-
தாய், வெறியாட்டு நிகழ்த்தும் வேலனைக்
கொண்டு உண்மையறிய முயன்றாள் எனல்.
-
அயலார், தலைவியைப் பெண் கேட்டு வந்தனர்
எனல்.
மறுத்தலுக்கு உரியவை
-
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்த தலைவனை
வேறு ஒரு நேரத்தில் வருக என்று திருப்பி அனுப்புதல்.
-
பகலில் வரும் தலைவனை இரவில் வா எனல்.
-
இரவில் வரும் தலைவனைப் பகலில் வா எனல்.
-
தலைவனைப் பகலிலும் இரவிலும் வா எனல்.
-
தலைவனைப் பகலிலும் இரவிலும் வாராதே
எனல்.
கழறலுக்கு உரியவை
கழறல் - இடித்துக் கூறுதல். தலைவனின் நாடு, ஊர், குலம்,
மரபு, புகழ், வாய்மை, நல்வினை முதலானவற்றின் பெருமைகளைக் கூறி,
நீ தலைவியை மணந்து கொள்ளாமல் இருப்பது முறையன்று என நேரடியாகக்
கூறுதல்.
மெய்த்தலுக்கு உரியவை
-
தலைவனிடம் ‘நீ வரைவு கூறி எம் நகர்க்கு
வா; அவ்வாறு வந்தால் எம் உறவினர் எதிர்கொண்டு வருவர்’ எனல்.
-
தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கு உரிய
காலம் (பருவம்) வந்துவிட்டது எனல்.
-
தலைவன் வரும் வழியில் விலங்குகளால் ஏற்படக்
கூடிய அச்சத்தைச் சுட்டிக் காட்டி வரைவு வற்புறுத்துதல்.
-
பிரிவைப் பொறுத்துக் கொள்ள முடியாத தலைவியின்
துன்பத்தைப் போக்கும் விதத்தில் திருமணம் செய்துகொள் என
வற்புறுத்துதல்.
-
குறியிடத்தில் சந்திப்பதற்கு இடையூறாகக்
காவல் மிகுந்துள்ளது என்று கூறுதல்.
-
தலைவிக்குக் காமவேட்கை அதிகமானது என்று
கூறுதல்.
-
தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைக்
கூறுதல்.
-
தலைவியின் அழகு, தலைவனின் பிரிவினால்
கெட்டது எனக் கூறுதல்.
|