|
2.2 கிருட்டிணன்
தூது
போரின்றிச்
சமாதானத்திலே இராச்சியம் கிடைப்பதானால்
மட்டுமே அதனைப் பெற்றுக் கொண்டு வாழ விருப்பமா? அல்லது
முன்பு 12 வருஷம் வாசஞ்செய்து பழகியுள்ள
கொடிய
வனத்திற்கே மீண்டும் சென்று வாழ்நாள் முழுதும் வறுமையில்
வாழ விருப்பமா? அல்லது மானத்தையும்' வீரத்தையுமே
முக்கியமாகக் கொண்டு துணிவாகச் சென்று துரியோதனாதியரை
எதிர்த்துப் போர் செய்து வென்று இராச்சியத்தைப்
பெற
விருப்பமா? எனத் தனித்தனியாகப் பாண்டவரின்
கருத்தைக்
கேட்டு அறிகிறான் கண்ணன்.
முதலில்
தருமன், சமாதானத்தில் காரியத்தை முடிக்க
வேண்டும் என்று கண்ணனிடம் தெரிவித்தான்.
அதற்குக்
கண்ணன் சமாதானத்திற்கு வராதவர்களை அழித்தல் நியாயமே
என்று தருமனிடம் சொல்கிறான். மீண்டும் தருமனின் சமாதானப்
பேச்சினைக் கேட்ட வீமன், தன் அண்ணன் தருமனைப் பழித்து
பேசுகிறான். ஒருவாறு தருமனும், கண்ணனும்
வீமனை
அமைதிப்படுத்தினார்கள்.
அருச்சுனனும்,
தன்னுடைய சபதத்தையும், வீமன், திரௌபதி
ஆகியோரின் சபதத்தையும் எடுத்துச் சொல்லி, போரினால்
மட்டுமே இழந்ததைப் பெறவும், சபதத்தினை முடிக்கவும் கூடும்
என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தான். நகுலனும்
அதே
கருத்தைத் தெரிவித்துத் துரியோதனனைத்தான்
கொல்ல
விரும்புவதாகக் கூறுகிறான்.
பின்னர்,
தத்துவ ஞானமுடையவனான சகாதேவனைக்
கேட்க, கண்ணனின் திருவுள்ளத்தைத் தான் அறிந்துள்ளதாகச்
சொல்லி, அவனது கால்களைக் கட்டினான். பின்பு, கண்ணன்
தன்னை விடுவிக்க வேண்ட, விடுவிக்கப்படுகிறான். சகாதேவன்
பணிந்து, கண்ணனிடம், இப்பொழுது சமாதானம் தான் சிறந்தது
எனச் சொல்ல, அது கேட்ட திரௌபதி அழுதுபுலம்புகிறாள். அவளைத் தேற்றி, தருமனின் வேண்டுகோளின்படி தூது செல்ல
ஆயத்தமானான் கண்ணன். இப்பகுதியை, 1 முதல்
53
வரையிலான பாடல்களால் அறியமுடிகிறது.
2.2.1
முதல் நாள் தூது
கண்ணன்
தூது சென்று மீண்ட நிகழ்ச்சி மிகக்குறுகிய கால
எல்லைக்குள்ளேயே நிகழ்ந்துள்ளது.
சங்குகளும்
அழகிய பேரிகைகளும் சல்லரியென்னும்
வாத்தியங்களும், தாரைகளும், ஊது
கருவிகளும்
எல்லாவிடங்களிலும் ஒலிக்க, அழகிய வெண்கொற்றக் குடை
நிழலைச் செய்யவும் அரசர்கள் பலருடனும்
சதுரங்க
சேனைகளுடனும், அத்தினாபுரி நோக்கிப் புறப்பட்டான்,
கண்ணன். கற்கள் அடர்ந்த மலைகளையும், கொடிய வெப்பம்
கொண்ட பாலை நிலத்தையும், காட்டாறுகளையும்
கடந்து,
உயர்ந்த மதில்களாலும், கோபுரங்களாலும் சூழப்பட்டு விளங்கும்
பெரிய அத்தினாபுரியைக் கண்டான். அந்நகரத்தின் மதில்கள்,
மாடங்கள், இராசவீதிகள், துரியனின் அரண்மனை எனப் பல்வேறு
காட்சிகளை இப்பகுதியில் வில்லிபுத்தூரார் வருணித்துள்ளார்.
மேகமண்டலத்தையும், நட்சத்திரலோகத்தையும் மிகக் கடந்து,
எல்லா மலைகளினும் உயர்ந்த சக்கரவாளமலையை விட உயர்ந்த
மதில்கள் அந்நகரில் பரந்துள்ளன எனப் பாடுகிறார், புலவர்.
2.2.2
இரண்டாம் நாள் தூது
அத்தினாபுரம்
அடைந்த கண்ணன், நகரின் தென்பகுதியில்
ஒரு சோலையில் அமர்ந்தான். அவன் பாண்டவர்களுக்குத்
தூதனாக வந்துள்ளான் என்பதைத் தூதுவர்கள் துரியோதனனிடம்
கூறினர். துரியோதனனும் கண்ணனை வரவேற்கப் புறப்பட்டான்.
அவனைச் சகுனி தடுத்து நிறுத்தினான். வீடுமன், துரோணன்,
அசுவத்தாமன், விதுரன், கிருபன் ஆகியோரும் அரசர் பலரும்
கண்ணனை எதிர்கொள்ளச் சென்றனர். அத்தினாபுரத்தினுள்
சென்ற பின்பு, துரியோதனன் அரண்மனைக்குச் செல்லாமல்,
தத்துவ ஞானத்தையும் மிக்க அருளையுமுடைய விதுரன்
வசிக்கின்ற திருமாளிகையினுள் புகுந்தான். விதுரன், பாண்டவர்
பால் மிகுந்த பிரியமுடையவனாதலால், கண்ணன்
அவன்
வீட்டுக்குச் சென்றான். பின்பு, விதுரன் படைத்த உணவினை
உண்டு மகிழ்ந்தான். மாலைப் பொழுது வந்தது.
விதுரன்,
கண்ணனின் வருகையைப்பற்றி வினவினான்.
ஐவருக்குத்
தூதனாகத் தான் வந்துள்ளதைத் தெரிவித்தான். அன்றிரவு
விதுரன் மாளிகையிலே உறங்கினான்.
2.2.3
மூன்றாம் நாள் தூது
மூன்றாம் நாள் காலை துரியோதனனின்
அவைக்களத்திற்குச்
சென்றான். கண்ணன் அவைக்கு வரும்போது எதிர்சென்று யாரும்
தொழக்கூடாது என்று துரியோதனன் கட்டளையிட்டான். ஆனால்
வீடுமன் முதலியோர் எதிர்கொள்ள, அவையில் நுழைந்தான்
கண்ணன். கண்ணனிடம் தன் இல்லத்தில் வந்து தங்காமைக்கு
உரிய காரணத்தை, துரியோதனன் வினவினான். “ஒருவர் வீட்டில்
உண்டு பின்பு அவரோடு போரிட நினைத்தால் அவர்கள் நரகம்
அடைவார்கள்” என்றான் கண்ணன். அதன் பின்பு தூது வந்த காரணத்தைக் கேட்டான் துரியோதனன். “சூதாட்டத்தில் அரசை
இழந்து, நீங்கள் சொன்னபடி தவறாமல் அயலார் போலப்
புறப்பட்டுச் சென்று, காட்டில் சேர்ந்து, பல நாள்கள் கழித்துப்
பாண்டவர்கள் வந்துள்ளார்கள். ஆதலால் நீ அவர்களுக் குரிய
நாட்டைக் கொடுப்பாய். நீ அவ்வாறு செய்தால், அரசர்கள்
உன்னைப் புகழ்வார்கள். அவ்வாறு செய்யாவிட்டால் ‘அறனும்
மாண்பும் புகழும் இழப்பாய்’ என்றான் கண்ணன்.
துரியோதன்
அதனை ஏற்கவில்லை. ‘நீ வெறுத்தாலும்,
ஏனைய மன்னர்கள் திகைத்தாலும் சொன்ன சொல் தவறியவன்
எனப் பழித்தாலும், பாண்டவர்கள் என்னோடு சண்டையிட்டாலும்,
இவ்வுலகில் ஈ இருக்கும் இடம் கூட அவர்களுக்கு
நான்
தரமாட்டேன்’ என்றான்.
அதனைக்
கேட்ட கண்ணன் அவனிடம்,
“நாடு
முழுவதையும் தர விருப்பம் இல்லையென்றால் அதில் பாதியாவது
வழங்குவாய்” என்றான். அதற்கும் இணங்கவில்லை.
ஐந்து
ஊர்களையாவது தருக என்றான். அதையும் ஏற்கவில்லை.
கண்ணன் அவனை நோக்கிப்
பாண்டவர்களுக்கு
அரசாட்சியைக் கொடுக்காமல் போரிட விரும்பினால், குருநிலத்தில் வந்து போரிடுவதாகக் கையடித்து உறுதி தர வேண்டினான்.
துரியோதனனும் அருகில் இருந்த தூணில் ஓங்கி அறைந்தான். கண்ணனின் பிறப்பை இகழ்ந்தான். துரியோதனன், கண்ணனுக்கு விருந்து கொடுத்த விதுரனைப் பழித்துப் பேசினான். ‘பொதுமகளின் புதல்வனாகிய விதுரன்’ என அவனது பிறப்பை
இழித்துப் பேசினான். ஆத்திரம் அடைந்த விதுரன் பழிகருதி அவனைக் கொல்லாது விடுவதாகத் தெரிவித்தான். இனிப் போரில் வில்லைத் தொடவேமாட்டேன் என்று கூறி அதனை உடைத்தெறிந்தான். பாண்டவர் - கௌரவரின் பாட்டனான வீடுமன் துரியனை அவனது பேச்சிற்காகவும் செயலுக்காகவும் கண்டித்தான். அவை முடிந்து, விதுரன் தன் வீடு சென்றான்.
விதுரன் தன் வில்லை உடைத்தது எதனால் என்று கண்ணன் கேட்டான். அதற்கு விதுரன், “வருவதை உணராதவனும், அமைச்சர் சொல் கேளாதவனும், அழிவை எண்ணாதவனும், நாவடக்கம் இல்லாதவனுமாகிய துரியோதனனுக்காக உயிர் விடுவது பழுது” என்றான். துரியோதனனின் கடுஞ்சொல் எனக்குப்
பிடிக்காததால் வில்லை ஒடித்தேன் என்றான். கண்ணன்
விதுரனின் ஆண்மையைப் புகழ்ந்தான்.
இனிப்
பாரதப் போர் தவிர்க்க இயலாதது என உணர்ந்து,
கண்ணன் குந்தியிடம் சொல்கிறான். அவரிடம், தான் தூதனாக
வந்ததையும், “கர்ணன், பாண்டவர்கள் தனக்குத் தம்பியர் என்ற
உறவு அறியாமையால் விசயனோடு எதிர்த்துப் போரிட உள்ளான்.
நீ வரலாற்றைத் தெரியச் சொல்லி, அவனைப் பாண்டவர்களோடு
சேர்ப்பாயாக” என்றான். ஒருவேளை அவன் வர மறுத்தால் அரவ
(பாம்பு)க் கணையை ஒருமுறை
மட்டுமே விசயன்
மேல்விடுக்குமாறு வரம் கேட்டுப் பெறுமாறும் சொன்னான்.
கண்ணன்
மூலமாகத் தன் மகன்தான்
கர்ணன்
என்பதையறிந்த குந்தி வருந்தினாள். கண்ணன்,
கலங்கிய
குந்தியை நோக்கி, ‘பாண்டவருள் ஒருவர் இறந்தால் ஐவரும்
உயிர் விடுவர் ஆதலின் கர்ணனைக் குறித்து வருந்தாதே’ என்று
சொல்லி விதுரன் மாளிகைக்குத் திரும்பினான் கண்ணன்.
2.2.4
நான்காம் நாள் தூது
துரியோதனன்,
சகுனி, திருதராட்டிரன் மற்றும் கர்ணன்
யாவரும் கூடி, விதுரனையும் கண்ணனையும் கொல்லச் செய்ய,
தயாராக வைத்திருந்த பொய் ஆசனத்தில் உட்காரவைத்தனர்.
ஆசனம் முறிந்து நிலவறையில் இறங்கியது. கண்ணன் திருவடிகள்
பாதாளத்தில் செல்லத் திருமுடி வானத்தில் செல்லப் பேருருக்
கொண்டான். துரியனை நோக்கி, ‘அரசனே! உன் தீய அறிவினால்
என்னைக் கொல்ல நினைத்தாய். விரைவில்
உன்குலம்
அனைத்தையும் போர் செய்து ஒரு நொடிப் பொழுதினுள்ளே
பொடியாக்குவேன். உனக்கு எதிராக ஆயுதம் எடுக்கமாட்டேன்
என்று தந்த உறுதிமொழியையும், நான் உன்னைக் கொன்றால்,
பாண்டவர்கள் சொன்ன சூளுரை பழுதாகும் என்பதையும்
கருதியே உன்னைக் கொல்வதற்கு அஞ்சினேன்” என்றான். பின்பு,
கர்ணனைத் தனியே அழைத்து, அவனது பிறப்புப் பற்றியும்,
பாண்டவர் பிறப்புப் பற்றியும் எடுத்துரைத்தான்.
அவனைப்
பாண்டவரோடு சேருமாறு கூறினான். அதற்குக் கர்ணன், தான்
பாண்டவர் பக்கம் சேர்ந்தால் உலகம் தன்னைப்
பார்த்துச்
சிரிக்கும் என்றான். அப்படிச் செய்வது செய்ந்நன்றி மறப்பதாகும்
என்றான். கண்ணன் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினான்.
அடுத்து
அசுவத்தாமனைத் துரியோதனனிடமிருந்து பிரிக்கும்
முயற்சியில் ஈடுபட்டான் கண்ணன். “யான் பாண்டவர்க்காகக்
கேட்ட ஐந்து ஊர்களைத் தர மறுத்ததற்குப் போர்க்களத்தில்
நீயே சான்றாவாய். வீரத்தில் உனக்கு நிகராவார்
உண்டா?
துரியோதனன் உனக்குப் படைத்தலைமை தந்தால் நீ அதனை
ஏற்காமல் மறுக்கவேண்டும். அப்பொழுது தான் பாண்டவர்
உயிர்பிழைப்பர்’ என்றான் கண்ணன். அந்நேரத்தில் தன் கை
மோதிரத்தைக் கீழே விழவிட, அசுவத்தாமன் அதனை எடுத்துக்
கொடுத்து ஏதோ சத்தியம் செய்வதுபோல ஒரு நாடகத்தைக்
கண்ணன் செய்வதனைத் துரியோதனன் பார்த்து விடுகிறான். அந்த
நேரத்திலிருந்து அசுவத்தாமனை நம்பக்கூடாது
என்று
ஒதுக்கிவிடுகிறான் துரியோதனன்.
இதன்பிறகு,
கண்ணன் கர்ணனுடைய வலிமையைக்
குறைக்கும் வழியில் இறங்கினான். இந்திரனை அழைத்து, ‘கர்ணன்
விசயனைக் கொன்றால் நாடு துரியோதனனுக்கு உரியதாகும். மற்ற
பாண்டவரும் இறப்பர். அது விசயனின் தந்தையாகிய உனக்குப்
பழியைத் தரும் என்று சொல்லி, கர்ணனை அழிக்கமுடியாது
காக்கும் பொருளான அவனது கவச குண்டலத்தைப் பெற்றுவருமாறு
சொன்னான். இந்திரனும் கிழட்டு அந்தணன்
வேடமிட்டு
அவ்வாறு கேட்கும் பொழுது, “கண்ணன் மாயத்தால் இந்திரனை
அனுப்பியுள்ளான். கவச குண்டலங்களைத் தராதே”
என்று
விண்ணிலிருந்து வந்த குரலையும் பொருட்படுத்தாமல் கொடுத்து
விடுகிறான் கர்ணன். இந்திரன் தன்னை வெளிக்காட்டி, கர்ணனுக்கு
வெற்றி தரும் ஒரு வேலாயுதம் தருகிறான். இந்திரன் கண்ணனிடம்
வந்தடைகிறான்.
மீண்டும்
கண்ணன், குந்தியைக் கர்ணனிடம் அனுப்ப
முயற்சி மேற்கொள்கிறான். குந்தியும் கர்ணனிடம் சென்று, தானே
அவன் தாய் என்று உணர்த்தி, நம்பச் செய்கிறாள். பாண்டவரோடு
வந்து சேர்ந்து சிறப்போடு வாழ அழைக்கிறாள். அதற்குக் கர்ணன்
அன்று முதல் இன்று வரை என்னை அன்போடு அரவணைத்து,
எனக்கு ஏற்றமும் அளித்து வரும் துரியனை விட்டு வரமுடியாது
என்று அழுது கண்ணீர் மல்கச் சொன்னான். மீண்டும்
கர்ணன்
தனது தாயைப் பார்த்து, வந்த நோக்கம் யாது என வினவினான்.
போரில்
அருச்சுனன் மேல் அரவக் கணையை ஒருமுறைக்கு
மேல் விடுதல் கூடாது என்றும், ஐவருள் ஏனையவர்களோடு
போரிடக்கூடாது என்று வரம் வேண்டினாள்.
அவ்விரு
வரத்தையும் நல்கினான். தனது தாயிடம், போரில் தான் வீழ்ந்த
போது தனக்குப் பாலூட்டி, என் மகன்
தான் என்பதை
அனைவருக்கும் சொல்லவேண்டும் என்றும் போர் முடியும் வரை
பாண்டவர்களுக்கு நான் குந்தியின் மகன் என்ற உண்மையை
உரைக்கக் கூடாது என்றும் வேண்டினான் கர்ணன். குந்தியும்
அவ்வரங்களைத் தந்தாள். குந்தி அழுதவாறே கண்ணனைச்
சென்றடைந்து, நடந்ததை உரைத்தாள். கண்ணனும் தன் எண்ணம்
நிறைவேறியது என்று மகிழ்ந்து, அன்றே பாண்டவரிடம் திரும்பிச்
சென்றான். நடந்த அனைத்தையும் பாண்டவர்கள் அறியுமாறு
எடுத்துச் சொன்னான். இவ்வளவில் கண்ணன்
தூது
நிறைவடைந்தது.
2.2.5
தூதில் இடம் பெறும் பாத்திரங்கள்
வில்லிபாரதத்தில்
எடுத்தாண்டுள்ள காப்பிய மாந்தர்
ஏறத்தாழ 300 பேர். இவர்களில் மானிடராக வாழ்ந்தவர்களும்,
தேவர்களும், இராக்கதர்களும் உள்ளனர். மானுட வடிவம் தாங்கி
வந்த தெய்வங்களும், தெய்வங்களின் அருளால்
பிறந்த
மானிடர்களும் இக்காப்பியத்தில் விளங்குகின்றனர்.
தூதுச்
சருக்கத்தில் பாண்டவர்கள், திரௌபதி, விதுரன்,
துரியோதனன், அசுவத்தாமன், கர்ணன், குந்தி, இந்திரன், வீடுமன்,
சகுனி ஆகியோர் காணப்படுகின்றனர்.
திரௌபதிக்கு
அடுத்த நிலையில் வில்லியார் அமைக்கும்
பெண் பாத்திரப் படைப்பு குந்தியாவாள். தன் மக்களுக்காகத்
தாய்மைத் துன்பத்தை விரும்பி ஏற்பதையும், கர்ணன் தன் மகன்
என அறிந்து பாண்டவர்பால் அழைக்க முயல்வதையும், அவன்
இறந்த பின் உண்மையை உலகுக்கு அறிவிக்கும் நிலையினையும்
படிப்போர் உணர்வு பெருகப் படைத்துள்ளார் வில்லியார்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1.
|
பாரதம்
எனும் சொல்லின் பொருள் யாது? |
|
2.
|
வட
மொழியில் தோன்றிய முதல் பாரத நூலின்
பெயர் யாது? |
|
3.
|
வில்லிபாரதம்
- குறிப்பு வரைக. |
|
4.
|
வில்லிபாரதத்தில்
எத்தனைத் தூதுச் சருக்கங்கள்
உள்ளன? |
|
5.
|
வில்லிபாரதத்தில்
உள்ள பருவங்கள் எத்தனை? |
|
6.
|
வில்லிபுத்தூராழ்வார்
பற்றிக் குறிப்பிடுக. |
|
7.
|
கிருட்டிணன்
தூதில் இடம்பெறும் கதைமாந்தர் யாவர்?
|
|
|