6.5 தொகுப்புரை


    எல்லாவற்றிற்கும் அடிப்படையான இறைவன், விருப்பு வெறுப்பு
இல்லாதவன், நல்வினை, தீவினை என்ற     இரண்டிற்கும்
அப்பாற்பட்டவன். ஒப்பு இல்லாதவன்.

    தான் குடியிருந்த முட்டை ஓடு தனித்துக் கிடக்க, அதனுள்ளிருந்து
பறவை பறந்து சென்றது போல், உடம்பிலிருந்து உயிர் பிரிந்து
செல்லும். உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு அத்தகையதே.

    உலக இயக்கத்திற்கு மழை மிகவும் இன்றியமையாத ஒன்று. பொய்
சொல்வது தவறு. ஆனால் அன்றாட நடைமுறை வாழ்க்கையில்,
பிறரின் நன்மையின் பொருட்டு, சில சூழல்களில் பொய் பேசுகிறோம்.
அது மெய்போன்றது என்கிறார் வள்ளுவர்.

    ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு வாழவேண்டும். அத்தகைய
வாழ்க்கையே உயிருள்ள வாழ்க்கை என்று கருதப்படும்.

    ஒருவனது நல்ல ஒழுக்கம் நன்மையைக் கொடுக்கும். தீய ஒழுக்கம்
தீமையை ஏற்படுத்தும். ஒரு பொருளை நன்கு ஆய்ந்து
உண்மையான பொருளை அறிந்து கொள்வதே அறிவு எனப்படும்.
ஒருவரின் தகுதிக்கு ஏற்ப ஒரு பணியை அல்லது பொறுப்பை
ஒப்படைப்பது சிறப்புடையது. உலகிலுள்ள எல்லா வெற்றிக்கும்,
உயர்வுக்கும் காரணம் முயற்சி.

    இயற்கையில் நன்மையை நல்கும் மழையினால் தீமையும் விளையும்.
காலம் கருதிச் செயல்படுபவன், தான் நினைத்ததைச் செயல்படுத்த
முடியும்.

    மேற்குறிப்பிட்ட வள்ளுவரின் கருத்துகளுக்குக் கால வரையறை
இல்லை. அவற்றில் காணப்படும் பொதுத் தன்மையினால் அவை
இன்றைய நடைமுறை வாழ்க்கையிலும் பொருத்தமுடையனவாகக்
காணப்படுகின்றன. உண்மை உடையனவாகத் திகழ்கின்றன. எனவே,
இத்தகைய பொதுமைத்தன்மை உடைய வள்ளுவர் இன்றும்
நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


தன் மதிப்பீ்டு : வினாக்கள் : II

  1. வள்ளுவர் எதை அறிவு என்று குறிப்பிடுகின்றார்?

[விடை]

  1. ஒருவனிடம் ஒருபணியை எப்பொழுது
    கொடுக்கலாம் என்று வள்ளுவர் கூறுகிறார்?
[விடை]

  1. முயற்சியினால் என்ன பயன் ஏற்படும்?
[விடை]
  1. மழையின் இயல்புகளாக வள்ளுவர் எவற்றைச்
    சுட்டுகின்றார்?
[விடை]
  1. காலம் கருதிச் செயல்பட்டால் ஏற்படும்
    நன்மையை வள்ளுவர் எவ்வாறு விளக்குகிறார்?
[விடை]