3.7 தொகுப்புரை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செப்புத் திருமேனிகள் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு இவற்றின் கலவையால் உருவாக்கப் பட்டதாகும். தமிழகத்தில் சங்க காலத்தில் தொடங்கி, பல்லவர் காலத்தில் வளர்ந்து, சோழர் காலத்தில் இக்கலை பெருவளர்ச்சி கண்டது. தென்னிந்தியச் செப்புத் திருமேனிகள் என்றால் சோழர்கள்தாம் நினைவுக்கு வருவர். அவ்வகையில் கனமான அமைப்புடைய அவர்களது படிமங்கள் உலகப் புகழ் பெற்றனவாகும். விசயநகர - நாயக்க மன்னர்களும் இம்மரபைப் பெரிதும் பின்பற்றினர். இறையுருவங்களே அன்றிச் சமயக் குரவர்களான நாயன்மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் கூடப் படிமங்கள் செய்விக்கப்பட்டன. இன்றும் இக்கலை வளர்ந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் சுவாமி மலையில் பலகலை வல்லுநர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். முன்னமே குறிப்பிட்டது போல் இத்திருமேனிகள் கோயில் திருவிழாக்களின் போது பல்லக்கில் வீதிகளுக்கு எடுத்துச் செல்லப் படுபவை ஆகும். தமிழகத்தில் கல் மற்றும்
செப்புத் திருமேனிகளைப்
போன்றே மரச் சிற்பங்களும் பரவலாகச் செய்விக்கப் பட்டன.
கோயில்களிலும், கோபுரங்களிலும் அவை இடம் பெற்றன.
கோயில் வாகனங்கள் அனைத்தும் தூக்கிச் செல்ல எளிதாக
இருக்கும் பொருட்டு மரத்தாலேயே செய்யப் பட்டன. கோயில்
கதவுகளை ஆன்மீக வாயில்கள் என்று அக்காலத்தில்
கருதியிருக்க வேண்டும். அதனடிப் படையில் அவற்றிலும்
சிற்பங்கள் செய்து பொருத்தப்பட்டன. திருவிழாக் காலங்களில்
இறைவன் வீதி உலாச் செல்வதற்காக, நடமாடும் கோயில்களாக
மரத் தேர்கள் செய்யப் பட்டன. அவற்றில் சிற்பங்கள்
வடிக்கப் பட்டன. இதனால் கோயிலுக்குள் வராத ஒடுக்கப்
பட்ட மக்களும் இறைவனின் பல்வேறு கதைகள் பற்றி அறிந்து
கொள்ள ஏதுவானது. தமிழகத்தில் பல கிராமங்களில் சுடுமண் சிற்பங்களும், சுதைச் சிற்பங்களும் செய்து வழிபடப் பட்டன. இன்றும் திருவிழாக் காலங்களில் வழிபடப் படுகின்றன. அய்யனார், மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் சுடு மண்ணாலும், சுதையாலும் செய்யப்பட்டன. திருவரங்கம், சமயபுரம், அழகர் கோயில், சீர்காழி, மதுரை கூடல் அழகர் கோயில் ஆகிய கோயில்களில் கருவறை மூலவர் சிற்பம் சுதையால் செய்து வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மேற்பகுதியிலும், கோபுரங்களிலும் சுதைச் சிற்பங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. அவற்றிற்கு வண்ணமும் பூசப் பட்டுள்ளது. பழனியிலும், திருச்செங்கோட்டிலும் நவ பாஷாணக் கலவைச் சிற்பம் செய்யப்பட்டது. திருவட்டாறு, சுசீந்திரம் கோயில்களில் கடு சர்க்கரைக் கலவைச் சிற்பங்கள் உள்ளன. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|