மதுரை மருதன் இளநாகனார்

194. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி! கைம்மாறு
யாது செய்வாங்கொல் நாமே-கய வாய்க்
கன்றுடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும்,
வலன் உயர் மருப்பின், நிலம் ஈர்த் தடக் கை,
5
அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத்
தனி நிலை இதணம் புலம்பப் போகி,
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை,
குன்ற வெற்பனொடு நாம் விளையாட,
இரும்பு கவர்கொண்ட ஏனற்
10
பெருங் குரல் கொள்ளாச் சிறு பசுங் கிளிக்கே?

சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.-மதுரை மருதன் இளநாகனார்

216. மருதம்
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை போல் உதவி,
நம் உறு துயரம் களையார்ஆயினும்,
5
இன்னாதுஅன்றே, அவர் இல் ஊரே;
எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்
10
கேட்டோர் அனையராயினும்,
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும் சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்

283. நெய்தல்
ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!-
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,
5
இன்னை ஆகுதல் தகுமோ-ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்,
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?

பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, 'வேறுபடாது ஆற்றினாய்' என்று சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்

290. மருதம்
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
5
கொள்ளல்மாதோ, முள் எயிற்றோயே!
நீயே பெரு நலத்தையே; அவனே,
'நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு' என மொழிப; 'மகன்' என்னாரே.

பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற்பிரிய, வாயிலாய்ப் புக்க பாணன் கேட்ப, தோழி சொல்லியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்

302. பாலை
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும், நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
5
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு,
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
10
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே?

பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்

326. குறிஞ்சி
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,
துய்த் தலை மந்தி தும்மும் நாட!
5
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
10
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே.

தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்

341. குறிஞ்சி
வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின்,
செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன் நகை அழுங்கா, பால் மடுத்து,
அலையா, உலவை ஓச்சி, சில கிளையாக்
5
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள், மடந்தை: யாமே
வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரை நாள் மயங்கி, கூதிரொடு
வேறு புல வாடை அலைப்ப,
10
துணை இலேம், தமியேம், பாசறையேமே.

வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்

362. பாலை
வினை அமை பாவையின் இயலி, நுந்தை
மனை வரை இறந்து வந்தனை; ஆயின்,
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த
5
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும்,
நீ விளையாடுக சிறிதே; யானே,
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;
10
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே!

உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.-மதுரை மருதன் இள நாகனார்

392. நெய்தல்
கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்
5
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்,
பெண்ணை வேலி, உழை கண் சீறூர்
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல;
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த
கானலொடு அழியுநர் போலாம்-பானாள்,
10
முனி படர் களையினும் களைப;
நனி பேர் அன்பினர் காதலோரே.

இரவுக்குறி முகம்புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்