பொறையன்

8. குறிஞ்சி
அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!
5
துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி-
10
தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!

இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.

18. பாலை
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி-தோழி!-மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
5
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,
10
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே.

பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பொய்கையார்

185. குறிஞ்சி
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி,
காமம் கைம்மிக, கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின்-பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
5
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி,
இரவலர் மெலியாது ஏறும், பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்,
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து,
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
10
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே.

பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.

346. பாலை
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
தண் கார் தலைஇய நிலம் தணி காலை,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
5
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட,
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று, நக்கனைமன் போலா-என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்
10
கடி பதம் கமழும் கூந்தல்
மட மா அரிவை தட மென் தோளே?

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்