மதுரை மருதன் இளநாகனார்

77. பாலை
அம்ம வாழி, தோழி!-யாவதும்,
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தட மென் தோளே.

உரை

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

160. குறிஞ்சி
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்;
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே?

உரை

வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன்.

279. முல்லை
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?

உரை

வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்

367. மருதம்
கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்,
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே-
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப்
பூசல் ஆயம் புகன்று இழி அருவி
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே.

உரை

வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகன்