3.2 சைவ இலக்கியம்

இரண்டாம் நந்திவர்மனது காசக்குடி பட்டயம், நான்கு வேதம், ஆறு அங்கங்கள் கற்றவர் பல்லவ மன்னர் என்கிறது. காசக்குடி பட்டயம் முதலில் வடமொழியில் எழுதப்பட்டது. பின்னர் மக்கள் அனைவரும் படிக்கும் வண்ணம், தமிழில் எழுதப்பட்டது. தண்டன் தோட்டப் பட்டயம் பாரதம் படித்து ஊரார் கேட்கும் வண்ணம் விளக்கியவனுக்கு நிலம் தந்ததைக் கூறுகிறது. பாரதக் கதை கூறும் வழக்கம் இம்மன்னன் காலத்தில் தொடங்கப்பட்டு, இன்றளவும் சிற்றூர்களில் தொடர்கிறது எனலாம்.

வடமொழியிலும், தென்மொழியிலும் புலமை பெற்ற ஐயடிகள் காடவர் கோன் என்ற பல்லவ அரசர் ஒருவர் இருந்தார் என்றும் அவர் சிவத்தளி (கே்ஷத்திர) வெண்பாப் பாடினார் என்றும் பெரியபுராணம் குறிக்கிறது. அவரே மூன்றாம் சிம்மவர்ம பல்லவன் என்பர் ஆராய்ச்சியாளர், அவ்வகையில் இந்நூற்றாண்டில் தோன்றிய சைவ இலக்கியம் பற்றிக் காண்போம்.

3.2.1 தேவாரம் - ஏழாம் திருமுறை

தேவாரத்தின் ஏழாவது திருமுறையாக நூறு பதிகங்கள் உள்ளன. அவற்றில் 1125 பாடல்கள் உள்ளன. இவற்றைப் பாடியவர் சுந்தரர் ஆவார். அப்பரிடமும், சம்பந்தரிடமும் சுந்தரர்க்குப் பெருமதிப்பு உண்டு. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களை ‘மூவர் தமிழ்' என்ற சொல்லால் சுட்டுவர். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பெரிய புராணத்துக்கு மூலமாக இருந்தது. சுந்தரரின் சமகாலத்தவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவார். சுந்தரரின் பாடல்கள் அனைத்தும் இசையுடன் பாடுதற்கு உரியவை. இயற்கைச் சூழலை அழகாக வர்ணிப்பவை, தமக்குத் தேவையானவற்றைச் சிவனிடம் உரிமையோடு கேட்பது இவரது வழக்கம். துறவும், உலக வெறுப்பும் இவரது பாடல்களில் காண்பதற்கு அரியவை.

சுந்தரர் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருநாவலூர் என்னும் ஊரில் பிறந்தவர். ஆதி சைவ அந்தணர் குலத்தைச் சேர்ந்த சடையர் என்பவருக்கும் இசைஞானியார் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். திரு முனைப்பாடி நாட்டுச் சிற்றரசர் தொடர்பு இவருக்கு இருந்தது. இவரது முற்பிறப்பில் கைலாயத்தில் ஆலாலசுந்தரர் என்ற பெயரில் சிவனுக்குத் தொண்டு செய்து வந்தார். நந்தவனத்தில் மலர் எடுக்கும்போது பார்வதியின் தோழியர் இருவரைக் கண்டு இச்சை கொண்டார். அதனால் புவியில் பிறந்தார் என்று இவரது முற்பிறவி பற்றிப் பெரியபுராணம் குறிப்பிடும்.

வயது வந்ததும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. மணநாள் அன்று வயது முதிர்ந்த ஒருவர் வந்து சுந்தரரின் பாட்டனார் தம்மையும், தம்வழி வருவோரையும் அவருக்கு அடிமைப்படுத்தி ஆளோலை எழுதித் தந்ததைச் சொல்லி திருமணத்தைத் தடுத்து ஆட்கொண்டார். சுந்தரர் தவக்கோலம் பூண்டார். சிவனடியாராகச் சிவத்தலங்களுக்குச் சென்று பதிகம் பாடினார். திருவாரூரில் கணிகையர் குலத்து மகள் பரவையார் என்பவரையும், திருவொற்றியூரில் சக்கிலியார் என்பவரையும் மணமுடித்தார். இவர் தம் பார்வையை இழந்து மீண்டும் பெற்றதாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது. சுந்தரர் தேவாரத்திலும் இது பற்றிக் காணலாம். சேரமான் பெருமாளின் நண்பரான இவர் திருவஞ்சைக் களத்திற்குச் சென்றார். அங்குச் சிவனடி சேர்ந்தார். அப்பொழுது அவருக்கு வயது 18 என்பர். தம்மை இறைவனுக்குத் தோழராகக் கருதிப் பதிகங்கள் பாடியவர். ‘தம்பிரான் தோழர்' என இவர் அழைக்கப்படுகிறார். ஆரூரர், நம்பியாரூரர், ஆளுடைய நம்பிகள், வன்தொண்டர் என்பன இவரது பிற பெயர்களாம்.

தேன்படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதுஎன்னை நான்அறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்கு உயிரும்
தான்படிக்கும் அநுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே

(திரு அருட்பா, ஐந்தாம் திருமுறை, 3253)

என்று இராமலிங்க வள்ளலார் சுந்தரரின் பாடல்களைப் படிக்கும் சுவையான அனுபவத்தைக் கூறுகிறார். நீங்களும் படித்துப் பாருங்களேன்.

சைவ சமயக் குரவர் நால்வருள் சுந்தரரது முற்பிறப்பு பற்றி மட்டுமே சொல்லப்படுகிறது. இவரைத் தலைவராக - பாட்டுடை நாயகராகக் கொண்டு சேக்கிழார் பெரியபுராணத்தைச் செய்துள்ளார்.

3.2.2 சுந்தரரின் திருத்தொண்டத் தொகை

சுந்தரர் பாடிய, தேவாரத்தில் ஒரு சிறு பகுதி திருத்தொண்டத் தொகை. தொண்டரை-சிவனை வழிபடும் அடியவரைத் துதிக்கும் புதிய நுவல்பொருள் ஒன்றினைத் தமிழ் இலக்கியத்திற்கு இந்நூல் தந்துள்ளது. கோயில் வழிபாட்டின் அவசியத்தை உணர்த்திய தொண்டர்களது திருப்பணியை இவ்வரலாறுகள் எடுத்துரைக்கின்றன. கோயில் கட்டுதல், குளங்கள் தோண்டுதல், விளக்கேற்றுதல், கற்பூர தீபம் ஏற்றுதல், சந்தனம் வழங்குதல், இசைக் கருவிகள் தருதல், இலிங்கத்துக்கு அபிடேகம் செய்தல், கோவில் விழாக்களை நடத்துதல், இறைவனை நாள்தோறும் தரிசித்தல் முதலியன கோவில் வழிபாட்டில் அடங்கும். இவற்றைச் செய்யும் சிவனடியாரைச் சிவனாகவே மதித்து வணங்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. திருத்தொண்டர் திருவந்தாதி, பெரியபுராணம் ஆகியவற்றுக்குத் திருத்தொண்டத் தொகை அடிப்படையாகத் திகழ்ந்தது.


 

சுந்தரரின் திருத்தொண்டத் தொகைப்படி 63 நாயன்மார்களும், 9 தொகையடியார்களும் இருந்தனர். தொகை அடியார் என்பது தனிப்பட்ட ஓர் அடியாரைக் குறிப்பிடாமல், ஒரே வகையான தொண்டில் ஈடுபட்டிருந்த பலரை இணைத்துச் சொல்வதாம். எடுத்துக்காட்டாக, தில்லைவாழ் அந்தணர், (தில்லையில் திருக்கோயில் வழிபாடுகளில் பங்கு கொண்டவர்கள்), முழுநீறுபூசிய முனிவர் (உடல் முழுதும் நீறு பூசிக் கொண்டிருந்த அடியார்கள்) ஆகிய தொகை அடியார்களைக் கூறலாம். 63 நாயன்மார்களைப் பொறுத்தவரையில் அப்பர், சம்பந்தருக்கு முன் 17 பேரும், அப்பர் காலத்தில் 11 பேரும், சுந்தரர் காலத்தில் 13 பேரும், அப்பர் காலத்துக்கும், சுந்தரர் காலத்தும் இடைப்பட்ட காலத்தில் 22 பேரும் வாழ்ந்திருந்தனர். இவர்களைப் பற்றி இந்நூல் சொல்கிறது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சாக்கிய நாயனார், திருநாளைப் போவார், கண்ணப்பர் ஆகியோரைத் தம் பாடல்களில் சுந்தரர் சிறப்பிக்கிறார்.

சிவன் எல்லாம் தருவான். எனவே மானிடரைப் புகழ்ந்து நலியாதீர்; சிவனை வழிபட்டு உய்தி பெறுங்கள் என்று மற்றையோரைச் சுந்தரர் அறிவுறுத்தும் அழகிய பாடல் இதோ.

நலமிலாதானை நல்லனேயென்றும் நரைத்த மாந்தரை இளையேனே
குலமிலாதானைக் குலவனே என்று கூறினும் கொடுப்பாரிலை
புலமெலாம் வெறிகமழும் பூம்புகலூரைப் பாடுமின் புலவீர்காள்!
அலமராது அமரருலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.

(தேவாரம் : 7569)

என்ற உறுதியான இலக்கு சுந்தரரிடம் வெளிப்படுகிறது.

3.2.3 சேரமான் பெருமாள் நாயனாரின் படைப்புகள்

சேரமான் பெருமாள் நாயனார், திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய மூன்று நூல்களை இக்காலக் கட்டத்தில் இயற்றினார்.

திருக்கைலாய ஞான உலா

சேரமான் பெருமாள் நாயனார் பாடியது திருக்கைலாய ஞானவுலா ஆகும். ஆதி உலா என்றும் இது வழங்கப்படுகிறது. உலாவில் போற்றப்படும் தெய்வம் சிவன். சிவலோகத்தில் தேவர்கள் கூடிச் சிவன் உலா வந்து காட்சி தரவேண்டும் என்று வேண்டுகின்றனர். சிவனும் இசைகிறார். உமையவள் சிவனாருக்கு எல்லா அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்க்கிறாள். மன்மதன் மாலை தருகிறான். சந்தனம் பூசிக் கிளம்பும் சிவனைத் தெருக்களில் உள்ள மகளிர் கண்டு காதல் கொள்கின்றனர். முனிவர்கள் வாழ்த்துகின்றனர். தேவர்கள் தொண்டு செய்கின்றனர் என்று அமைந்துள்ளது. இந்நூல், காண்பவர் நெஞ்சங்களைக் கவரும் ஒப்பற்ற தலைவனாம் சிவனது திருவுலாக் காட்சியை விவரிக்கிறது.

‘உலா' எனும் இலக்கிய அமைப்பை இந்த நூல் தோற்றுவித்தது. இதை இலக்கணமாகக் கொண்டு, இதே அமைப்பில் பின்னாளில் உலா நூல்கள் இயற்றப்பட்டன.

திருவாரூர் மும்மணிக்கோவை

சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய நூல். சிவனது அடியார்கள் செந்தமிழ் வல்லவர்களாகவும் இருந்தமை கண்கூடு. மூன்று வெவ்வேறு மணிகளை மாற்றிமாற்றித் தொடுத்த மாலை போல், வெவ்வேறு மூவகைச் செய்யுள்கள் மாறி மாறி வர முப்பது பாடல்களைக் கொண்டது இந்நூல். இதுவும் புதிய அமைப்பே ஆகும். இதுபோலவே, சிவனைப் போற்றுவதற்குக் கண்டுபிடித்த புதுப்புது இலக்கிய வடிவங்கள் பின்னாளில் சிற்றிலக்கியமாக மலர்ந்தன.

பொன் வண்ணத்து அந்தாதி

சேரமான் பெருமாள் நாயனார் பாடிய மற்றொரு நூல் பொன் வண்ணத்து அந்தாதி . இது பதினொராம் திருமுறையில் உள்ளது. சிவனைப் பாடல் தலைவனாகக் கொண்டது. 101 பாடல்களை உடையது. ஒரு செய்யுளின் இறுதிப் பகுதியே அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.

3.2.4 பிற படைப்புகள்

மேலும், க்ஷேத்திர திருவெண்பா, திருமும்மணிக்கோவை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆகிய நூல்கள் தோன்றின.

க்ஷேத்திர திருவெண்பா

சிவத்தளி வெண்பா என்றும் இந்நூல் வழங்கப்படும். ஐயடிகள் காடவர்கோன் எனும் பல்லவ மன்னன் எழுதிய நூல் இது என்று பெரிய புராணம் கூறுகிறது. சிதைந்த நிலையில் பதினொன்றாம் திருமுறைத் தொகுப்பில் ஐந்தாவது நூலாக இடம் பெற்றுள்ளது. இதன் பாட்டுடைத் தலைவன் சிவன். 24 வெண்பாக்களைக் கொண்டது; 90 அடிகளில் மொத்த நூலும் அமைந்துள்ளது. “இறக்கும்போது எவ்விதத் துன்பமும் அடையாமல் இறப்பதற்கு இன்னின்ன தளிகளில் (தளி - தலம் - ஷேத்திரம் என்று பொருள்) வாழும் சிவனை நினைத்துக் கொள் மனமே” என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது. சிதம்பரம் (தில்லை), குடந்தை, ஐயாறு (திருவையாறு), ஆரூர் (திருவாரூர்), திருத்துருத்தி, திருக்கோடிகாவல், பாண்டவாய்த் தென்னிடைவாய், திருநெடுங்களம், குழித் தண்டலை, ஆனைக்கா, மயிலை, சேனைமாகாளம், வளைகுளம், சாய்க்காடு, திருப்பாச்சிலால் சிராமலை, திருமழபாடி, திரு ஆப்பாடி, காஞ்சிபுரம், திருப்பனந்தாள், திருக்கடவூர், திருவொற்றியூர் ஆகிய தலங்களில் உள்ள சிவன் போற்றப்பட்டிருப்பது இந்த நூலின் தனிச் சிறப்பாகும்.

சிவபெருமான் திருமும்மணிக் கோவை

இளம்பெருமான் அடிகள் பாடிய நூல். பதினொராம் திருமுறைத் தொகுப்பில் 24-வது நூலாக இந்நூல் இடம் பெற்றுள்ளது. ‘கோவை' என்றால் ‘தொகுப்பு' என்று பொருள். மூன்று மணிகள் சேர்ந்த மாலை போல் மூவகைச் செய்யுள்களது தொகுப்பாக இந்நூல் உள்ளது. இதன் பாட்டுடைத் தலைவன் சிவபெருமான்; முப்பது பாடல்களைக் கொண்டது. 145 அடிகளைக் கொண்டது. சிவனது பண்பு நலன்களைப் புலப்படுத்தும் நூலாகும்.

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

அதிராவடிகள் பாடிய நூல், மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை. இது பதினொராம் திருமுறைத் தொகுப்பில் இருபத்தைந்தாவது நூலாக இடம்பெற்றுள்ளது. இந்நூலின் பாட்டுடைத் தலைவர் விநாயகர் ஆவார். எடுத்த செயலைத் தடையின்றி முடித்துத் தருபவர் கணேசர் எனும் விநாயகர் ஆவார். விநாயக வழிபாடு தமிழகத்தில் இந்நூற்றாண்டில்தான் தோன்றியது. இவ்வகையில் விநாயகரைப் பற்றி அமையும் முதல் தனி நூல் இது எனக் கொள்ளலாம். இருபத்துமூன்று பாடல்களைக் கொண்டது. பாடல்களின் மொத்த அடிகள் நூற்றுப்பதின்மூன்று ஆகும்.

பாடுபொருள், உள்ளடக்கம், பாடும் முறை, பயன்படுத்திய யாப்பு, பக்தி உணர்வு என யாவும் ஒன்று போலவே இருப்பதை ஒன்பது மற்றும் பதினொராம் திருமுறைகளில் காணலாம். இவ்விரு திருமுறைகளும் பல நூல் தொகுதிகளின் ஆக்கமாக உள்ளன. ஒவ்வொரு நூலையும் தனித்தனியே வியந்து போற்றிப் பரவசம் கொள்ளும் நிலை குறைவே. சிறுசிறு நூல்கள் எனும் நாற்பது தனிநூல்களின் தொகுப்பாகப் பதினொராம் திருமுறை உள்ளது.
இடைக்காலத்தில், ‘சிற்றிலக்கியம்' எனும் தனித்தனி வடிவங்கள் பல்கிப் பெருகிட வித்தாக இவை அமைந்தன எனலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில்கள் யாவை? [விடை]
2. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்த ஆழ்வார் யார்? [விடை]
3. தேவதானம், பிரம்மதேயம் என்றால் என்ன? [விடை]
4. சுந்தரரின் சமகாலத்தவர் யார்? [விடை]
5. சுந்தரரின் திருத்தொண்டத்தொகை எந்த நூலுக்கு மூலமாக இருந்தது? [விடை]