1.3 கற்பு ஒழுக்கம்

E


    உள்ளம் ஒத்த தலைவனும் தலைவியும் திருமணம் செய்து
கொண்டு, கணவனும் மனைவியுமாய் இல்லறம் நடத்துவதே கற்பு
ஒழுக்கம். இது அகஇலக்கிய மரபைச் சார்ந்தது.


1.3.1 பிரிவு தரும் துன்பம்


    இல்லறத்தார்க்கு உரிய கடமைகளில் தவறாது வாழ்ந்து
வரும்பொழுது, தலைவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து வாழும்
நிலைமையும் சிற்சில சமயங்களில் நிகழ்கின்றது. ஓதல், நாடுகாவல்,
பொருள் ஈட்டல், முதலியவற்றில் ஏதாவது ஒன்றிற்காகத் தலைவன்
தலைவியைப் பிரிந்து செல்லுவான். அப்பொழுது, தலைவனைப்
பிரிந்து தனித்து இருக்கும் தலைவி, பிரிவைப் பொறுத்துக் கொள்ள
முடியாமல், மிகவும் துன்பப்படுவாள். பிரிவு பற்றியே தமிழ் அக
இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் உள்ளன. திருக்குறளிலும் கற்பு
இயலில், முதலில் ‘பிரிவு’ பற்றிய செய்திகளே இடம் பெற்றுள்ளன.

    தலைவன், தலைவியை விட்டுப் பிரிந்து செல்வது கற்பு நெறி
வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. இருப்பினும் தலைவியால்
அந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அவன்
இல்லாத இடத்தில் இருப்பது மிகவும் துன்பம் தரக்கூடியது என்று
கருதுகிறாள்.

    களவு நெறியில் வாழ்ந்த காலத்தில் பெற்றோரிடம் வாழ்ந்தாள்.
தோழியும் உடன் இருப்பாள். மேலும் களவு நெறியில் ஏற்படும்
பிரிவும் குறுகிய கால இடைவெளியே உடையது. எனவே, அந்தப்
பிரிவை அவளால் பொறுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால்,
இப்பொழுது தலைவனோடு தனியாக வாழ்கிறாள். அவனைப் பிரியும்
பொழுது, தனிமை அவளை மிகவும் துன்புறுத்துகிறது. இதை அவள்
வெளிப்படுத்துகிறாள்.


இன்னாது இனன்இல் ஊர் வாழ்தல், அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு



(குறள்: 1158)


(இனன் = வேண்டியவர், இன்னாது = துன்பமானது)

தன்னைச் சார்ந்த-தன்னோடு உறவு கொண்டோர் இல்லாத ஊரில்
வாழ்வது துன்பமானது, தனது உயிரினும் மலோகக் கருதி வாழும்
தலைவனைப் பிரிந்து தனிமையாக இருப்பது மேலும் துன்பம்
தரக்கூடியது என நினைக்கிறாள் தலைவி.



உறவினர்களும் தோழியும் இல்லாத தனிமையில், துணையாய்
நின்றவன் தலைவன். இப்பொழுது அவனும் அவளை விட்டுப்
பிரிந்து செல்கிறான். அவளால் அந்தப் பிரிவைப் பொறுத்துக்
கொள்ள இயலவில்லை. எனவே, தனக்கு மிகவும் இனியவராய்
இருக்கின்ற தலைவனின் பிரிவு எல்லாவற்றையும் விடவும் மிகவும்
இன்னாதது என்று உணருகிறாள்.


1.3.2 இரவு தரும் துன்பம்

    நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ
சேர்ந்து இருக்கும்பொழுது, பொழுது
கழிவது தெரியாது. ஆனால், யாருமே
இல்லாமல்      தனிமையாக
இருக்கும்பொழுது, நேரம் போவது
மிகவும்     கடினமானது. நேரம்
மெதுவாக நகருவது போன்ற ஓர்
உணர்வையே     ஏற்படுத்தும்.
அதைப்போல கணவனும் மனைவியும்
உயிரும் உடலும்போல், இணைபிரியாது

கூடி மகிழ்ந்து வாழும் இல்லற வாழ்க்கையில் பொழுது போதாது.
ஆனால் தலைவனைப் பிரிந்து வாழும் பொழுது தனிமை மிகவும்
துன்பம் தரும். மேலும் பொழுதைக் கழிப்பது மிகவும் சிரமமாக
அமையும். தலைவனோடு இனிமையாக வாழ்ந்த இரவு நேரம்
பிரிவின்பொழுது மிகவும் துன்பமாகத் தோன்றும். இந்த
அனுபவத்தை வெளிப்படுத்துகிறாள் தலைவி.


கொடியார் கொடுமையின் தாம் கொடிய-இந் நாள்
நெடிய கழியும் இரா.



(குறள்: 1169)


(இரா = இரவு)

கொடியவர்களைப் பற்றி நினைப்பதே துன்பமானது. ஆனால்,
அவர்கள் செய்யும் கொடுமையோ, மிகவும் துன்பம் தரக் கூடியது.
அதனால் நம் உடலும் உயிரும் கூட, பாதிப்பை அடையும்.
அதைவிடவும் கொடுமையானது, தலைவனைப் பிரிந்து தனிமையாக
இருக்கும் இரவு நேரம் என்கிறாள் தலைவி.

    தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு இரவில்தான் தலைவனின்
நினைவு அதிகம் வரும். அது துன்பமானது. அந்தத் துன்பமும்
நெடுநேரமாக இருக்கிறது. தலைவன் இல்லாத தனிமையில் இரவு
கொஞ்சம் கொஞ்சமாக நகர்வது போன்ற ஓர் உணர்வு தலைவிக்கு
வருகிறது. அந்தத் துன்ப உணர்வை வெளிப்படுத்தும்பொழுது,
‘நெடிய கழியும் இரா’ என்று இரவின் மேல் பழி போடுகிறாள்
தலைவி.

    ஏன் இந்த இரவு நீண்ட நெடுநேரம் இருந்து என்னை
வதைக்கிறது என்று வினவுகிறாள் தலைவி. பிரிவுக்கால இரவின்
துன்பத்தில் தலைவியின் மனநிலையைப் பற்றிய அக மரபைச்
சார்ந்த பாடல்கள் பல உள்ளன.


1.3.3 ஒளியிழந்த கண்கள்


    பிரிவினால் தலைவிக்கு உள்ளம் பாதிக்கப்பட்டதுபோல் உடலும்
பாதிக்கப்பட்டாள். எப்பொழுதும் தலைவனை நினைத்துத்
தூங்காமல் கண் விழித்து இருந்தமையாலும், அழுதமையாலும்
இப்பொழுது அவளது கண்கள் ஒளி இழந்து காணப்படுகின்றன.
மணம் பரப்பும் மலர்களை விடவும் முன்பு அழகாகக்
காட்சியளித்தவை இந்தக் கண்கள். எனவே, தாமே அழகு
பொருந்தியவை என்று இறுமாந்திருந்த மலர்கள், இவளது
கண்களைப் பார்த்ததும், நாணம் கொண்டன. இப்பொழுது,
ஒளியிழந்து காட்சியளிக்கும், இவளது கண்கள்தாம், நாணம்
அடைகின்றன.


சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி,
நறு மலர் நாணின கண்



(குறள்: 1231)


(சேண் = தூரம், உள்ளி = நினைத்து)

    இந்தப் பிரிவுத் துன்பத்தை எனக்குக்
கொடுத்துவிட்டு, தொலை தூரத்திற்குச்
சென்றான் தலைவன். அவனை
நினைத்து நினைத்து வருந்திய கண்கள்,
நறுமணம் பொருந்திய மலர்கள்
முன்னால்     செல்வதற்குக் கூட
நாணுகின்றன. இதற்குக் காரணம்
என்ன? அவை எப்பொழுதும்
தலைவனை நினைந்து அழுதமையாலும்,

இரவில் கூட தூங்காமல் கண் விழித்து இருந்தமையாலும் ஒளி
இழந்து விட்டன. எனவே, முன்பு ஒருகாலத்தில் இவள் கண்களின்
அழகைக்கண்டு மலர்கள் நாணின. இன்று மலர்களைக் கண்டு இவள்
கண்கள் நாணுகின்றன.

    எந்த அளவுக்குத் தலைவனின் பிரிவால் அவளது உடல் உறுப்புகள்
பாதிப்பு அடைந்தன என்பதனை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்
வள்ளுவர்.

    பிரிவுக் காலத்தில், உடல் மெலிதல், உடலில் பசலை படருதல்
போன்றவற்றை அக இலக்கியங்கள் பல எடுத்துக் காட்டுகின்றன.


1.3.4 விரலும் தேயுமோ!

    தலைவன் பிரிவால் - அவன் நினைவால் கண்கள் மட்டுமா
ஒளியிழந்தன? விரல் கூட, தேய்ந்து விட்டது. விரல் எப்படித்
தேயும்?


காதலன் எப்பொழுது வருவான்,
அவனைக் கண்டு எப்பொழுது
மகிழலாம்     என்று     துடித்துக்
கொண்டிருக்கிறாள் தலைவி. அவன்
தன்னோடு     இல்லாத சூழலில்,
ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக்
கழிகிறது. அவன் வருவதற்கு இன்னும்
எத்தனை நாட்கள் இருக்கின்றன என்று
அவளுக்கு அறிய வேண்டும். தலைவி
வாழ்ந்த காலம், ஆண்டுக் குறிப்பேடு


(Calendar) நடைமுறையில் இல்லாத காலம். விரல்களால், சுவரில்
கோடிட்டு நாள் கணக்கிட்ட காலம். எனவே தலைவன் எந்த நாள்
வருவான் என்பதனைக் கணக்கிட தலைவி சுவரில் கோடிட்டு,
அக்கோடுகளை ஒவ்வொரு நாளும் தொட்டுத் தொட்டு
எண்ணியதால் அவள் விரல் தேய்ந்து விட்டது. மேலும் தலைவன்
வரும் வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்களும் ஒளியிழந்து
விட்டன.


வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாள் ஒற்றித் தேய்ந்த விரல்



(குறள்: 1261)


(வாள் அற்று = ஒளியிழந்து, புற்கென்ற = கண்பூத்து)

தலைவனின் பிரிவு தலைவியைப் பெரும் அளவில் பாதித்துள்ளது.
எனவே அவனது வருகையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறாள்.
அந்த ஆர்வத்தினால், தன் விரல் தேய்வதையும் பொருட்படுத்தாமல்
செயல்படுகிறாள்.


தன் மதிப்பீ்டு : வினாக்கள் : I
  1. எதை அகப்பொருள் என்று குறிப்பிடுகின்றனர்?
[விடை]
  1. அக இலக்கியத்தில் ‘களவு’ என்றால் என்ன
    என்பதனை விளக்குக.
[விடை]

  1. இப்பாடப்பகுதியில் எமன் எதனோடு
    ஒப்பிடப்படுகிறான்?
[விடை]
  1. பெண்ணின் முகம் எந்த வகையில் நிலவைவிட
    சிறந்தது?
[விடை]
  1. தலைவன் தலைவியை எந்த எந்த
    காரணங்களுக்காகப் பிரிந்து செல்வான்?
[விடை]

  1. பிரிவு காலத்தில், இரவு நேர பிரிவையே தலைவி
    மிகவும் துன்பமாகக் கருதுகிறாள். காரணம்
    என்ன? விளக்குக.
[விடை]

  1. தலைவியின் விரல் தேய்வதற்கு உரிய காரணம்
    என்ன?
[விடை]