1.1 இஸ்லாம் - வரையறையும் வரலாறும்

    இஸ்லாம்     என்பது அறபி மொழிச் சொல்லாகும்.
இச்சொல்லுக்குக் கீழ்ப்படிதல், கட்டளையை நிறைவேற்றல் என்பன
பொருள்களாகும். எல்லாம் வல்ல இறைவனுக்குக் கீழ்ப்படிந்து
அவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுதல் இஸ்லாமியர்க்குக்
கடமை என்னும் விரிவான பொருளில் இச்சொல் அமைந்தது
எனலாம்.

    இஸ்லாம் என்னும் சொல்லுக்கு மற்றொரு பொருள் சாந்தி
என்பதாகும். இது சலாம் என்ற சொல்லடியாகத் தோன்றியது.
ஒருவன் இறைவனுக்கு முற்றிலும் சரணடைந்து அவ்விறைவனுக்குக்
கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் தன் உடலுக்கும் உள்ளத்திற்கும்
சாந்தி தர முடியும். சாந்தி பெற்ற உள்ளத்தால்தான் சமுதாயத்தில்
அமைதியை நிலைநாட்ட முடியும். இத்தகைய வழிமுறைக்குப்
பெயர்தான் இஸ்லாம் எனலாம். இஸ்லாமியத் திருமறையாகிய
குர்ஆன், இறைவனின் நேர்வழியைப் பின்பற்றி நடப்பவர்களுக்குச்
சாந்தி உண்டாகும் என்றும், இறைவனை நினைவு கூர்வதால்
உள்ளங்கள் அமைதி பெறுகின்றன என்றும், வகுத்துரைப்பது
நினைவு கூரத்தக்கது. இஸ்லாம் ஏக இறைவனாகிய அல்லாஹ்வால்
ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் ஆகும்.

    உலகச் சமயங்களில் மிகப் பெரும்பாலான சமயங்கள் அவ்வச்
சமயங்களைத் தோற்றுவித்த நாயகர்களின் பெயராலேயோ நாட்டின்
பெயராலேயோ வழங்கப்படுகின்றன. சான்றாக, கிறித்து கண்ட
சமயம் கிறித்துவம் ; இஸ்ரவேல் புத்திரர்களில் லேவி என்பாரின்
சமூகம் கண்ட சமயம் இஸ்ரவேலர்; யஹூதா என்பாரின்
வழித்தோன்றல்கள் கண்ட சமயம் யூத மார்க்கம்; கௌதம புத்தர்
கண்ட மார்க்கம் பௌத்தம் ; பாரசீக நாட்டார் இந்தியப்
படையெடுப்பின்போது, சிந்து சமவெளியைக் கண்டு, அன்னார்
தங்கள் மொழியில் இந்து (செழுமை) என வழங்கிய சொல் இந்திய
நாட்டுச் சமயத்தின் பெயராக அமைந்துள்ளது. ஜொராஸ்டியர்,
கன்பியூஷியஸ், சீன நாட்டுத் தாவோ மார்க்கமும், நாயகர்களால்,
சமூகத்தால் நாட்டால் அமைந்த பெயர்களேயாம். ஆனால்
இஸ்லாம் சமயத்தின் பெயர் அவ்வகையில் அமையவில்லை.
படைப்பிற்கும் படைத்த இறைவனுக்கும் இடையே உள்ள உறவால்-
தொடர்பால் - ஆற்றும் கடமையால் - நடைமுறைக் கூறுகளால்
அமைந்த பெயராகும்.

  • மூமின் - முஸ்லிம்

    இஸ்லாமியர்களை மூமின் என்றும் முஸ்லிம் என்றும்
குறிப்பிடுவர். இப்பெயர்களுக்கான காரணங்களும் அறியத்தக்கன.
இஸ்லாமிய நெறியில் பிறழ்வற நிற்பவர்கள் மூமின் ஆவர். மூமின்
யார் என்றால், இறைவன் மீதும், இறைத்தூதர் மீதும் நம்பிக்கை
கொண்டும் தம் உயிர் மற்றும் செல்வங்களைக் கொண்டு
இறைவனின் பாதையில் பிறழ்வற ஒழுகி நிற்பவர்கள் ஆவர்.
முஸ்லிம் என்னும் பெயர் நபி இப்ராஹிம் இட்டதாகும். இது பார்சி
மொழிச் சொல்லாகும். முஸ்லிம் என்னும் பெயர் முஸல்மான்
என்றும் திரிந்து வழங்கப்படுகின்றது. முஸ்லிம் எனப்படுவோர்
இஸ்லாம் சமய அறத்தைப் பேணி ஒழுகும் தலையாய மக்கள்
ஆவர். தம் நாவைக் கொண்டோ கரங்களைக் கொண்டோ
மாற்றாருக்குத் தீங்கிழைக்காதவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.

    இஸ்லாம் சமயம், மனுக்குல முதல்வராகிய ஆதம் நபி
இப்பூவுலகில் காலடி பதித்த காலத்தில் தோன்றிவிட்டது ;
காலந்தோறும் வந்த சான்றோர்களால்     புனருத்தாரணம்
பெற்றது ; கி.பி.6 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி
நாயகம் என்னும் சான்றோரால் நிறைவு பெற்றது. இதற்கான அக-
புறச் சான்றுகள் இஸ்லாம் சமய நூல்களிலிருந்தும் காலத்
தடயங்களிலிருந்தும் கிடைக்கின்றன.

1.1.1 வரலாற்றுக்குரிய மூலங்கள்

    இஸ்லாம் சமய வரலாற்றிற்கு, இஸ்லாம் சமய வேத நூலாகிய
குர்ஆனும், குர்ஆனின் திருவசனங்களை நடைமுறைப்படுத்திய
நபிகள் பெருமானார் அவ்வப்போது தாம் திருவாய்
மலர்ந்தருளிய ஹதீஸ்களின் தொகுப்புகளுமே முதன்மைச்
சான்றாதாரங்களாகக்     கொள்ளப்படுகின்றன.     துணைமைச்
சான்றாதாரங்களாக இடச் சான்றுகள், புதை பொருட்கள்,
மேனாட்டார் குறிப்புகள், வரலாற்று விளக்க நூல்கள்,
திறனாய்வுகள், சங்க மற்றும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள்
கொள்ளப்பட்டுள்ளன.

1.1.2 மனிதகுல முதல்வர்

    இஸ்லாம் சமய வரலாறு மனிதகுல முதல்வராகிய
ஆதம்நபியிலிருந்து தொடங்குகின்றது. இவ்வரலாற்று நாயகராகிய
ஆதம்நபி     அல்லாஹ்வால் வானுலகில் படைக்கப்பட்டார்.
இவருக்குத்     துணையாக ஹவ்வா என்னும் மாதரசியும்
படைக்கப்பட்டார். ஆதம், ஹவ்வா என்னும் பெயர்கள்
விவிலியத்தில் ஆதாம், ஏவாள் என்றமைந்திருப்பதும் சுட்டத்தக்கது.

    வானுலகில் மகிழ்வுடன் காணப்பட்ட இவர்களுடைய வாழ்வை
இப்லீஸ் என்னும் சாத்தான் குலைத்தான். சாத்தானின் சொல்லுக்குச்
செவி சாய்த்த இவர்கள் இறைச்சாபம் பெற்று, பிரிக்கப்பட்டுக்
கிழக்கும் மேற்குமாகப் பூவுலகில் தூக்கி எறியப்பட்டனர். இவ்வாறு
குர்ஆனில் மனுக்குல முதல்வரின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

1.1.3 குமரி நாடு

    உலகம் தோன்றியபோது, இன்றைய குமரிமுனைக்குத்
தென்பகுதி ஒருபுறம் தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர் தீவு
முதலியவற்றோடும், மறுபுறம் ஆஸ்திரேலியா, ஜாவா, சுமத்திரா,
மலேயா முதலியவற்றோடும் இணைந்து பூமத்திய ரேகை வரை
பரவி இருந்தது. விந்திய மலைக்கு அப்பால் சிந்து கங்கைச்
சமவெளியும், இமயமலை உள்ளிட்ட பகுதிகளும் கடலுக்குள்
அமிழ்ந்திருந்தன. இத்தகைய பெருநிலப்பரப்பு குமரிக்கண்டம்
எனப்பட்டது. நிலநூல் வல்லார் இதனைக் கோண்டுவானா
(Gonduvana) என்றும், உயிரியலார் லெமூரியா (Lemuria) என்றும்
கூறுவர். ஸ்காட் எலியட், இழந்த லெமூரியா நூலில் காட்டிய
நிலவியல் படத்தில் நைல் நதி பாயும் எகிப்து நாடு இல்லை ;
குமரிநாடு கடலுள் மூழ்க மூழ்க விந்திய மலைக்கு அப்பால் உள்ள
நிலப்பரப்பும் எகிப்து நாடும் மெதுவாக நிவந்து வந்தது என்பார்.

    குமரி நாட்டில் வளம் கொழிக்கும் பஃறுளி ஆறு ஓடியது.
இன்றைய     இந்தியாவின் மேலைக்கரையிலிருந்து தெற்கில்
நெடுந்தொலைவு வரை ஓடி மேற்கும் கிழக்குமாகப் பேரரண்போல்
ஒரு மலைத்தொடர் இருந்ததாகவும் நிலநூல் வல்லார்
வகுத்துரைக்கின்றனர். ஆசியாவிற்கு இமயமலையும் ஐரோப்பாவிற்கு
ஆல்ப்ஸ் மலையும், தென்அமெரிக்காவிற்கு ஆண்டீஸ் மலையும்
இருப்பதைப் போலவே, குமரிப் பெருநாட்டில் குமரிமலை
பேரரணாக இருந்தது என ஹக்ஸ்லி (Huxley) என்னும் அறிஞர்
கருதுகின்றார். இந்நாடு இருமுறை நிலை பிறழ்ந்தது என்றும்
அப்போது நிகழ்ந்த மாறுதல்கள் இவை இவை என்றும் ஸ்காட்
எலியட் காட்டுகின்றார். இக்கூற்றிற்கு வலிமை சேர்க்கும் வகையில்
இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில்,

    பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
     குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள

எனக் குறித்திருப்பது ஒப்புநோக்கத் தக்கது.

    மனித இனத் தோற்ற வரலாற்றை ஆய்வு செய்த அறிஞர்கள்
அனைவரும் மனித குலத் தோற்றம் குமரிப் பெருநாட்டிலிருந்து
தொடங்குவதாக நிறுவுகின்றனர். உலகம் தோன்றிய காலத்தில்
குழம்பாக இருந்த மண் முதலில் குளிர்ச்சி அடைந்து அமைந்த
நிலப்பரப்பு குமரி நாடு என்றும், இங்குதான் மனிதன் தோன்றி
இருக்கக்கூடும் என்று ஸ்காட் எலியட் கருதுகின்றார். ஹெக்கல்
என்னும் ஜெர்மானிய அறிஞர், குமரி முனைக்குத் தெற்கே பூமத்திய
ரேகைக்கு இருபக்கத்திலுமுள்ள நிலப்பரப்பே முதலில் மக்கள்
வாழ்வதற்கேற்ற நிலையை அடைந்ததென்றும், அங்குதான் முதன்
முதலில் மக்கள் தோன்றி நாகரிகத்திற்கு வித்திட்டனர் என்றும்
கூறுகின்றார். தமிழறிஞர் இலக்குவனார், முதல் மனிதனின்
தொட்டில் தென்தமிழ் நாடே என உறுதிபட உரைக்கிறார். ஆகவே
முதல் மனிதராகிய ஆதம் நபியின் தோற்றம் தென்தமிழ்நாடே
எனத் தெளியலாம்.

1.1.4 அறிவியலார் துணிபு

    மனித குலம் உலகில் தோன்றிய வரலாற்றை ஆய்வு செய்த
அறிஞர் பெருமக்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
டார்வின்     முதலான     பரிணாமக்     கொள்கையர்கள்
(Evolutionists) பூமியைச் சுற்றியுள்ள நீர்ப்பரப்பு, சூரிய
வெப்பத்தால் ரசாயனமாற்றம் அடைந்து முதலில் கடற்பூண்டுகளும்,
தலையோடில்லாத உயிரினங்களும் உண்டாயினவென்றும், பின்னர்
மலைப்பூண்டுகளும் மீனினங்களும் உண்டாயினவென்றும், அதன்
பின்னர்த் தழை செறிந்த பெருமரக் காடுகளும் விலங்கினங்களும்
தோன்றின வென்றும், இறுதியாகக் குரங்கிலிருந்து மனிதன்
பிறந்திருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர். எல்லா உயிர்ப்
பிராணிகளும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்தான் ; சில தன்
வயிற்றால் நடப்பவை, சில இரு கால்களாலும் நான்கு கால்களாலும்
நடப்பவை எனக் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

    உயிரினத் தோற்ற ஆய்வாளரும் சிறப்புப் படைப்புக்
கொள்கையரும் (Theory of Special Creation) இயற்கைக்கு
அப்பாற்பட்ட சக்தியான கடவுள் தான் இப்பேரண்டம், பூமி,
உயிரினங்கள் ஆகிய யாவற்றையும் படைத்தான் என்கின்றனர்.
கடவுள் நம்பிக்கையுள்ள இக்கொள்கைக்குச் சான்று இல்லை.
இக்கொள்கை வேதாகம வழியில் தோன்றியது. பிரபஞ்ச இயலார்
(Cosmologists) மற்றைய கோள்கள், எரிகற்கள், நட்சத்திரங்கள்
மூலம் ஸ்போர்கள் (Spors) வழியாக உயிரிகள் இவ்வுலகிற்கு
வந்திருக்கக் கூடும் எனக் கருதுவது ஆதம்நபி, ஹவ்வா நாயகி
ஆகிய இருவரும் வான மண்டலத்திலிருந்து பூவுலகிற்கு வந்து
தோன்றியதை ஓராற்றான் உறுதிப்படுத்தும் சான்று எனலாம்.

  • இடச்சான்றும் மேனாட்டார் குறிப்பும்

    வான மண்டலத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட ஆதம்-ஹவ்வா
நாயகி ஆகியோர் கிழக்கிலும் மேற்கிலுமாகப் பிரிந்து பூவுலகிற்கு
வந்ததை மார்க்கோபோலோவின் பயணக் குறிப்பு சான்றளிக்கிறது.
‘சொர்க்கலோகத்திலிருந்து மக்கள் கீழே தள்ளப்பட்டபோது
ஆதம் என்கின்ற ஆதி பிதா இலங்கை நாடாகிய சிரந்தீபத்திலும்
ஹவ்வா என்கிற ஏவாள் ஜூடோ (ஜித்தா) என்னும் இடத்திலும்
விழுந்தனர் ; ஈழ நாட்டில் உள்ள கொழும்பு நகருக்கு 45 மைல்
கிழக்காக அமைந்திருக்கும் மலைத்தொடரின் சிகரம் ஒன்று
ஆதம்சிகரம் எனப்படுகின்றது. இதன் உயரம் 7352 அடியாகும்.
இதன் உச்சியிலுள்ள பீடபூமியில் மனிதக் காலடிச்சுவடு ஒன்று
பதிந்துள்ளது. இப்பாதச்சுவடு     இஸ்லாமிய - கிறித்தவ
சமயத்தவர்களால் ஆதம் நபியினுடையதென்றும் பௌத்தர்கள்
புத்த பிரானுடையதென்றும், இந்துக்கள் சிவபிரானுடையதென்றும்’
சொல்லப்படுகிறது. இலங்கையின் பழைய வரலாறு கூறும்
மகாவம்சம் சுமணகூடம் என்கிறது. மார்க்கோபோலோ ஆதம்
சிகரத்தின் உச்சியில் ஆதிமனிதன் ஆதமின் சமாதி இருப்பதாகக்
குறிப்பிடுவது ஆய்வுக்குரியது.

    இவ்வகையில் ஆதம் நபி தமிழ்நிலத்தில் தோன்றியதற்கான
சான்று கிடைக்கின்றது.

    தென் தமிழ்நாட்டிலுள்ள சோழ மண்டலக் கரையில்,
இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார்த் தீவு வரையிலுமுள்ள 30
மைல் நீள அளவிலான பாறையும் மணலும் சேர்ந்த திட்டுகள்
ஆதம் வாராவதி எனப்படுகிறது. இதனை வானரங்கள் கட்டிய தீவு
என்பர். சில இடங்களில் மூன்று அல்லது நான்கு அடி அளவில்
நீர் நிற்கிறது. ஆதியில் பூசந்தியாக இருந்ததாகவும் கி.மு.1480-இல்
உடைப்பு ஏற்பட்டதாகவும் கோயிற் சாசனங்கள் கூறுகின்றன.

    இவ்வகையில் ஆதம்-ஹவ்வா பூவுலகில் தோன்றிய வரலாறு
அகப்புறச் சான்றுகளால் அறியக் கிடக்கிறது.

1.1.5 காலம்

    ஆதம் நபி இவ்வுலகில் தோன்றிய காலமும் ஆராயத்தக்கது.
உமறுப்புலவர், சீறாப் புராணத்துள் ஆதம்நபி இவ்வுலகில்
தோன்றிய ஆண்டைக் குறிப்பிட்டுள்ளார்.

    நபிகள் பெருமானாருக்கு     நபித்துவம் அருளப்பட்ட
ஆண்டைக் காட்டும்போது, ஆதம்நபி மண்ணுலகிற்கு வந்த
ஆண்டை ஒரு எல்லையாகக் கொண்டு காட்டுகின்றார்.

     துய்யவன் அருளால் ஆதம்மா மனுவாய்த்
     தோன்றிய அவனியின் வருடம்
     ஐயமில் ஆறா யிரத்தினில் ஒருநூற்(று)
     இருபத்து மூன்றினில் அழகால்
     வையகம் மதிக்கும் முகம்மதின் வயது
     நாற்பதில் ரபியுலவ் வல்லினில்
     எய்திய எட்டாந் தேதியில் சனியின்
     இரவினில் கிராமலை இடத்தில்

     (சீறாப்புராணம், நபிப்பட்டம் பெற்ற படலம்-11)

என வரும் செய்யுள் இதனைக் காட்டுகின்றது.

    ஆதம்நபி உலகில் தோன்றி ஆறாயிரத்து நூற்று இருபத்து
மூன்று ஆண்டுகள் கழித்து நபிபிரானுக்கு நபிப்பட்டம்
அருளப்பட்டதாக உமறுப்புலவர் கருதுகின்றார்.

    நபிகள் பெருமானாருக்கு நபிப்பட்டம் கி.பி.610-ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 10-ஆம் நாள் அருளப்பட்டது. இவ்வகையில்
உமறுப்புலவர் கூற்றுப்படி 6123 ஆண்டுகளில் இருந்து 610
ஆண்டுகளைக் கழித்தால் 5513 ஆண்டுகள் (6123-610) வரும்.
இவ்வடிப்படையில் ஆதம்நபி கி.மு. 5513-ஆம் ஆண்டு உலகில்
தோன்றியதாகக் கொள்ளலாம்.

    1975 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட யூத நாட்காட்டியில்
ஆதம்நபி     கி.மு.5736 இல் இவ்வுலகில்     தோன்றியதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வகை யிலாயினும் ஆதம்நபி இவ்வுலகில்
கி.மு.ஐயாயிரத்து நூறாம் ஆண்டினை ஒட்டித் தோன்றினார்
எனலாம்.

    வரலாற்றாய்வாளர்கள் கி.மு.8000 முதல் 5000 வரையுள்ள
காலத்தைப் புதிய கற்காலம் என்றும் கி.மு.5000 முதல் 2000
வரையுள்ள காலத்தைப் பெருங்கற்புதைவுக் காலம் என்றும் கூறுவர்.
ஆதலால் மனுக்குல முதல்வராகிய ஆதம்நபி புதிய கற்காலத்தில்
குமரிப் பெருநாட்டில் தோன்றி வாழ்ந்தார் எனலாம்.

1.1.6 வாளொடு தோன்றிய மூத்தகுடி

    குமரிப் பெருநாட்டில் வாழ்ந்த ஆதம்-ஹவ்வா தம்பதியர்க்கு
ஆபில், காபில், சேத் என்னும் மூன்று ஆண்மக்கள் பிறந்தனர்.
ஆதம்நபி இழந்துவிட்ட வானுலக வாழ்வை எண்ணி எண்ணி
வருந்தினார். வானுலகிலிருந்து எடுத்துவந்த ஹஜ்ருல்-அஸ்வத் கல்
அவருடைய இழந்துவிட்ட வாழ்வுக்குச் சான்றாக இருந்தது.
இறைவனை அரூபியாகக் கொண்டார். நாளெல்லாம் அந்த
இறைவனை வழிபடுவதில் கழித்தார். மகன் ஆபிலைப் பக்தி
மார்க்கத்தில் உருவாக்கினார். காபில் வீரஞ்செறிந்த வாழ்வினனாக
இருந்தான். சேத் சாதுவான இயல்பினனாக இருந்தான்.

    ஒருநாள் ஆபிலும் காபிலும் இறைவழியில் பலி தந்தனர்.
ஆபிலின் பலி ஏற்றுக் கொள்ளப்பட்டது. காபிலின் பலி ஏற்றுக்
கொள்ளப்படவில்லை. அதனால் ஆபிலின்மேல் காபில் பொறாமை
கொண்டார் ; அவரைக் கொல்லத் துணிந்தார். அந்நிலையில்
ஆபில் பயபக்தி உள்ளவர்களின் பலிதான் ஏற்றுக் கொள்ளப்படும்.
நீ என்னைக் கொல்வதற்காக என்னளவில் கையை நீட்டினால் நான்
உன்னளவில் கையை நீட்டமாட்டேன். ஏனென்றால் நான்
இறைவனுக்கு அஞ்சுகிறேன். என்னுடைய பாவத்தையும் சுமந்து
கொண்டு நீ இறைவனுக்கு முன்னால் வருவதைப் பார்க்கவே நான்
விரும்புகிறேன். இதன் பின்னரும் காபிலின் மனம் தூண்டவே
அவர் ஆபிலைக் கொலை செய்தார். கொலை செய்துவிட்ட
பின்னர் அக்கொலையை மறைக்கும் மார்க்கம் அறியாமல் காபில்
திகைத்து நின்றார். அப்போது இரு காக்கைகள் சண்டையிட்டுக்
கொண்டு பறந்து வந்தன. வலுவான காக்கை வலுவற்றதைக்
கொன்று தன் காலாலும் அலகாலும் நிலத்தைக் கிண்டி அதனுள்
இறந்த காக்கையைப் புதைத்துவிட்டுப் பறந்தது.

    ஆதமின் குமாரன் கொலையை மறைக்கும் மார்க்கத்தைக்
கற்றுக் கொண்டார். இரத்தக் கரையில் மிதக்கும் ஆபிலைக் குழி
தோண்டிப் புதைத்தார்.

    அறபுநாட்டில் மக்காமாநகரத்தில் உள்ள காபா இறை இல்லம்
ஆதம் நபியால் கட்டப்பட்டது. தான் வானுலகிலிருந்து கொண்டு
வந்த ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முகப்பில் பதித்தார்.
பிரார்த்தனைக் கூடம் அமைத்து அரூபியான இறைவனிடம்
பாவமன்னிப்பு வேண்டி நாளும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

    ஹஜ்ருல் அஸ்வத் கல், வானுலகக் கல்லென ஆய்வாளர்கள்
பலரும்     சான்றளிக்கின்றனர். தத்துவ அறிஞர், ராகுல
சாங்கிருத்தியாயன், தன் இஸ்லாமியத் தத்துவ இயல் என்னும்
நூலில் இது பொறிந்த நட்சத்திரத்தின் பகுதி எனச் சான்றளிப்பது
கருதத்தக்கது.

  • தமிழினம்

    தலைமகன் ஆபிலின் கொலையை அறிந்த ஆதம்,
காபிலுக்குப் பயந்தார். சேத்தையும் அவன் கொன்று விடுவானோ
என அஞ்சினார். சேத்துடன் தன் மனைவியையும் அழைத்துக்
கொண்டு, அவள் அறிந்த அறபுப் பாலைவனத்திற்குப் பெயர்ந்தார்.

    ஆதம் - ஹவ்வா உலகில் தோன்றிய காலத்தில் கல் (மலை)
தோன்றி விட்டது ; மண் தோன்றவில்லை. கல் தோன்றி மண்
தோன்றாப் பருவத்தில் காபில் ஆபிலைக் கொலை செய்தான்.
தக்கலை பீர்முகம்மது அப்பா,

        ஊனியே ஆபில் தன்னை
             உலகினில் காபில் என்போன்
      கூன்கொலை செய்த தாலே
             குஃபிர்குலம் தோன்ற லாச்சு
                         (திருநெறி நீதம், 3 :42)

எனத் தமிழினத்தின் தோற்ற வரலாற்றைக் குறிப்பிடுகின்றார்.

    புறப்பொருள் வெண்பாமாலை அருளிய ஐயனாரிதனார்,

    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
     முன்தோன்றி மூத்த குடி

எனக் குறித்திருப்பதும் ஒப்பு நோக்கத்தக்கது.

  • தலச் சான்றுகள்

    காபில் மறைந்தபின் ஆபிலின் சமாதிக்கு அருகில் அடக்கம்
செய்யப்பட்டார் போலும். ஆபில், காபிலின் சமாதிகள்
இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளன என்று குறிப்பிடுகின்றனர்.

    கி.பி.1310-இல் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான
மாலிக்காபூர் தமிழகத்தின்மேல் படையெடுத்தான் ; வெற்றியும்
கொண்டான். இவன் இராமேஸ்வரம் வரை சென்றதாக. கேம்பிரிட்ஜ்
இந்திய வரலாறும் இராமேஸ்வரத்தில் மசூதி ஒன்றைக் கட்டியதாக
கே.கே.பிள்ளையின்     தென்னிந்திய     வரலாற்றிலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.     இராமேஸ்வரத்தில்     மாலிக்காபூர்
கட்டியதாகக் கருதத்தக்க பள்ளிவாசல் ஏதுமில்லை. ஆபில், காபில்
ஆகியோர்க்குச் சமாதி கட்டியதைத்தான் கே.கே.பிள்ளை மசூதி
எனக் குறிப்பிட்டார் எனலாம்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
இஸ்லாம் என்பதன் இருவகைப் பொருள் விளக்கங்கள்
யாவை?
2.
இஸ்லாமிய மார்க்கம் என்றால் என்ன?
3.
மூமின் - முஸ்லிம் இவற்றின் பொருளைத்
தெளிவுபடுத்துக.
4.
இஸ்லாம் சமய வரலாற்றுக்குரிய மூலங்கள் யாவை?
5.
மனிதகுல முதல்வராக     இஸ்லாம்     யாரைக்
குறிப்பிடுகின்றது?
6.
முதல் மனிதனின் தொட்டில் குமரிநாடே என நிறுவுக.