4.3 தொடக்ககாலக் கிறித்துவம்    

கிறித்துவம் தொடக்க காலத்தில் இறைமக்களை உள்ளடக்கிய
ஒரு பேரியக்கமாகவே விளங்கியது. அரசியல், சமுதாயம்,
பொருளாதாரம், வாழ்வியல் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்டோரின்
கூட்டுறவாகவே இருந்தது. உடல் உழைப்பின் பயனால் வாழ்க்கை
நடத்தியவர்களே தொடக்ககாலத் திருச்சபையின் உறுப்பினர்களாக
விளங்கினர். திருச்சபை இவர்களின் முழுவிடுதலை நோக்கில்
செயல்பட வேண்டியிருந்தது. திருச்சபை என்னும் இவ்வமைப்பு
ஏழைகளுக்கும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டோருக்கும் முன்னுரிமை
தந்து போராட வேண்டிய ஓர் அமைப்பாக இருந்துவந்ததால்
ஆளும் வர்க்கத்தினரால் கடுந்தொல்லைகளுக்கு ஆளானது.
மனிதனைப் பாதிக்கும் சக்திகளை எதிர்த்துப் போராட,
இப்போராட்டங்களில் இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் தம்மை
ஈடுபடுத்திக் கொண்டனர் அவர்கள் கிறித்துவ நெறிகளை அதாவது
மனித உரிமைகளுக்கான வாழ்வை உலகில் விளக்குவதற்காகத்
தம்மையே முழுமையாக அர்ப்பணித்தனர்.

4.3.1 இந்தியாவில் கிறித்துவம்

கிறித்துவ சமயம் தான் தோன்றிய முதல் நூற்றாண்டிலேயே
இந்தியாவிலும் காலூன்றியது. இக்காலத்தில் இயேசுவின் பன்னிரண்டு
சீடர்களுள் ஒருவரான புனித தோமையார் இந்தியாவிற்குத் திருமறை
பரப்ப வந்தார். அவர் இந்தியாவில் முதலில் திருவிதாங்கூரிலும்,
பின்னர்ச் சென்னையை அடுத்த மைலாப்பூரிலும் பணியாற்றினார்.
இப் புனிதர் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் முன்னர்
கலிலேயாக் கடலில் மீனவராக இருந்தார். தாமஸ், திதிமு என்று
இவர் அழைக்கப்பட்டார். அரமாயிக் மொழியில் தாமஸ் என்பதற்கு
இரட்டையர் என்பது பொருள். திதிமு என்பது கிரேக்க மொழியில்
இரட்டையர் என்ற பொருளைக் குறிக்கும். உண்மையில் இவரின்
இயற்பெயர் யூதாஸ் தாமஸ் என்பதேயாகும்.

தோமா     அப்போஸ்தலர்     கி.பி. 52-ஆம் ஆண்டில்
திருவிதாங்கூருக்கு வந்து ஏழு சபைகளைத் தோற்றுவித்தார். சிறிது
காலம் அங்கு ஊழியம் செய்த பின்னரச் சென்னையை அடுத்த
மைலாப்பூருக்குச் சென்றார்.

வணிகக்கப்பல்களில் பயணம் செய்தே அவர் இந்தியாவிற்கு
வந்திருக்க வேண்டும். இந்தியாவில் அவர் முதன் முதலாகக்
கேரளாவில் உள்ள கிரங்கனூர் என்ற இடத்திற்கே வந்தார். அவரின்
பணி கேரளாவில் தொடங்கியது. கேரளக் கடற்கரையோரமாக
நற்செய்திப் பணியினைப் பாங்குறச் செய்தார். இந்நற்செய்தியை
உணர்ந்து மனந்திரும்பிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆவர்.
இன்று கேரளாவில் உள்ள மார்த்தோமா திருச்சபை, சிரியன்
திருச்சபை ஆகியவை தோமையரால் தொடங்கப்பட்டவை.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தொடக்ககாலக் கிறித்துவத்தின் சிறப்பு யாது?
2.
இயேசுபெருமான் யாரிடம் திருமுழுக்குப் பெற்றார்?
3.
இயேசுநாதர் பிறந்தபோது பாலஸ்தீனாவை ஆண்ட மன்னன் யார்?
4.
விவிலியம் - விளக்குக.

5.

தொடக்க காலக் கிறித்துவத்தின் சிறப்பியல்புகள்
யாவை?

விடை

6.

புனித தோமையாரின் சமயப் பணிகள் யாவை?

விடை