17. பொருள்

பொருள்

பாடம்
Lesson


எழுத்தையும் சொல்லையும் கொண்டு அணிநயம் மிளிர யாப்பு இலக்கணம் சிதையாமல் பாடும் செய்யுள் பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டுமல்லவா? அப்பொருள் பற்றிக் கூறும் இலக்கணம் பொருள் இலக்கணம். இது, அகப்பொருள், புறப்பொருள் என இரு வகைப்படும்.

திணை என்ற சொல்லுக்கு நிலம் - ஒழுக்கம் என இரண்டு பொருள் உண்டு.

1. குறிஞ்சி - மலையும் மாலை சார்ந்த இடமும்.
2. முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்.
3. மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்.
4. நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்.
5. பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும்.

(பாலைக்குத் தனி நிலம் இல்லை. தத்தம் இயல்பில் குறைந்த குறிஞ்சியும் முல்லையும் பாலை என வழங்கப்பெறும்.)

பெரும் பொழுது

பெரும்பொழுது என்பது ஆண்டின் கூறுபாடுகள்.

(1) இளவேனிற் காலம்
(2) முதுவேனிற் காலம்
(3) கார் காலம்
(4) கூதிர் காலம்
(5) முன்பனிக்காலம்
(6) பின்பனிக்காலம்

சிறுபொழுது

சிறுபொழுது நாளின் கூறுபாடுகள்.

(1) வைகறை
(2) காலை
(3) நண்பகல்
(4) எற்பாடு (ஞாயிறு மறையும் நேரம்)
(5) மாலை
(6) யாமம்
பெரும் பொழுது உரிய திங்கள்
(1) இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி
(2) முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி
(3) கார்காலம் - ஆவணி, புரட்டாசி
(4) குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
(5) முன்பனிக்காலம் - மார்கழி, தை
(6) பின்பனிக் காலம் - மாசி, பங்குனி
சிறுபொழுது உரிய நேரம்
(1) வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
(2) காலை - காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை
(3) நண்பகல் - முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
(4) எற்பாடு (எல்+படு) - (ஞாயிறு மறையும் நேரம்)
பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
(5) மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
(6) யாமம் - இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை.

ஐந்து நிலங்களும் உரியப் பெரும் பொழுதுகளும் சிறுபொழுதுகளும் பின்வருமாறு :

(நிலமும் - பொழுதும்)

எண். நிலம் பெரும்பொழுது சிறுபொழுது
1. குறிஞ்சி குளிர்காலமும் முன்பனிக்காலமும் யாமம்
2. முல்லை கார்காலம் மாலை
3. மருதம் பெரும்பொழுதுகள் ஆறும் வைகறை
4. நெய்தல் பெரும்பொழுதுகள் ஆறும் எற்பாடு
5. பாலை இளவேனில், முதுவேனில் நண்பகல்

கருப்பொருள் அட்டவணை

கருப்பொருள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
தெய்வம் முருகன் திருமால் இந்திரன் வருணன் கொற்றவை
மக்கள் வெற்பன், குறவர், குறத்தியர் தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் ஊரன், உழவர், உழத்தியர் சேர்ப்பன், பரதர், பரத்தியர் எயினர், எயிற்றியர்
உணவு மலைநெல், திணை வரகு, சாமை செந்நெல், வெண்ணெய் மீன், உப்புக்குப் பெற்ற பொருள் சூறையாடலால் வரும் பொருள்
விலங்கு புலி, கரடி, சிங்கம் முயல், மான் எருமை, நீர்நாய் முதலை, சுறா வலியிழந்த யானை, புலி
பூ குறிஞ்சி, காந்தள் முல்லை, தோன்றி செங்கழுநீர், தாமரை தாழை, நெய்தல் குரவம், பாதிரி
மரங்கள் அகில், வேங்கை கொன்றை, கயா காஞ்சி, மருதம் புன்னை, ஞாழல் இருப்பை, பாலை
பறவை கிளி, மயில் காட்டுக்கோழி, மயில் நாரை, நீர்கோழி, அன்னம் கடற்காகம் புறா, பருந்து
ஊர் சிறுகுடி பாடி, சேரி பேரூர், மூதூர் பட்டினம், பாக்கம் குறும்பு
நீர் அருவி, சுனைநீர் காட்டாறு மனைக்கிணறு, பொய்கை மணற்கிணறு, உவர்க்கழி வற்றிய சுனை, கிணறு
பறை தொண்டகம் ஏறுகோட்பறை மணமுழா, நெல்லரி கிணை மீன்கோட்பறை துடி
யாழ் குறிஞ்சி யாழ் முல்லை யாழ் மருத யாழ் விளரி யாழ் பாலையாழ்
பண் குறிஞ்சிப் பண் சாதாரிப்பண் மருதப்பண் செவ்வழிப்பண் பஞ்சுரப் பண்
தொழில் தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல் ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் நெல்லரிதல், களை பறித்தல் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் வழிப்பறி, நிரை கவர்தல்

புறப்பொருள்

ஒத்த அன்புடைய தலைவன் தலைவியரால் மட்டுமன்றி யாவராலும் துய்க்கப் பெற்று, பிறருக்கும் கூறப்படும் தன்மைவாய்ந்த பொருள் புறப்பொருள்.

இது, அறமும் பொருளும் அவற்றின் நிலையின்மையும் வீடுபேறும் பற்றிக் கூறுவது.

புறப்பொருள் திணைகள் - 12

வ. எண். திணை விளக்கம்
1. வெட்சி பசுக்களைக் கவர்தல்
2. கரந்தை பசுக்களை மீட்டல்
3. வஞ்சி வஞ்சினம் கூறி வஞ்சிப்பூச் சூடிப் போருக்குப் புறப்படுதல்
4. காஞ்சி எதிர்த்துப் போர் புரிய நிற்றல்
5. உழிஞை பகைவரின் மதிலை வளைத்தல்
6. நொச்சி மதிலுக்குள் புகாதவாறு தடுத்துப் போர்ப் புரிதல்
7. தும்பை நேர் நேர் நின்று போர்ச் செய்தல்
8. வாகை வெற்றி பெற்றவர் வாகைப்பூச் சூடுதல்.
9. பாடாண் அரசனின் புகழ், கொடை, வலிமை, வீரம் முதலான பண்புகளைப் புகழ்ந்து பாடுதல்.
10. பொதுவியல் புறத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளைக் கூறுதல்.
11. கைக்கிளை ஒரு தலைக் காதல்
12. பெருந்திணை பொருந்தாக் காதல்