Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு முக்தேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

தர்மமஹாதேவீச்சுரம், மாணிக்கேஸ்வரம்

Place :

காஞ்சிபுரம்

Taluk :

காஞ்சிபுரம்

District :

காஞ்சிபுரம்

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

முக்தேஸ்வரர்

Procession On God :

Mother / Goddess Name :

Temple Tree :

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

Festivals :

History :

கருடன் இங்கு வணங்கி பேறு பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. 63 நாயன்மார்களுள் ஒருவரான திருக்குறிப்புத் தொண்டரை இங்கு சிவபெருமான் ஆட்கொண்ட பெரியபுராணச் செய்தி இங்கு சிற்பமாக உள்ளது.

Protecting Company :

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.

Nearest Temples Arc :

காஞ்சி கைலாசநாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சியம்மன் கோயில்

Summary :

நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில் பல்லவர் கால கற்றளியாக முக்தேஸ்வரம் விளங்குகின்றது. இக்கோயில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. தாங்குதளத்திலிருந்து (அதிட்டானம்) மணற்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மணற்கற்களிலேயே புடைப்புச் சிற்பங்களை எளிதாக வடிக்க இயலும். எனவே கருங்கல்லின்றி மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கோயில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. கோயிற் கட்டடக் கலைப் பாணிகளுள் ஒன்றான நாகரபாணியில் அமைந்துள்ளது. தளங்களில் சுதைச்சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை இந்தியத் தொல்லியல் துறையினரால் புனரமைக்கப்பட்டுள்ளன. தாங்குதளத்தில் கல்வெட்டுகளோ, கதைவிளக்கச் சிற்பங்களோ காணப்படவில்லை. இவ்வமைப்பு காலத்தால் முந்தையதாகும். மிகவும் எளிய அமைப்பாக தாங்குதளம் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம் பெற்று பாதபந்த அதிட்டானமாக விளங்குகின்றது. சுவர்ப்பகுதியில் சிவவடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. சுவர்களின் மூலைப்பகுதியில் தூண்களைப் போன்று நின்றநிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இக்கோயிலில் அதன் வளர்ச்சிக் கட்டமாக நின்ற நிலை யாளியே தூணின் சதுரம் மற்றும் கட்டுப்பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ளது இவ்வமைப்பு பல்லவர்களின் கட்டடக் கலைச் சிறப்பைக் காட்டுகிறது. யாளி பாயும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. சுவரில் காட்டப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அழகிய, எளிய வடிவினவாக அதிக அலங்காரமின்றி, இயல்பான நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. எழிலார்ந்த இச்சிற்பங்களின் உருவத் தன்மையை நோக்குங்கால் உண்மையான வடிவங்களாக அவை விளங்குவதைக் காணலாம். கருவறை வெளிப்புற சுவரில் இடம்பெற்றுள்ள புடைப்புச்சிற்பங்களின் இருபுறமும் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் திசைக்கு இரண்டாக வாயிற்காவலர்கள் இரண்டு அரைத்தூண்களுக்கு நடுவில் நின்ற நிலையில் கதாயுதத்துடன் காட்டப்பட்டுள்ளனர். பல்லவர்களின் குடைவரைகளில் வாயிற்காவலர்கள் காட்டப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. அதன் வளர்ச்சி நிலையாக விமானச் சுவர்களில் அமைந்துள்ள கோட்ட புடைப்புச் சிற்பங்களுக்கு வாயிற்காவலர்கள் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். இக்கோயில் தரைப்பகுதியில் இருந்து சற்றுஉயர்வாக அமைக்கப்பட்ட உபபீடத்துடன் விளங்குகின்றது. முகமண்டபம் சோழர்காலத் தூண்கள் மற்றும் யாளித்தூண்கள் கொண்டு இரண்டாகப் பகுக்க பெற்றுள்ளன. இம்மண்டபங்களின் சுவர்ப்பகுதியில் இராவண அனுக்கிரகமூர்த்தி, கஜசம்ஹாரமூர்த்தி, காலாந்தக மூர்த்தி, கங்காதரர், நடராசர் போன்ற புடைப்புச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபங்களின் சுவர்களில் இவ்வாறு புடைப்புச் சிற்பங்கள் அமைப்பது இங்கு தனிச்சிறப்பு ஆகும். இக்கோயிலில் பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகளும், சோழர்காலக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் நந்திவர்மனின் 28-வது ஆட்சியாண்டில் நிலம் தானமாக கொடுக்கப்பட்டதைக் கூறுகின்றன. வடக்குப்பகுதி சுவரில் உள்ள கல்வெட்டில் முதலாம் இராசேந்திரன் கி.பி.1030-ஆம் ஆண்டு 18-வது ஆட்சியாண்டில் எழுதப்பட்ட மெய்க்கீர்த்தி கல்வெட்டில் கிராம சபைகள் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. இந்தத் திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தின் நுழைவாயிலின் மேற்புறத்தில் ஏகாலியக் குலத்தவரான திருக்குறிப்புத் தொண்டர் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட வரலாறு சிற்பாக வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இன்றும் ஏகாலியர்களின் பராமரிப்பில் அமைந்துள்ளது.

Period / Ruler :

கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் இராஜசிம்மன், இரண்டாம் நந்திவர்மன்

Inscription / Copper :

இக்கோயிலில் பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகளும், சோழர்காலக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் நந்திவர்மனின் 28-வது ஆட்சியாண்டில் நிலம் தானமாக கொடுக்கப்பட்டதைக் கூறுகின்றன. வடக்குப்பகுதி சுவரில் உள்ள கல்வெட்டில் முதலாம் இராசேந்திரன் கி.பி.1030-ஆம் ஆண்டு 18-வது ஆட்சியாண்டில் எழுதப்பட்ட மெய்க்கீர்த்தி கல்வெட்டில் கிராம சபைகள் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.

Murals :

இல்லை

Sculptures :

கருவறைக் கோட்டங்களின் வெளிப்புறச் சுவரில் தெற்கில் தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி) தனது பரிவாரங்களுடன் உள்ளார். மேற்கில் ஆனையுரித்த பிரான் (கஜசம்ஹாரமூர்த்தி), ஆடல்வல்லான், சண்டேசருக்கு அருள்பாலித்த சண்டேச அனுக்கிரக மூர்த்தி உள்ளார். வடக்கில் காலனை வதைத்த காலாரி (காலாந்த மூர்த்தி), இராவணனுக்கு அருள் செய்த இராவணானுக்கிரக மூர்த்தி, கங்கையை சடையில் தாங்கிய கங்காதர மூர்த்தி உள்ளார். அர்த்த மண்டபக் கோட்டங்களில் தெற்கில் விநாயகர் தனது பரிவாரங்களுடனும், வடக்கில் எருமைத்தலையனை வென்ற தேவி விஷ்ணு துர்க்கை அமைக்கப்பட்டுள்ளனர்.

Temple Structure :

முக்தீஸ்வரர் கோயில் மூன்று தளங்களை உடையது. நாகரபாணியில் அமைந்த விமானத்தைப் பெற்றுள்ளது. சதுரவடிவ கருவறை அதனைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் மற்றும் முன் நீண்டுள்ள முக மண்டபம் ஆகியவை உயரமான உபபீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளத்தில் உபானம், ஜகதி, குமுதம், பாதகண்டம், வேதிகை ஆகிய உறுப்புகள் இடம் பெற்றுள்ளன. பாதபந்த அதிட்டானமாக விளங்குகிறது. அதிட்டானத்தில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படவில்லை. கருவறைச் சுவர்ப் பகுதியில் சிவ வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. விமானத்தின் தளங்களில் சுதைச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. கோயிலின் கருவறைக்குக் செல்ல கல் படிக்கட்டுகள் உள்ளன. சிறிய நந்தி மண்டபம் உள்ளது.

Location :

அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில், காந்திசாலை, காஞ்சிபுரம்-631501

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 5.00-10.30 மாலை 4.00- 9.00 வரை

Way :

சென்னையிலிருந்து 65 கி.மீ. தொலைவிலுள்ள காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாகவும் செல்லலாம்.

Nearby Bus Station :

காஞ்சிபுரம்

Nearby Railway Station :

செங்கல்பட்டு

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

காஞ்சிபுரம் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:30 IST