Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு கீரக்களுர் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

திருஆதித்தேஸ்வரமுடையார் கோயில்

Place :

கீரக்களுர்

Taluk :

திருத்துறைப்பூண்டி

District :

திருவாரூர்

Religious Type :

சைவம்-சிவபெருமான்

Lord Name :

அகஸ்தீஸ்வரர், திருஆதித்தேஸ்வரமுடையார்

Procession On God :

Mother / Goddess Name :

சௌந்தரநாயகி

Temple Tree :

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

Festivals :

History :

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

மன்னார்குடி இராஜகோபாலசுவாமி கோயில், திருத்துறைப்பூண்டி சிவன் கோயில், திருவாரூர் சிவன் கோயில்

Summary :

இக்கோயில் தற்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள கீரக்களுரில் உள்ளது. இக்கோயிலில் உள்ள முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டொன்று இவ்வூரை இராசேந்திரசோழ வளநாட்டு ஆர்வலக்கூற்றத்து பிரம்மதேயம் குலதீபமங்கலத்து கீரைக்கள்ளுர் சபை என்று குறிப்பிடுகிறது. எனவே இவ்வூரில் ஒரு மகாசபை இயங்கி வந்ததை அறியமுடிகிறது. மேலும் இவ்வூர் ஒரு பிரம்மதேயமாக இருக்கவும் வாய்ப்புண்டு. ஆதித்தகரிகாலனின் 2,3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் பராந்தகன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். பிற்கால சோழர்களான முதலாம் இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. முற்காலச் சோழர்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் கோப்பரகேசரி, இராசகேசரிபன்மர், பாண்டியன் தலைக்கொண்ட கோப்பரகேசரி பன்மர் என்ற பட்டப் பெயர்கள் கொண்ட கல்வெட்டுகள் அமைந்துள்ளன. தேவக்கோட்டங்களில் முற்காலக் கலைப்பாணியில் அமைந்த சிற்பங்கள் அமைந்துள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது. கருவறையில் இறைவன் இலிங்க வடிவத்தில் உள்ளார். அம்மன் திருமுன் தற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

Period / Ruler :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன்

Inscription / Copper :

கீரக்களுர் அகஸ்தீஸ்வரர் கோயிலில் மொத்தம் 23 கல்வெட்டுகள் உள்ளன. இவையனைத்தும் சோழர்காலக் கல்வெட்டுகளாகும். ஆதித்த கரிகாலனின் 2,3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசர் பெயர் குறிப்பிடப்படாத கல்வெட்டொன்று திருவாதித்தேஸ்வரமுடைய நாயனாற்கு ஆனிமாதம் வரும் மூல நட்சத்திரத்தில் திருவிழா நடைபெற்றதையும் அதற்கான கொடைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. நந்தவனத்திற்கு நிலம் அளிக்கப்பட்ட கல்வெட்டும் இங்குள்ளது. முதலாம் இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு காணப்படுகின்றது. இறைவனின் அமுதுபடிக்காக வேதவனநாயக நம்பி என்பான் நிலம் அளித்ததை ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. நிலஅபகரிப்பும் அதனைப்பற்றிய விசாரணையும் கொண்ட ஒரு கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. வைத்தியக் காணி எனப்படும் மருத்துவத்திற்கு நிலம் அளிக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டில் உள்ளது.

Murals :

இல்லை

Sculptures :

இக்கோயிலைப் பொறுத்தவரை தேவக்கோட்டச் சிற்பங்களாக தெற்கில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் இலிங்கோத்பவரும், வடக்கில் நான்முகனும் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டபக் கோட்டத்தில் தெற்கில் கணபதியும், வடக்கில் மகிஷமர்த்தினியும் அமைந்துள்ளனர். பஞ்சரக் கோட்டச் சிற்பங்களாக பிச்சை ஏற்கும் பெருமானும் (பிட்சாடனர்), மாதொரு பாகனும் (அர்ததநாரீசுவரர்) உள்ளனர். நவக்கிரகங்களுக்கு தனி திருமுன் அமைந்துள்ளது. வாயிற்காவலர்கள் சிற்பங்கள் கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் அமைந்துள்ளன. மேலும் சௌந்தரநாயகி அம்மன், பைரவர், நந்தி, விநாயகர், சுப்ரமண்யர் ஆகிய சிற்பங்களும் தனிச் சிற்பங்களாக இக்கோயிலில் அமைந்துள்ளன.

Temple Structure :

முற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ள இக்கோயில் இறைவன் கருவறை, அர்த்தமண்டபம் என்ற புராதன அமைப்பையும், அம்மன் கருவறை, நவக்கிரக திருமுன், சண்டேசர் திருமுன், கன்னிமூலை கணபதி, சுப்ரமணியர் கருவறை என்ற பிற்கால சேர்க்கைகளையும் கொண்டதாக அமைந்துள்ளது. இருதளத்துடன் கூடிய திராவிட பாணியில் விமானம் கருவறையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. விமானம் தாங்குதளத்திலிருந்து பூமிதேசம் வரை கற்றளியாகவும் அதற்குமேல் அமைந்த தளப்பகுதிகள் பிற்காலத்திய சுதைப்பூச்சாகவும் அமைந்துள்ளன. தாங்குதள உறுப்புகளைத் தொடர்ந்து கருவறை விமானச் சுவரில் தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. தேவகோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. சுவர்களில் அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. இக்கோயிலின் அமைப்பை நோக்குங்கால் இறைவன் கருவறை ஒன்றே சோழர்கால படைப்பாக உள்ளது. மற்றவை பிற்காலத்திய கட்டுமானங்களாகும்.

Location :

கீரக்களுர்-614 715, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர்

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-8.30 வரை

Way :

திருவாரூர் மாவட்டத்திலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக கீரக்களுர் செல்லலாம். தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி வழியாக கீரக்களுர் செல்லலாம்.

Nearby Bus Station :

மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி

Nearby Railway Station :

தஞ்சாவூர்

Nearby Airport :

திருச்சி

Accommodation :

திருவாரூர், மன்னார்குடி விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:37 IST