Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

மாங்காடு காமாட்சி, தபசுக் காமாட்சி

Place :

மாங்காடு

Taluk :

காஞ்சிபுரம்

District :

காஞ்சிபுரம்

Religious Type :

சாக்தம்-அம்மன்

Lord Name :

காமாட்சியம்மன்

Procession On God :

காமாட்சியம்மன்

Mother / Goddess Name :

காமாட்சியம்மன்

Temple Tree :

மாமரம்

Tirukkulam / River :

Agamam :

Worship Time :

உஷைக்காலம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம்

Festivals :

சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம், ஆடி வெள்ளி, தைவெள்ளி

History :

கைலாயத்தில் ஒருசமயம் பார்வதி சிவனின் கண்களை விளையாட்டாக மூட, உலக இயக்கமே நின்று போனது. இதனால் கோபங்கொண்ட சிவபெருமான் பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கும்படி பார்வதியை சபித்தார். இதனால் தவறை உணர்ந்த தேவி மன்னிப்புக் கோரினாள். பூலோகத்தில் மாமரங்கள் நிறைந்த இத்தலத்தில் தன்னை தவமிருந்து வழிபட, தகுந்த காலத்தில் காட்சிதந்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அவ்வாறே அம்மனும் இத்தலத்தில் பஞ்சாக்னி எனப்படும் நான்கு அக்னி குண்டங்களை வளர்த்து ஐந்தாவது அக்னியாக சூரியனைக் கொண்டு அக்னியில் நடுவில் இடதுகால் கட்டைவிரலை மட்டும் ஊன்றி, வலதுகாலை மடக்கி தொடையின் மீது வைத்து கைகளை மேலுயர்த்தி வணங்கி கடுந்தவமியற்றினாள். இதனால் அருட்புரிந்த சிவபெருமான் காட்சி தந்து அம்மனை காஞ்சிபுரத்தில் மணந்து கொள்வதாகக் கூறி அங்கு வர பணித்தார். அன்னையும் அவ்வாறே காஞ்சிபுரம் சென்றார். அன்னை அக்னியில் கடுந்தவமியற்றி தலமாதலால் இப்பூமி கடும் வெப்பத்தால் தாக்குண்டு வறண்டது. இங்கு வந்த ஆதிசங்கரர் அர்த்தமேரு ஸ்ரீசக்ரத்தினை இங்கு நிறுவி மக்களின் துன்பத்தைத் தணித்தார் என தலவரலாறு கூறுகிறது. மேலும் காமாட்சி அம்மன் இங்குதான் முதலில் தவமியற்றியதால் இத்தலம் ஆதிகாமாட்சித் தலம் என அழைக்கப்படுகிறது.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

வெள்ளீசுவரர் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில்

Summary :

பண்டையக் காலத்தில் இத்தலம் முழுவதும் மாமரக்காடாகக் காட்சியளித்ததால் மாங்காடு என்று பெயர் பெற்றது. சூதவனம் என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயர் உண்டு. மாங்காடு காமாட்சியம்மன் கோயிலின் அருகே வெள்ளீசுவரர் கோயில் உள்ளது. மாங்காடு அம்மனுக்கே உரியது என்பதால் வெள்ளீசுவரர் கோயிலில் அம்பாள் கருவறை இல்லை. அம்பாள் பாதம் வடிவம் மட்டுமே உள்ளது. காஞ்சிக் காமாட்சியம்மனுக்கு முந்தையத் தலம் இது என்று கருதப்படுகிறது. இவ்விடத்தில் சிவனை நோக்கி அம்மன் பஞ்சாக்னியின் நடுவே ஒற்றைக்காலில் தவம் இருந்து சிவனைக் கண்டு வரம் பெற்று, பின்பு காஞ்சிபுரம் சென்று சிவனை மணப்பதாக தலவரலாறு கூறுகிறது. இக்கோயில் அருகே முன்பு சமணர் கோயில் ஒன்று இருந்துள்ளதற்கான கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஆனால் தற்போது சமணர் கோயில் அங்கு இல்லை. இக்கோயிலின் கருவறையில் அம்மன் திருவுருவத்திற்கு பதிலாக அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே வழிபடப்படுகிறது. ஆதிசங்கரர் இத்தலத்தில் இந்த ஸ்ரீசக்ரத்தை நிறுவி வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது. எனவே ஸ்ரீசக்ரத்திற்கு இத்தலத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. 43 திரிகோணங்கள் இச்சக்கரத்தில் உள்ளன. அஷ்டகந்தம் என்னும் எட்டு வகை மூலிகைகளால் ஆனது. எனவே அபிஷேகம் இல்லை. குங்குமார்ச்சனை மட்டுமே நடைபெறுகிறது. வெள்ளிக் கவசம் பூணப்பட்டிருக்கிறது. சிறப்பு நாட்களில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது. அர்த்தமேரு ஸ்ரீசக்கரம் ஆமைவடிவ உருவத்தின் மேல் 3 படிக்கட்டுகள் அமைத்து அதன்மேல் 16 தாமரை இதழ்கள் அமைத்து அதற்கு மேல் 8 தாமரை இதழ்கள் அமைத்து அதன்மேல் ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டுள்ளது. பஞ்ச உலோகத்தாலான தபசுக் காமாட்சி செப்புத்திருமேனி இக்கோயிலில் அமைந்துள்ளது. முகமண்டபங்களில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இத்தலத்தில் ஆறுவார வழிபாடு உள்ளது. ஆறுவாரம் தொடர்ந்து ஒரு கிழமை அம்மனை இங்கு வந்து வணங்கி வந்தால் நினைத்தகாரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

Period / Ruler :

கி.பி.14-15-ஆம் நூற்றாண்டு / விசயநகரர்

Inscription / Copper :

அம்மன் கருவறைக்கு வடபுற தாங்குதளத்தில் உள்ள ஒரு கல்வெட்டு ராயபிரதாப தேவராயர் என்ற விசயநகர மன்னனைக் குறிப்பிடுகிறது. இத்தலத்து ஆவுடைய நாச்சியாருக்கு கொடுக்கப்பட்ட நிலம் தானத்தைப் பற்றி அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அம்மன் கருவறைக்கு மேற்குப்புற தாங்குதளத்தில் உள்ள ராயபிரதாப தேவராயரின் மற்றொரு கல்வெட்டு, ஊர்மக்களுக்குக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைக் குறிக்கிறது. இந்த ஊர் நிலத்தை விற்பனைக்கோ, சீதனமாகவோ கொடுக்கக்கூடாது என்பதே அந்த ஒப்பந்தம். அம்மன் கருவறைக்கு தென்புற தாங்குதளத்தில் உள்ள கல்வெட்டொன்று, வீரபிரதாப தேவராய மகாராயா என்ற மன்னன் ஆட்சியாண்டில் மண்ணைப்பற்று ஆவுடைநாச்சியார் கோயிலுக்கு நிலம் விற்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. கோபுரத்தின் தாங்குதளத்தில் உள்ள கல்வெட்டொன்று, தளவாய் செஞ்சமநாயக்கனுக்கு செய்யப்பட்ட முதல் மரியாதையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும் அவர் அளித்த கொடைகள் அதில் உள்ளன. ஆனால் கல்வெட்டு சிதிலமடைந்துள்ளன. கோபுரத்தின் கீழே பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டு சோழர்காலத்தைச் சேர்ந்தது. பரகேசரிவர்மன் 15-வது ஆட்சியாண்டில் ஒரு நொந்தாவிளக்கு விளக்கெரிக்க கொடுக்கப்பட்ட தானம் பற்றிக் குறிப்பிடுகிறது. அடுத்து திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்ட சுந்தரபாண்டிய தேவனின் 5-வது ஆட்சியாண்டில் இவ்வூரில் உள்ள பள்ளிச்சந்தத்திற்கு கொடுக்கப்பட்ட நிலக்கொடையை பற்றி ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

Murals :

இல்லை

Sculptures :

கருவறையில் அர்த்தமேருஸ்ரீசக்ரம் அமைந்துள்ளது. அம்மன் செப்புத்திருமேனி ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் உள்ளது. கோயிலின் மூலவர் கருவறைக்கு இடதுபுறம் தபசுக் காமாட்சி செப்புத் திருமேனி அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் உள்ள தூண்களில் பல புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் சிவலிங்கம், ஆண், பெண் உருவங்கள், சூரியன், அனுமன், சங்கநிதி, பதுமநிதி, அடியவர், அமர்ந்த நிலை சிம்மம், யானையின் மத்தகத்தை தாக்கும் யாளி, பசுவும் கன்றும், பாம்பை வாயில் கவ்விய மயில், யானை, தாளம் கொட்டும் அடியவர், கணபதி, யாளி, தாமரை இதழ்கள் ஆகியன குறிப்பிடத்தக்கன. கருவறைத் திருச்சுற்றில் உற்சவமூர்த்தியாக காமாட்சியம்மன் செப்புத் திருமேனி காட்சியளிக்கிறது. மேலும் புடைப்புச் சிற்பமாக அமைந்த ஏழுகன்னியர் நிற்கும் பலகைக்கல் ஆகியன இங்கு சிற்பங்களாகக் காணப்படுகின்றன. சாமுண்டேஸ்வரி சிற்பமும், கணபதி சிற்பமும் நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Temple Structure :

கருவறை விமானம் இரு தளங்களை உடையது. தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், அதற்கு மேல் உள்ள பகுதி சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கியதாக வாயில் இருப்பினும் அது மூடப்பட்டு தற்போது தென்வாயிலே பயன்படுத்தப்படுகிறது. தாங்குதளத்தின் உறுப்புகளான ஜகதி, குமுதத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்கள் அமைந்த கோட்டங்கள் உள்ளன. கோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் அமைக்கப்படவில்லை. அம்மன் கருவறை சதுரவடிவிலானது. அதனை அடுத்து சிறிய அர்த்தமண்டபம் காணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து உள்ள மகாமண்டபத்தில் தெற்கே தபசுக் காமாட்சி செப்புத் திருமேனிக்கான தனிக் கருவறை அமைந்துள்ளது. மேலும் இம்மண்டபத்தில் உள்ள தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அடுத்து முகமண்டபத்தில் சூரியன் சிற்பம் அமைந்துள்ளது. முதற்சுற்றுப்பிரகாரம் மிகவும் பரந்தது. கிழக்குப்புறமும், தென்புறமும் நுழைவாயில் உள்ளது. தெற்கு நுழைவாயிலில் கோபுரம் அமைந்துள்ளது. கோபுரத்தினை தொடர்ந்து உள்ளே இடதுபுறம் கணபதிக்கான சிறுகோயில் அமைந்துள்ளது. கிழக்குப்பக்கத்தில் சிம்மவாகனம் காட்டப்பட்டுள்ளது.

Location :

அருள்மிகு மாங்காடு காமாட்சியம்மன் கோயில், மாங்காடு-602 101, காஞ்சிபுரம்

Phone :

044-26272053, 26495883

Website :

Email :

Temple Opening Time :

காலை6.00-01.30.00 முதல் மாலை 3.00-9.30 வரை

Way :

சென்னை கோயம்பேட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மாங்காடு அமைந்துள்ளது.

Nearby Bus Station :

குன்றத்தூர், குமணன் சாவடி, கோயம்பேடு

Nearby Railway Station :

தாம்பரம், சென்னை

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

சென்னை மாநகர விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:46 IST