Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு திருமுக்கூடல் கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

கரியமாணிக்க வெங்கடேசப் பெருமாள், அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

Place :

பழைய சீவரம்

Taluk :

காஞ்சிபுரம்

District :

காஞ்சிபுரம்

Religious Type :

வைணவம்-பெருமாள்

Lord Name :

அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

Procession On God :

Mother / Goddess Name :

அலர்மேல் மங்கை

Temple Tree :

தேவதாரு, வன்னி, சந்தனம்

Tirukkulam / River :

பாலாறு, வேகவதி, செய்யாறு

Agamam :

Worship Time :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

Festivals :

History :

தொண்டைமண்டலத்தை ஆண்டு வந்த தொண்டைமான் ராஜா சக்கரவர்த்தி என்ற அரசன் ஒரு முறை திருமலை செல்ல விழைந்தான். அப்போது அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அண்டைநாட்டு அரசன் அவன் நாட்டின் மீது போர் தொடுக்கப் போவதாகவும் எனவே திருப்பதி வர இது சமயமில்லை எனவும், போரில் தொண்டைமான் தன் மகனோடு கலந்து கொண்டு நாட்டைக் காக்கவேண்டுமென்றும் அக்குரல் கூறியது. அதைக்கேட்ட தொண்டைமான் இறைவன் தனக்கு போரில் உதவும் படி வேண்டினான். அவ்வாறே இறைவனும் திருமலையிலிருந்து தன்னுடைய சங்கினையும் சக்கரத்தினையும் தொண்டைமானுக்குக் கொடுத்து அவன் போரில் வெற்றி பெற உதவினார். மேலும் திருமலையில் சங்கு, சக்கரத்தினைப் பொருத்துமாறு இராமானுஜருக்குப் பணித்தார். இராமானுஜரும் அவ்வாறே செய்தார். தொண்டைமான் முக்தி பெற வேண்டி திருமலை செல்ல முயன்ற போது அவனை திருமுக்கூடலில் தன்னை தரிசிக்குமாறு பெருமாள் பணித்தார். மன்னனும் அவ்வாறே அங்கு சென்று பெருமாளை வணங்கி முக்தி பேறு பெற்றான்.

Protecting Company :

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.

Nearest Temples Arc :

ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயில்

Summary :

பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் திருமுக்கூடல் எனப் பெயர் பெற்றது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கோயில் இறைவன் திருமலை பெருமாளுக்கு இணையானவராகக் கருதப்படுகிறார். சோழர்கள் காலத்தில் இத்தலத்தில் வைத்திய சாலை ஒன்று இருந்துள்ளது. ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் இந்த வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் பற்றிய விவரங்கள் குறித்த கல்வெட்டு ஒன்று முகமண்டபத்தின் சுவரில் உள்ளது. விசயநகர நாயக்கர் காலத்தில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. கொலுமண்டபமும், உற்சவ மண்டபமும் விசயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாகும். ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்தலம் திரிவேணி சங்கமத்தின் கரையில் அமைந்த தலத்திற்கு இணையானது. ப்ருகு மகரிஷியும், மார்க்கண்டேய மகரிஷியும் இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்துள்ளனர்.

Period / Ruler :

கி.பி.9-ஆம் நூற்றாண்டு

Inscription / Copper :

திருமுக்கூடல் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து களத்தூர் கோட்டத்து மதுராந்த சதுர்வேதி மங்கலத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திர சோழன் ஆகியோரது கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. வீரராஜேந்திரனது ஒரு கல்வெட்டு இங்கு வேதபாடசாலை ஒன்று செயல்பட்டு வந்ததாகவும், அங்கு பல்வேறு மாணவர்கள் பயின்றதாகவும், ரிக், யசுர் உட்பட எட்டு பாடங்கள் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டதாகவும், மேலும் இக்கோயிலில் உள்ள ஜனநாத மண்டபத்தில் இந்த வேத பாடசாலை நடைபெற்று வந்ததாகவும் கூறுகின்றது. இந்த வேத பாடசாலைக் கல்லூரியோடு இணைந்ததாக ஒரு மருத்துவசாலையும் செயல்பட்டு வந்தது. இதற்கு ஆதுல சாலை என்று பெயர். இந்த மருத்துவ சாலையில் 20-க்கு மேற்பட்ட மருந்துகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மூலிகைககளை ஒருவர் திரட்டுவதாகவும், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. மேலும் கோதண்டராமன் அசுவத்தாமன் பட்டன் என்னும் வைத்தியர் பெயரையும் குறிப்பிடுகிறது. செவிலியர் நோயாளிகளை கவனித்ததாகவும், பல மூலிகைகளை சேகரித்ததாகவும் அந்த மருத்துவக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

Murals :

இல்லை

Sculptures :

கருவறையில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். கருடன், அனுமன், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோரின் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. முகமண்டபத்தில் பெரிய துவாரபாலகர்கள் சிற்பங்கள் இருபுறமும் நின்ற நிலையில் உள்ளன. கொடிமரத்தின் அருகில உள்ள சிறிய மண்டபத்தில் விசயநகர-நாயக்கர் காலத் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் அனுமன், வாழ்வியல் சிற்பங்கள், பறவை, விலங்கு ஆகியவற்றின் சிற்பங்கள் முக்கியமானவை. மேலும் கொலு மண்டபத்தில் உள்ள தூண்களில் திருமாலின் அவதாரங்களும், அனுமன், கருடன், சீதையைக் காணும் அனுமன், இராமஇலக்குவனோடு கும்பிடும் அனுமன், மத்தளம் இசைக்கும் திருமால், இராமானுஜர், ஆடல் மகள், யானை, வாழ்வியல் காட்சி ஆகியவை உள்ளன.

Temple Structure :

இக்கோயில் கருவறை செவ்வக வடிவமுடையது. கூடுவண்டி போன்ற அமைப்புடையது. கருவறையில் பெருமாள் நின்ற நிலையில் உள்ளார். சிறிய அர்த்த மண்டபம் உள்ளது. கோட்டங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை சோழர்கால் தமிழ்க் கல்வெட்டுகளாகும். கருவறை விமானம் தாங்குதளத்திலிருந்து கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், விமானத்தின் தளப்பகுதி சுதையாகவும் கட்டப்பட்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் சோழர்கால உருளைத் தூண்களுடன் அமைந்த திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. சோழர்கால உருளைத் தூண்கள் வெட்டுப்போதிகைப் பெற்றுள்ளன. திருச்சுற்றினை அடுத்துள்ள சிறிய முன்பகுதியில் பன்னிரு ஆழ்வார்களின் சிற்பங்களும், பெரிய திருவடியான கருடனும், சிறிய திருவடியான அனுமனும் சிற்பங்களாக அமைந்துள்ளனர். முகமண்டபத்தில் நின்றநிலையில் இருபுறமும் சோழர்கால துவார பாலகர்கள் உள்ளனர். முகமண்டப கிழக்குப்புறச் சுவரில் கல்வெட்டு காணப்படுகின்றது. அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீவரதர், அனுமன் ஆகியோருக்கு தனி சிறு கோயில்கள் உள்ளன. அவை யாவும் கற்றளிகளாகவே உள்ளன. இவை பிற்காலத்தில் அதாவது விசயநகரர் காலத்தில் கட்டப்பட்டவையாக உள்ளன. வளாகத்தில் உள்ள இரு மண்டபங்களில் உள்ள தூண்களில புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இம்மண்டபங்களும் விசயநகர கலைப்பாணியைச் சேர்ந்தவை.

Location :

அருள்மிகு கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் கோயில், பழைய சீவரம்-631-606, காஞ்சிபுரம்

Phone :

Website :

Email :

Temple Opening Time :

காலை 7.00-9.00 முதல் மாலை 5.00-7.00 வரை

Way :

சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பழைய சீவரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

Nearby Bus Station :

செங்கல்பட்டு, பழைய சீவரம்

Nearby Railway Station :

செங்கல்பட்டு

Nearby Airport :

சென்னை மீனம்பாக்கம்

Accommodation :

காஞ்சிபுரம் விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:48 IST